விடை தேடும் வினாக்கள் – கிறிஸ்து நமக்கு யார்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்புள்ளங்களே இறைமகன் இயேசுவைப்பற்றிய நம் எண்ணங்கள் என்ன? நம் வழியாக ஏனைய மத மக்கள் இயேசுவைப் பற்றி என்ன எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்துத்தான் இன்று நாம் நோக்க உள்ளோம். கிறிஸ்தவத்தை அல்லது கிறிஸ்துவைக் குறித்து அறியவரும் பிற மதத்தினர் தாங்கள் அறிந்தவைகளை உறுதிப்படுத்திக் கொள்ள கிறிஸ்தவர்களின் வாழ்வைப் பார்க்கிறார்கள். மக்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது முதல் கேள்வி. அடுத்து, அவர்கள் அப்படி நினைப்பதற்கு காரணமான நாம் இயேசுவைப்பற்றி என்ன எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம்? என்பது இரண்டாம் கேள்வி. சில உண்மைகளை ஆராய்வதற்கு முன்னால் மத்தேயு நற்செய்தி 16ஆம் பிரிவின் ஒரு பகுதியை முதலில் நோக்குவோம்.
இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்? (மத் 16:13)
அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.
இரண்டு கேள்விகளுள் முதல் கேள்விக்கு, இயேசுவுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த விடை கிடைத்து விட்டது. இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கிய இயேசு, அடுத்து, தன்னோடு இருந்த சீடர்கள், தன்னைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய விரும்புகிறார். மூன்று ஆண்டுகளாகத் தன்னோடு இருந்து, உண்டு, உறங்கி, சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து, தான் செய்த வல்ல செயல்களையெல்லாம் கண்ணாரக் கண்ட தன் சீடர்களை நோக்கி, இயேசு இந்த கேள்வியை அவர்களின் இதயங்களுக்கு விடுக்கிறார். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்? இதுவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர் இயேசுவில் விசுவாசமிழந்தனர். உற்றார், உறவினர் அவர்மேல் இடறல்பட்டனர். சீடர் பலர் இயேசு தன் உடலை உணவாகத் தருவேன் என்றவுடனும், நெருக்கடி நிலை ஏற்பட்டவுடனும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றனர். இந்த சூழலில், தந்தையாகிய இறைவன் இவ்வுலகிற்கு இயேசுவை எதற்காக அனுப்பினார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனரா, அந்தப் பணியை இந்தச் சீடர்கள் தொடர்ந்து செய்வார்களா? தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் தன்னைப் புரிந்துகொண்டார்களா என்பதை அறிய, ஒரு நேர்முகத் தேர்வை இங்கு நடத்துகிறார் இயேசு.
மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?
தன் பணிகளை மதிப்பீடுச் செய்யும் விதமாக இயேசுவின் இதயம் எழுப்பிய முதல் கேள்வியான, மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள். என்பது குறித்து முதலில் காண்போம்.
இயேசுவை மக்கள் திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா மற்றும் வேறு இறைவாக்கினருள் ஒருவர் என காண்கின்றனர் என்கிறார்கள் சீடர்கள். திருமுழுக்கு யோவான் சிறிது நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருந்தார், இருப்பினும் அவர் உண்மையாக இறக்கவில்லை, அவர் வருவார் என்ற நம்பிக்கை பலரிடம் நிலவியிருந்தது. இதைத்தான் ஏரோதும் வெளிப்படுத்துவதை மத்தேயு நற்செய்தி 14ஆம் பிரிவில் காண்கிறோம். அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான் (மத் 14:1,2) என வாசிக்கின்றோம். எலியா இறைவாக்கினர் மெசியாவின் வருகைக்கு முன்னர் வருவார் என்ற நம்பிக்கையும் இஸ்ராயேல் மக்களிடையே ஆழமாக நிலவியிருந்தது என்பதை மலாக்கி நூல் 4ஆம் பிரிவில் காண்கிறோம். இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன் (மலாக்கி 4:5) என கூறப்பட்டுள்ளது. இறைவாக்கினர் எரேமியா, பபிலோனியரிடம் எருசலேம் வீழ்ந்தபோது, எகிப்திற்கு தப்பி போயிருந்தார், அங்கே அவருக்கு என்ன நடந்தது என்று இஸ்ராயேலருக்கு முழுமையாக தெரியாதிருந்தது. எனவே அவரும் மீண்டும் வருவார் என இவர்கள் நம்பியிருந்தனர். இறுதியாக, சிலர் தொட்டும் தொடாமல் 'இறைவாக்கினருள் ஒருவர்' எனச் சொல்வதாக சீடர்கள் தெரிவிக்கின்றனர். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள் (யோவா 6:14) என யோவான் நற்செய்தி 6ஆம் பிரிவில் காண்கிறோம். இப்படி மக்கள் கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இயேசு என்பவர் ஏற்கனவே இருந்த ஒரு நபரின் தொடர்ச்சி என்பதுதான். அதாவது, ஏற்கனவே வந்தவர்களில் இயேசுவைக் காண்கின்றனர் மக்கள். இது மட்டுமல்ல, மத்தேயு நற்செய்தி பிரிவு 12ன் படி, திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர் (மத் 12:23) என்பதையும் காண்கிறோம்.
இயேசுவைப் புரிந்துகொண்டதில் இருவேறுப் பிரிவு மக்கள்.
இயேசுவைப் புரிந்துகொண்டதில் இருவேறுப் பிரிவு மக்களை நாம் காண்கிறோம். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்(லூக் 2:11) என வானதூதர்கள் கூறியதை நம்பி, மெசியாவைக் காணச் சென்ற இடையர்கள், யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என தேடிவந்த மூன்று ஞானிகள், இயேசு பாலனில் மீட்பரை எருசலேம் கோவிலில் கண்டுகொண்ட சிமியோனும் அன்னாவும் (லூக் 2:38), இயேசுவோடு உரையாடியபோதே அவரைக் கண்டுகொண்ட சமாரியப் பெண், தொட்டால் போதும் குணமடைவேன் என்று நம்பிய நோயாளிப் பெண், ஒருவார்த்தை சொல்லும் குணமடைவான் என்ற நூற்றுவர் படைத்தலைவன், இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் (யோவா 11:27) எனற மார்த்தா என, இயேசுவை மெசியாவாகக் கண்டு கொண்ட பலரை நற்செய்தியில் பார்க்கிறோம். மறுபுறமோ, லூக்கா நற்செய்தியின் படி, இயேசு தன் பணிவாழ்வை தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் உள்ள ஒரு தொழுகைக் கூடத்தில் தொடங்கியபோது, அவரின் அருள்மொழிகளைக் கேட்டு அங்குக் குழுமியிருந்த மக்கள் 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' என கேள்வி எழுப்புகின்றனர். மத்தேயு நற்செய்தியிலோ, இவர் தச்சர் மற்றும் மரியாவின் மகன் அல்லவா, இவரின் சகோதரர்கள் நம்மிடம் இல்லையா என்ற கேள்வியும், மாற்கு நற்செய்தியில் இதையும் சேர்த்துக் கொண்டு, இன்னொரு கேள்வியாக, இவரின் சகோதரிகளும் நம்மிடம் இல்லையா என மக்கள் வியப்புடன் கேட்பதைப் பார்க்கிறோம். ஒரு பக்கம் அவரைக் கண்டுகொண்ட மக்கள், மறுபுறம் கண்டும், அடையாளம் காணாத மக்கள். இதற்கு காரணம், ஆண்டாண்டு காலமாக மெசியாவின் வருகை குறித்து யூத மக்களிடமும் அவர்களின் தலைவர்களிடமும் இருந்த எதிர்பார்ப்பு. முதலாவதாக, நமது ஆதிப்பெற்றோர் பாவத்தில் வீழ்ந்தபோது அவர்களுக்கு, அன்னை மரியா வழியாக மெசியா என்னும் மீட்பரின் வருகை குறித்து இறைத்தந்தையால் அறிவிக்கப்பட்டது (தொநூ 3:14-19). இரண்டாவதாக, பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டு அதனைத் தீக்கிரையாக்கி அதன் மக்களைத் தன் நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு சென்றான். அப்படி கொண்டுசெல்லப்பட்ட மக்கள் துயருற்று அழுத வேளையில் அவர்களுக்கு மெசியாவின் வருகை அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. “சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்” (எசா 59:20) என்று நாம் வாசிக்கின்றோம். இங்கு மக்கள் மெசியாவைக் குறித்து புரிந்து கொண்டதில்தான் பெரிய வேறுபாடு இருக்கிறது. மெசியா குறித்த அவர்களின் எதிர்பார்ப்புதான் பிரச்சனை. ‘வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது’ (தானி 7:13-14), என தானியேல் நூல் கூறுவதை வைத்துப் பார்த்த மக்கள், தங்களுக்கு விடுதலையளிக்கும் அரசரை எதிர்பார்த்திருக்க இங்கு வந்ததோ, துன்புறும் மெசியா, மாட்டுத் தொழுவத்தின் மன்னர். இதனால்தான் இயேசுவே தன்னைப்பற்றி தன் பொது வாழ்வின் துவக்கத்திலேயே எடுத்துரைத்திருந்தும் மக்களால் நம்பமுடியவில்லை, ஏற்க முடியவில்லை. இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று இறைவாக்கினர் எசாயாவின் சுருளின் ஒரு பகுதியை வாசிக்க எழுகிறார். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” என வாசித்த இயேசு இறுதியாக மக்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” (லூக் 4:18-21) என்கிறார். அப்போதும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதே மக்கள் பிறிதொரு சமயத்தில் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள் (யோவா 10:24-26) என்று பதிலுரைப்பதையும் காண்கிறோம்.
இதெல்லாம் என்றோ நடந்தவை என்று நாம் வாழாவிருக்க முடியாது. இன்றும் பெரும்பான்மையான மக்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொண்டதாக நம்புபவர்கள்கூட, புரிந்துகொண்டதை செயலில் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் உண்மை.
பிறமதத்தினரும் கிறிஸ்தவ சபைகளும்
முதலில் பிறமதத்தினரைப் பார்ப்போம். இந்துக்களில் ஒரு சிலர் இயேசுவை பல ஆயிரம் கடவுள்களில் ஒருவராகப் பார்க்கின்றனர். இஸ்லாமியரோ, இயேசுவை இறுதி இறைத்தூதருக்கு முந்தையவராக ஏற்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் இயேசு ஒரு சாதாரண இறைவாக்கினர் மட்டுமே, கடவுளோ, கடவுளின் மகனோ அல்ல. புத்தமதத்தைப் பொறுத்தவரையில் இயேசு, ஓர் அறிவொளிபெற்ற ஞானியே தவிர தெய்வம் அல்ல. ஜெகோவாவின் சாட்சிகள் என்பவர்கள் அவரை மிக்கேல் அதிதூதராகக் காண்கின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்துவைத்திருக்கின்றனர்.
இப்போது, கிறிஸ்தவ சபைகளைப் பார்ப்போம். கத்தோலிக்கத் திருஅவையில் அருள்பணியாளராக இருந்து பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற மார்ட்டின் லூதர் 1517ஆம் ஆண்டு லூத்தரன் சபையை நிறுவினார். மணமுறிவுக்கும், மறுமணம் செய்துகொள்வதற்கும் அப்போதைய திருத்தந்தை அனுமதி தராத காரணத்தால், 1534ஆம் ஆண்டு அரசர் எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் சபையைத் தொடங்கினார். ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜான் நாக்ஸ் என்பவர் 1560 ஆம் ஆண்டு பிரிஸ்பிடேரியன் சபையை நிறுவினார். மெதடிஸ்ட் சபையை ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லி என்பவர்கள் 1744 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொடங்குகிறார்கள். ஆம்ஸ்டர்டாம் நகரில் ஜான் ஸ்மித் என்பவர் 1605 ஆம் ஆண்டு பாப்டிஸ்டு சபையை ஏற்படுத்தினார். இது போன்ற பற்பல சபைகளை சார்ந்திருப்பவர்கள் பலர். நாம் இயேசுவை சரியாக, அதாவது இயேசு எதிர்பார்த்ததுபோல் புரிந்துகொண்டால், ஏன் இத்தனைப் பிரிவுகள்?. பிளவுண்டிருக்கும் கிறிஸ்தவத்தைப் பார்க்கும் மற்ற மக்கள் இயேசு யார் என்று எண்ணுவார்கள்?. ஏனெனில் நாம் இயேசுவின் பெயரால் பிரிந்து நிற்கின்றோம். இந்த பின்னணிக்கு இயைந்தவகையில் திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய மடலில் பதில் தருகிறார். நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள் (2 கொரி 13:5) என உரைக்கிறார்.
நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?
இயேசு தன்னுடைய சீடர்களிடம் கேட்கின்ற இரண்டாவது கேள்வி, “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்பதாகும். இயேசு முதல் கேள்வியோடு நிறுத்தியிருக்கலாம். காரணம் மக்கள் எண்ண ஓட்டத்தையே சீடர்களும் வெளிப்படுத்தினார்கள்; ஆனால், அவர் தன்னோடு இருந்தவர்கள் தன்னைக் குறித்து அறியாமல் இருந்தால், அது ஆபத்து என்பதால், அவர்களிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்கின்றார்.
"மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்ட முதல் கேள்விக்கு சீடர்கள் அளித்த மறுமொழி, இயேசுவின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர்களுடைய கூற்றுக்கு இயேசு பதில் கூறவுமில்லை. "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்ற அவருடைய கேள்விக்கான பதிலே இயேசுவின் இலக்காக இருந்தது. "நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பேதுரு உரைத்ததன் பின்னரே, இயேசு தமது திருஅவையைக் குறித்து பேச ஆரம்பிக்கிறார். ஏன் இந்த கேள்வியை சீடர்களிடம் கேட்கிறார்? பதில் இந்நிகழ்வின் தொடர்ச்சியில் வருகிறது. இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் உள்ளதை (மத் 16:21) சீடர்களுக்கு எடுத்துரைக்கும் முன்னர் அத்தகைய ஒரு நிலைக்கு அவர்கள் தயாராக இருப்பதற்கு உதவும்வகையில் இந்த கேள்வியைக் கேட்கிறார். தான் ஒரு துன்புறும் மெசியா என்பதை இங்கு எடுத்துரைக்கும் முன் இந்த கேள்வி வருகிறது. தான் அரசியல் மெசியா கிடையாது; மாறாக, துன்புறும் மெசியா, மேலும், பகைவர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுத் தரும் மெசியா கிடையாது; மாறாக, பாவத்திலிருந்து மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் மெசியா என்பதை சீடர்கள் புரிந்துள்ளார்களா என்பதை சீடர்களின் வாயிலிருந்தே இயேசு கேட்க ஆவல் கொள்கிறார்.
ஏற்கனவே சீடர்களின் வாழ்வில் நாம் பார்த்தோமானால், ஒரே ஒரு நாள் இயேசுவோடு தங்கியிருந்தவுடனேயே இயேசுவை அடையாளம் கண்டுகொள்கிறார் அந்திரேயா. தம் சகோதரரிடம் சென்று, “மெசியாவைக் கண்டோம்” (யோவா 1:41) என்கிறார். மேலும், பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” (யோவா 1:45) எனக் கூறுகிறார். நத்தனியேல் இயேசுவைப் பார்க்கும்போது, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்கிறார்(யோவா 1:49). இவற்றையெல்லாம் இயேசு அறியாமலா இருந்திருப்பார்?. இருப்பினும் நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்கிறார் என்றால், அதற்கென்று ஒரு காரணம் இருக்கிறது. நம் எண்ணங்களைத் தூய்மைப்படுத்துவதற்கான கேள்வி இது.
நமக்கு இயேசு யார்? கிறிஸ்துவின் இறைத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு அவருடைய பணிகளை மையப்படுத்தி அவரை ஒரு புரட்சியாளராக நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? மற்றவர்கள் என்னவேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். நமக்கு இயேசு யார்? நாம் உண்மையிலேயே இயேசுவை விசுவசித்தால் அவரை வாழ்வு நடவடிக்கைகளின் வழி அறிவிக்கிறோமா? வலதுபுறத்துக் கள்வனிலும், மகதலா மரியாவிலும், சக்கேயுவிலும் காணப்பட்ட மாற்றத்தை நம் வாழ்விலும் உணர்கிறோமா? இல்லையெனில், ஊருக்குத் தெரியாமல் நமக்குள் ஒளித்து வைத்திருக்கும் இயேசுவை என்று வெளிக்கொணரப் போகிறோம்?. அன்று மகதலா மரியா அழுதுகொண்டு, "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர், அவரை எங்கு வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" (யோவா 20:13) என்று கேட்டதைப் போல் நாம் ஒவ்வொருவரும் ஒருவர் ஒருவரைப் பார்த்து கேட்கும் நிலை வேண்டாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்