ஹெய்டி பகுதியில் மக்கள் ஹெய்டி பகுதியில் மக்கள் 

ஹெய்டியில் ஏழு துறவறத்தார் கடத்தப்பட்டுள்ளனர்

அரசியலில் நிலைத்த தன்மையின்மை, வலுவின்மை போன்றவற்றால் ஹெய்டியின் தலைநகரில் அதிகரிக்கும் ஆயுத கும்பல்களை, காவல்துறையால் எதிர்க்க முடியாத சூழல் உயர்ந்து வருகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஹெய்டியில் உள்ள திரு இருதய சபை அருள்சகோதரர்கள் ஆறுபேர் மற்றும் போர்த்தோ பிரின்சில் திருப்பலி நிறைவேற்றி திரும்பிய அருள்பணியாளர் என  மொத்தம் 7 பேர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை காலை ஹெய்டியில் உள்ள திருஇதய சபை சகோதரர்கள் ஆறு பேர் போர்த்தோ பிரின்ஸ் பகுதியில் உள்ள École Jean XXIII என்னும் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், தலைநகரில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றிய அருள்பணியாளர் இல்லம் திரும்பும் வழியிலும் கடத்தல் கும்பல்களால் கடத்தப்பட்டுள்ளனர்.   

கரீபியன் நாட்டில் தலத்திருஅவைப் பிரதிநிதிகளுக்கு எதிரான கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பிற்காக மக்கள் அனைவரும் செபிக்கவேண்டும் என்றும் அப்பகுதியில் உள்ள ஆண் பெண் துறவறத்தார் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், போர்த்தோ பிரின்ஸ் பகுதியில் உள்ள École Jean XXIII பள்ளியானது மிகுந்த ஆபத்தில் உள்ளது என்றும் அவ்வறிக்கையில் அடிக்குறிப்பிட்டுக் கூறியுள்ளனர் துறவறத்தார்.

Anse-à-Veau-Miragoâne இன் ஆயரும் மற்றும் ஹெய்ட்டி ஆயர்கள் பேரவையின் துணைத் தலைவருமான Pierre-André Dumas அவர்கள், பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை அவர் தங்கியிருந்த வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்து வரும் நிலையில், ஹெய்டியில் மேலும் 7 பேர் கடத்தப்பட்டிருப்பது வருத்தத்திற்கு உரியதாக உள்ளது.

காயமுற்ற ஆயர் Pierre-André Dumas அவர்கள் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாகவும், நாளை மியாமியில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உள்ளாதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியலில் நிலைத்த தன்மையின்மை, வலுவின்மை போன்றவற்றால் ஹெய்டியின் தலைநகரில் அதிகரிக்கும் ஆயுத கும்பல்களை, காவல்துறையால் எதிர்க்க முடியாத சூழல் அதிகரித்து வருகின்றது இதனால் கரீபியன் நாட்டில் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்றும், அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தார் கடத்தல்குழுக்களால் கடத்தப்பட்டு பணம் கொடுத்து மீட்கப்படுகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் ஹெய்டியில் கடத்தப்பட்ட ஆறு அருள்சகோதரிகளை விடுவிக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஞாயிறு மூவேளை செப உரை விண்ணப்பத்தின்போது எடுத்துரைத்தார். சமூக நல்லிணக்கத்திற்கான மக்கள் அனைவரும் செபிக்க வேண்டும் என்றும், அன்பான மக்களுக்குத் துன்பங்களை வருவிக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2024, 14:59