சகோதரத்துவத்தை வலியுறுத்தி இறைவேண்டல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இறைவேண்டல்   (AFP or licensors)

மதத் தலைவர்கள் வேறுபாடுகளைக் கைவிடுமாறு வேண்டுகோள்!

புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மதத்தினரும் இணைய வேண்டிய அவசியம் உள்ளது : உடுப்பி ஆயர் Gerald Isaac Lobo

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தென் இந்தியாவின் கர்நாடக மாநிலம், மதச்சார்பற்ற அரசியல் கட்சியால் தற்போது வழிநடத்தப்படுவதால், மதத் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை விட்டுவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பிட உழைத்திடுமாறு அம்மாநிலத்தின் உடுப்பி பேராயர் Gerald Isaac Lobo அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து மதத்தினரும் இணைய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று பலசமய கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது கேட்டுக்கொண்ட ஆயர் லோபோ அவர்கள், நாம் ஒரே இந்தியத் தாயின் குழந்தைகளாக வாழ முடியும் என்றும், இந்தியா அமைதியின் தோட்டம் என்பதை நமது  செயல்கள் உணர்த்த வேண்டுமெனவும் உரைத்ததாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு தோட்டத்தில் வெவ்வேறு வண்ணங்களில் பூக்கள் இருக்கும்போது, அதன் அழகு அதிகரிக்கிறது என்று விளக்கிய பேராயர் லோபோ அவர்கள், அவ்வாறே வெவ்வேறு மதங்கள் ஒன்றிணைந்து இணக்கமாக வாழும்பொழுது அக்காட்சியும் பார்ப்பதற்கு மிகவும் அழகுபொருத்தியதாக இருக்கும் என்றும் தனது உரையின்போது எடுத்துரைத்தார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மேலும் கடந்த முறை கர்நாடகாவை ஆட்சி செய்த இந்து சார்பு கட்சி மக்களை சாதி, நம்பிக்கை, மற்றும் மதத்தின் பெயரால் பிரிக்க விரும்பியது என்று யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறினார், கர்நாடக கத்தோலிக்க ஆயர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் அருள்பணியாளர் Faustine Lucas Lobo.

பாஜக ஆட்சியில் இருந்தபோது உடுப்பியில் பல மதவெறி சம்பவங்கள் நடந்தன என்று சுட்டிக்காட்டிய அருள்பணியாளர் Lobo அவர்கள், இருப்பினும் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆயர் லோபோ அவர்கள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 25, இஞ்ஞாயிறன்று நிகழ்ந்த, Sarvadharma Souharda Samiti என்ற பலசமய  கூட்டத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் மற்றும் சீக்கியர் மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். (UCAN )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2024, 12:20