தடம் தந்த தகைமை - பிறர்நல அக்கறையின் அடையாளம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
“திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்கிறார் தாய் மரியா.
“அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என பதில் தருகிறார் இயேசு.
எவருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன? என்ற சுயநலக் கலாச்சாரச் சூழலில், விருந்தினராய் சென்ற மரியாவின் வேண்டுகோள் அவரது மனநிலையின் வெளிப்பாடு, பிறர்நல அக்கறையின் அடையாளம். ஏழைத் திருமண வீட்டார் மற்றும் இறுதியாக வந்த ஏழையர் மட்டில் அவர் கொண்ட நேய நிலைப்பாடு. இங்கே இரசம் தீர்ந்துவிட்டதென்ற மரியாவின் அக்கறையும் இதுவரை வெளிப்படையாக அருஞ்செயல் ஏதும் அரங்கேற்றாத
இயேசுவின் மீதான நம்பிக்கையும் ஒருசேர வெளிப்படுகின்றன. இயேசுவின் பதில் மரியாவின் வேண்டுகோளைப் புறக்கணிப்பதுபோல மேலோட்டமாகத் தோன்றலாம். ஆனால் அதுவல்ல உண்மை. தாய் தன்னில் கொண்டிருக்கும் நம்பிக்கையை உரசிப் பார்க்கும் தருணமாக்கினார் இயேசு. அதோடு எல்லா வல்ல செயல்களும் தந்தைக் கடவுளே தம் வழியாக நிறைவேற்றுவதாக உலகு உணர வேண்டும் என்ற உள்ளுணர்வு
இயேசுவுக்குள் வேரூன்றி இருந்தது. அச்செயலின் வழியாகத் தந்தைதான் மாட்சி பெற வேண்டும் என்பதே அவரது அவா. அந்தத் தாகமே 'எனது நேரம் இன்னும் வரவில்லையே!” என்ற எதிர் பதில். ஏழையரின் மகிழ்வே கடவுளின் மாட்சி.
இறைவா! எங்கும் எப்போதும் ஏழையர்க்கு முன்னுரிமை வழங்கும் நன்மனம் தாரும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்