அருளின் அடையாளமாகத் திகழும் அன்னை மரியா திருத்தலம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நம்பிக்கையின் ஆழமான சாட்சிகளாக வாழ நம்மை அழைக்கும் இடமாகவும், அருளின் அடையாளமாகவும் பிலிப்பீன்ஸ் அன்னை மரியாவின் திருத்தலம் திகழ்கின்றது என்றும், திருவிவிலியத்தில் யாக்கோபு கனவில் கண்ட ஏணியானது விண்ணகத்திற்கு ஏறிச்செல்ல உதவியது போல அன்னை மரியா நாம் இறைவனைச் சென்றடைய உதவுகின்றார் என்றும் கூறியுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
பிப்ரவரி 26 திங்கள்கிழமை பிலிப்பீன்ஸில் உள்ள அமைதி மற்றும் நல்பயணத்தின் அன்னை மரியா திருத்தலம் பன்னாட்டு திருத்தலமாக உயர்த்தப்பெற்ற திருப்பலியில் பங்கேற்று சிறப்பித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா.
சிலுவை அடியில் நின்று நம் ஒவ்வொருவரையும் நமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட அன்னை மரியா முன், நமது இதயங்களைத் திறப்போம் என்று கூறியுள்ள பேராயர் பிசிகெல்லா அவர்கள், நம்மைக் கைவிடாத, அளவற்ற விதமாக அன்பு செய்யும் அன்னை மரியா, நாம் கேட்பதற்கு முன்பே நம் தேவைகள் என்ன என்பதை அறிந்தவர், நமது மகிழ்விலும் துன்பத்திலும் நம்மோடு இருந்து நமது வேண்டுதல்களுக்கு பதிலளிப்பவர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இவ்வுலகின் நம்பிக்கையின் திருப்பயணிகளாகிய நாம் அனைவரும், நம்பிக்கையின் தூதுவர்கள் மட்டுமல்ல, மாறாக நம்பிக்கையை உருவாக்குபவர்களாகவும், நமது வார்த்தைகளால் நம்பகத்தன்மையின் உறுதியான அடையாளங்களை உருவாக்கும் பொறுப்புடையவர்களாக வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார் பேராயர் ரீனோ பிசிகெல்லா.
“நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருப்பேன், உன்னைக் கைவிடமாட்டேன்” என்று யாக்கோபிற்குக் கடவுள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் இன்று நம்மிடம் கூறப்படுகின்றன என்றும், பாடுகள் பட்டு, இறந்த இயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த அன்னை மரியாவைப் போல, நாம் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
பன்னாட்டு ஆலயமாக, அமைதி மற்றும் நற்பயணத்தின் அன்னை திருத்தலமாக மாற்றப்பட்டிருப்பது ஒரு கொடை மட்டுமல்ல மாறாக பகிரப்பட வேண்டிய பணி என்றும், ஏழைகள் ஆறுதல் மற்றும் அமைதி தேவைப்படுவர்கள், என அனைவரையும் வரவேற்கும் இல்லமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
கடவுளின் இல்லமாகிய இத்திருத்தலத்தில், அன்னை மரியாவின் பரிந்துரையினால் நமது நம்பிக்கை வலுப்படட்டும், நமது இலக்காகிய விண்ணகத்தந்தையை நோக்கிச் செல்லும் பயணத்தினால் நமது எதிர்நோக்கு உறுதிபெறட்டும், இறைவன் நமக்கு விட்டுச்சென்ற இரக்கத்தின் பல்வேறு வடிவங்களை உணர்ந்து பிறரன்புப்பணிகள் அதிகரிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் பிசிகெல்லா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்