தடம் தந்த தகைமை – இஸ்ரயேலின் அரசனான அகசியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
யோசபாத்து தன் மூதாதையருடன் துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான். யூதாவின் அரசன் யோசபாத்தின் பதினேழாம் ஆட்சி ஆண்டில் ஆகாபின் மகன் அகசியா இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலும் தம் தாயின் வழியிலும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் வழியிலும் நடந்தான். மேலும், அவன் பாகாலையும் வணங்கி வழிபட்டு எல்லாவற்றிலும் தன் தந்தை வழிநின்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே, அவன் தூதரிடம், “நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, ‘இக்காயம் எனக்குக் குணமாகுமா?’ என்று கேட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான். ஆனால், ஆண்டவரின் தூதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், “நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் தூதரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்” என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்