இந்திய கிறிஸ்தவர்களின் அமைதி பேரணி இந்திய கிறிஸ்தவர்களின் அமைதி பேரணி  (ANSA)

இந்திய இயேசு சபையினர் நிறுவனத்திற்கு உதவிபெறும் அனுமதி மறுப்பு

வெளிநாட்டு உதவி பெறுவதற்கான இயேசு சபை நிறுவனத்தின் அனுமதியை மறுத்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம், குற்றம் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சுதந்திர இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கும் விதமாக 1951ஆம் ஆண்டு இயேசுசபையினரால் துவக்கப்பட்ட ISI நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதற்கான அனுமதியை இந்திய அரசு இரத்து செய்துள்ளது.

எந்தவித மதமாற்ற நிகழ்ச்சிகளிலும் இதுவரை ஈடுபடாத இந்த இயேசு சபையினரின்  ஆய்வு நிறுவனத்திற்கு, இந்துத்வா கொள்கைகளை விமர்சித்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அரசின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்த ISI ஆய்வு நிறுவனம், தற்போது அனுமதி விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டி வெளிநாட்டு உதவியைப் பெறுவதற்கான அனுமதியை இரத்து செய்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம், விதிமீறல் குற்றம் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உதவிகளைப் பெறும் அரசுசாரா அமைப்புக்கள் அத்தொகையை சரியான முறையில் பயன்படுத்துகின்றனவா என்பதை கண்காணிக்க உருவாக்கப்பட்ட FCRA  என்ற சட்டத்தின் கீழ் இயேசு சபையினரின் இந்த ISI ஆய்வு நிறுவனத்தின் வெளிநாட்டு உதவி பெறும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல அரசு சாரா அமைப்புக்கள், குறிப்பாக, Oxfam India, அன்னை தெரேசாவின் அருள்கன்னியரின் சபை உட்பட பல உதவி அமைப்புக்கள் இவ்வனுமதி மறுப்பைச் சந்தித்துள்ளன.

1951ஆம் ஆண்டு இயேசு சபை அருள்பணி ஜெரோம் டி சூசா அவர்களால் துவக்கப்பட்ட இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவராக தற்போது இயேசு சபை அருள்பணி Sebasti L. Raj அவர்கள் உள்ளார்.  

பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்திய அரசால் கைது செய்யப்பட்டு தண்டனைக் காலத்தின்போதே 84ஆம் வயதில் உயிரிழந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களும் இதே ISI நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2024, 15:00