நேர்காணல் - தூய லூர்து அன்னை திருவிழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
உறவுகளின் பெருமையினை உள்ளத்தினுள் பதித்திடுபவர் அன்னை. இவ்வுலகில் எதனையும் அன்பினால் வென்றிடலாம் என்று துணிவு தருபவர். மன்னிப்புக்கு இணையான பதம் இல்லை என்பதை தன் வாழ்வால் எடுத்துரைப்பவர். கூடி வாழ்ந்திடின் கோடி சுகம் என்று அறிவுறுத்துபவர். கற்றலே இவ்வுலக வாழ்வின் பெருஞ்செல்வம் என்று எடுத்துரைப்பவர். மூத்தோரின் சொல் கேட்டல் பணிவென்பதை தன் செயலால் வெளிப்படுத்துபவர். பிறர் துன்பம் போக்குதலை பண்பெனவும், உண்மையே உடனிருக்கும் பலம் என்றும் சுட்டிக்காட்டுபவர். உயிருக்குள் நம்மை பத்து மாதங்கள் அடைகாத்து தன் உதிரத்தையேப் பாலாக்கி, பாசத்தால் நம்மை அனுதினமும் தாலாட்டி, பல இரவுகள் நமக்காகத் தூக்கத்தை தொலைத்து தனது வாழ்க்கையை நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை. இத்தகைய அன்னைக்கெல்லாம் சிறந்த அன்னையாய், திகழ்பவர் அன்னை மரியா. குணமளிக்கும் தாயாக நோயாளிகள் பலரின் துயர் போக்கிடும் அன்னையாகத் திகழும் அன்னை மரியா பெர்னதெத் என்னும் சிறுமிக்கு பிரான்சின் லூர்து மலையில் காட்சிகொடுத்து லூர்து அன்னையாக எழுந்தருளியிருக்கின்றார்.
பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமையன்று திரு அவையில் சிறப்பிக்கப்படும் தூய லூர்து அன்னை திருவிழா பற்றியக் கருத்துக்களையும் தனது அனுபவங்களையும் இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி லூர்து ராஜன் OMD. இறையன்னை சபையின் அருள்பணியாளராக 20 ஆண்டுகள் வாழ்ந்து வரும் அருள்பணி லூர்து ராஜன் அவர்கள், உரோம் தூய லாத்தரன் பல்கலைக் கழகத்தில் இறையியலில் மேற்படிப்பு முடித்துள்ளார். இறையன்னை சபையின் இந்திய பிரிவின் தலைவர், பங்கு தந்தை, பள்ளிகளின் தாளாளர் என இந்தியாவில் பல்வேறு பணிகளைத் திறம்பட ஆற்றியவர். தற்பொழுது தென்இத்தாலியில் San Ferdinando என்ற இடத்தில் குழும தலைவராகவும், இணை பங்குத்தந்தையாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை குணமளிக்கும் தூய லூர்து அன்னை திருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்