தவக் காலம் 2-ஆம் ஞாயிறு : வாழ்க்கை மாற்றம் தரும் உருமாற்றம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. தொநூ 22:1-2,9-13,15-18 II. உரோ 8:31b -34 III. மாற் 9:2-10)
இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்று ஆண்டவரின் உருமாற்றம் குறித்துச் சிந்திக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் பிறரது நல்வாழ்விற்காக உருமாற்றம் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றன. இவ்வுலக வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும்போது பலரது வாழ்வில் பல்வேறு வழிகளில் இந்த உருமாற்ற நிகழ்வு நிகழ்ந்துள்ளதை நாம் காண முடியும். Terry Fox என்ற 21 வயது மாணவனுக்கு 1977-ஆம் ஆண்டில் எலும்பு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. கனடா நாட்டிலுள்ள Simon Fraser என்ற பல்கலைக் கழகத்தில் படித்து வந்தான் இந்த மாணவன். நோயின் உச்சக்கட்டம் காரணமாக, அவனது உடலிலிருந்து வலதுகால் அகற்றப்பட்டது. இந்த வேதனையான செய்தியைக் கேட்ட அவனது பள்ளி ஆசிரியர் அவனுக்குகொரு கடிதம் எழுதியிருந்தார். இந்த ஆசிரியர் அவனுக்குக் கூடைப்பந்து பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர். அவரது கடிதத்துடன், மாற்றுத்திறனாளியாக சாதனை படைத்த ஒரு மாரத்தான் ஒட்டப்ப பந்தய வீரனது வாழ்க்கைச் செய்தியடங்கிய செய்தித்தாளின் நகலையும் அனுப்பியிருந்தார். இந்தச் செய்தியைப் படித்த டெர்ரிக்கு மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்தன. அதன் பிறகு அவனது மனதில் இவ்வுலகில் ஏதாவதொன்றை சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் வலுப்பெற்றுக்கொண்டே இருந்தது. எப்படியும் ஒருசில ஆண்டுகளிலேயே இறக்கப்போகும் தன்னால், இந்தச் சமூகத்திற்கு ஏதாவதொன்றை செய்ய இயலுமா என்று சிந்தித்துக்கொண்டே இருந்தான். இதன்விளைவாக, கனடா நாட்டில் 5000 மையில் தூரம் ஓடி, அதன்மூலம் மக்களிடம் நிதிதிரட்டி புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என்று ஆசைகொண்டான் டெர்ரி. இந்த நிகழ்வுக்கு முன்தயாரிப்பாக, 18 மாதங்கள், செயற்கை காலைப் பொருத்திக்கொண்டு ஒவ்வொருநாளும் ஓடி பயிற்சி எடுத்தான் டெர்ரி.
1980-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதியன்று, தான் விரும்பியபடி தனது ஓட்டத்தைத் தொடங்கினான். இவனுடைய இலட்சியம் நிறைந்த நல்முயற்சிக்காக பலரும் பண உதவி செய்தனர். 114 நாள்கள் தொடர்ந்து ஓடிய Terry, 3000 மயில்கள் தூரத்தைக் கடந்தபோது மயங்கி விழுந்துவிட்டான். அவனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது புற்றுநோய் அவனது எல்லா பாகங்களிலும் பரவியிருந்தது. இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட இவனது ஒட்டப்பயணச் செய்தி கனடா நாடு முழுதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, டெர்ரியின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் பலரிடமிருந்து பண உதவிகள் வந்து குவிந்தன. ஏறத்தாழ 8 கோடியே 30 இலட்சம் (24 Million Dollars) அளவிற்கு நிதி சேர்ந்தது. இந்த நிதியைக் கொண்டு டெர்ரி விரும்பிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. ஆனால் டெர்ரி இறந்துவிட்டான். தான் தொடங்கிய இலட்சிய ஓட்டத்தில் டெர்ரி முடிந்தளவுக்கு ஓடி இறந்துவிட்டாலும், அவனது முயற்சியும் நல்லெண்ணமும் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவனது பெயரால் இன்றும் பலநூறுபேர் வாழ்ந்துகொண்டிருக்கிறனர். இவ்வாறு, பிறரது நலன்களுக்காகப் பலர் மேற்கொண்ட இலட்சிய பயணங்கள் இந்த உலகத்தையே மாற்றியிருக்கிறன என்பதை சொல்லவும் வேண்டுமோ? மாணவன் டெர்ரியின் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் பிறரது நல்வாழ்விற்காக அவனை உருமாற்றியது.
ஆபிரகாமின் உருமாற்றம்
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கேட்டுவிட்டார் என்பதற்காகத் தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடவும் துணித்த நமது முதுபெரும் தந்தை ஆபிரகாமின் தாராள மனப்பான்மை நமக்கு எடுத்துக்காட்டப்படுகிறது. இது ஆபிரகாம் பெற்ற உருமாற்ற நிகழ்வாக அமைகின்றது. கடவுளுக்காக ஒன்றை இழக்கத் துணியும்போது, அதைவிட அதிகமாகக் கடவுளிடமிருந்து அருளைப் பெறமுடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இதனை முதல் வாசத்தின் இறுதிப் பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால், நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார் (வச 15-18). இப்பகுதியில் ஒளிந்துள்ள சில இறையியல் உண்மைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலாவதாக, இங்கே ஆபிரகாம் இறைத்தந்தையை அடையாளப்படுத்துகின்றார். அதாவது, கடவுளுக்காகத் தனது ஒரே மகனையும் பலியிடத் துணிந்த அபிராகாமைப் போல, இறைத்தந்தையும் இம்மானுட மீட்பிற்காகத் தனது ஒரே மகனையும் பலிகொடுக்க முன் வருகின்றார். இதனைத்தான், இயேசு நிக்கதேமிடம் ஓர் இரவுவேளையில் உரையாடல் மேற்கொண்டபோது, "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்" (காண்க யோவா 3:17-17) என்று கூறுகின்றார். இரண்டாவதாக, ஆபிரகாமின் மகன் ஈசாக்கு, இறைத்தந்தையின் ஒரே மகனான இயேசுவை அடையாளப்படுத்துகின்றார். ஈசாக் சுமந்து செல்லும் விறகுக் கட்டைகள் (வசனம் 6), இயேசு சுமந்து செல்லும் சிலுவை மரத்தை அடையாளப்படுத்துகின்றன. இவ்விடத்தில் முக்கியமானதொரு இறையியல் கருத்தை நாம் உற்றுநோக்க வேண்டும். 'பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார்' என்ற இறைவார்த்தைகள், தனது மகன் இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தின் வழியாக இவ்வுலகை மீட்கும் இறைத்தந்தையின் திட்டத்தில் சிலுவை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இயேசு சுமக்கும் சிலுவை இறைத்தந்தையால் வலிந்து தரப்படுவதாகக் கூட நாம் பொருள்கொள்ளலாம். அதனால்தான், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று கூறி, இயேசு தனது சாவைக் மூன்று முறை முன்னறிவிக்கின்றார் என்பதை ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலுமே காண்கின்றோம். அதற்கடுத்தபடியாக, மலையின் அடிவாரத்திலிருந்து ஈசாக் விறகுக்கட்டைகளைச் சுமந்துகொண்டு மலையின் உச்சிவரை சென்றதை, இயேசு சிலுவை மரத்தைத் தூக்கிக்கொண்டு கல்வாரி மலையின் உச்சிவரை சென்ற கல்வாரிப் பயணமாக நாம் கருதலாம். அதன்பிறகு, ஈசாக் பலியிடப்படப்போகும் அந்தப் பலிபீடம் இயேசு தனது இன்னுயிரைக் கையளித்த கல்வாரி மலையை அடையாளப்படுத்துகிறது. 'ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார்' (வச 9). இறுதியாக இந்தப் பயணத்தின் திருப்புமுனையாக அமைவது செம்மறி ஆடு. அதாவது, ஆபிரகாம் எழுப்பிய பலிபீடத்தில் அவரது மகன் ஈசாக்கிற்குப் பதிலாக செம்மறி ஆடு பலியிடப்படுகிறது (வச 13). ஆனால் கல்வாரி என்னும் பலிபீடத்தில் உண்மையான செம்மறியாகிய இயேசுவே பலியாகிறார். இதன்காரணமாகவே, நமது திருப்பலிக் கொண்டாட்டாட்டத்தின் இறுதிப் பகுதியில், 'இதோ, இறைவனின் செம்மறி, இதோ உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்' என்று அருள்பணியாளர் உரைக்கும் வார்த்தைகள் இதனை மையப்படுத்தியதே என்பதையும் இக்கணம் உணர்ந்துகொள்வோம்.
இயேசுவின் உருமாற்றம்
இயேசுவின் உருமாற்றம் குறித்து ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே மிகச் சிறப்பாக எடுத்துரைப்பதிலிருந்தே இதன் முக்கியத்துவம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இயேசுவின் உருமாற்றம் என்பது அவருடைய மாட்சிக்குரிய உடலை அறிமுகப்படுத்துவதாக அமைகின்றது. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பு அவர் அடையப்போகும் மகிமைமிக்க விண்ணக வாழ்வை இந்த உருமாற்ற நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இங்கே, இயேசுவுடன் தோன்றும் மோசே திருச்சட்டத்தின் அடையாளமாகவும், எலியா இறைவாக்கினர்களின் அடையாளமாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றனர். இதன்வழியாக, இயேசு திருச்சட்டம் மற்றும் இறைவாக்கினர்களின் ஒட்டுமொத்த அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறார். இங்கே மீண்டுமாக மூவொரு இறைவனின் பிரசன்னத்தையும் பார்க்கின்றோம். இயேசுவின் திருமுழுக்கின்போது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” (காண்க மாற் 1:11) என்று கூறி இவ்வுலகிற்குத் தனது மகனை அறிமுகம் செய்துவைத்த இறைத்தந்தை, இந்த உருமாற்ற நிகழ்வில் மீண்டும் தோன்றி, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” (வச 7) என்று கூறுகின்றார். திருமுழுக்கின்போது, 'பூரிப்படைகின்றேன்' என்று கூறிய இறைத்தந்தையின் வார்த்தையில், இந்தத் தரணி வாழத் தன் மகனையே தாரைவார்க்க முன்வந்த அவரின் பூரிப்படைந்த மனதை பார்க்கின்றோம். ஆனால் உருமாற்ற நிகழ்வில் இறைத்தந்தை 'செவிசாயுங்கள்' என்கின்றார். அதாவது, என்றும் அழியாத மகிமைமிக்க வாழ்வை நாம் அடையவேண்டுமெனில், இவ்வுலகில் வரும் சவால்களையும் துன்ப துயரங்களையும் ஏற்கவும், அதற்காக நமது இன்னுயிரையும் கையளிக்கத் தயாராக இருக்கவேண்டும். இதற்கொரு மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழும் தனது மகனின் வாழ்க்கைக்கும் வார்த்தைகளுக்கும் செவிசாயுங்கள் என்று இறைத்தந்தை உரைப்பதை நாம் காணமுடிகிறது. அதிலும் சிறப்பாக, மானிட மீட்புக்காகத் தியாக மரணமேற்கவிருக்கின்ற இயேசுவுடனான இறைத்தந்தையின் ஒன்றிப்பையும் உடனிருப்பையும் இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மலை என்பது மிகவும் பிரிக்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. காரணம், அங்குதான் இறைவனின் பிரசன்னம் நீடித்து நிலைத்திருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது. அந்தவிதத்தில் பார்க்கும்போது இந்த உருமாற்றம் தாபோர் மலையின் உச்சியில் நிகழ்கின்றது. இந்நிகழ்வில் இன்னொரு முக்கியமான இறையியல் கருத்தும் இருக்கின்றது. அதாவது, இந்த உருமாற்ற நிகழ்வு இயேசுவின் மரணத்திற்கு முன்பு நடக்கும் முக்கியமானதொரு நிகழ்வு. இனி அவர் எருசலேமில் நிகழவிருக்கும் மரணத்திற்குப் பின்பு வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்து, மலைகளுக்கெல்லாம் உயர்ந்த மலையாக இருக்கும் விண்ணகம் சென்று தந்தையின் வலப்பக்கத்தில் நிலையாக அமர்ந்துவிடுவார். ஆக, இந்த உருமாற்ற நிகழ்விற்குப் பின்பு அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வருவதை மனுவுருவெடுத்தல் (மண்ணகப் பிறப்பு) நிகழ்வாக நாம் கருதலாம். அவ்வாறே உயிர்ப்பிற்குப் பிறகு மீண்டும் விண்ணகம் ஏறுவதை அவரது தியாக மரணத்திற்கு இறைத்தந்தை அவருக்கு வழங்கவிருக்கும் (விண்ணகப் பிறப்பு) பரிசாகக் கொள்ளலாம். மேலும், 'அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின' (வச 3) என்று கூறும் மாற்கு நற்செய்தியாளரின் வார்த்தைகள் அவர் பெறவிருக்கும் மகிமைமிக்க விண்ணக வாழ்வை நமக்குச் சுட்டிக்கட்டுகின்றது.
துயரத்தைக் கடந்தால்தான் தூய வாழ்வு
“ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” (வச 5) என்று பேதுரு இயேசுவைப் பார்த்துக் கூறுவது, இலட்சிய வாழ்வில் சவால்களைக் கண்டு ஒதுங்கி, சுகவாழ்வு வாழ நினைக்கக் கூடாது என்ற கருத்தைப் பதிவு செய்கின்றது. மேலும் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கூடாரம் என்பது முக்கியமானது. கடவுள் தம் மக்களை பாதுகாக்க 40 நாட்கள் பாலைவெளியில் கூடாரமடித்தார் (காண்க எசே 37:27,43:7-9) என்று பார்க்கின்றோம். அப்படியென்றால், மாண்புடனும் புகழுடனும் விளங்கும் இயேசு தங்களுடன் எப்போதும் நிரந்தரமாகத் தங்கவேண்டும் என்ற அர்த்தத்தில் பேதுரு இவ்வாறு கூறியிருக்கலாம். அதாவது, இந்த மகிமைமிக்க இயேசு தங்களுடன் நிரந்தரமாக தங்கிவிட்டால் போதும், எவ்விதமான சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கத் தேவையிருக்காது என்ற எண்ணத்தில் பேதுரு இப்படி சொல்லியிருக்கலாம். காரணம், இந்த உருமாற்ற நிகழ்வுக்கு முன்பு இயேசு தனது தியாக மரணத்தைக் குறித்து அறிவித்துவிட்டார் என்பது அவருக்குத் தெரியும். ஒருவேளை, நாமும் இயேசுவிடன் எருசலேமிற்குப் போனால் அவருடன் சேர்ந்து துன்புற்று மரணிக்கவேண்டியிருக்கும் என்ற எண்ணமும் அவரது உள்ளத்தியில் இழையோடியிருக்கலாம். அதற்கேற்றவாறு இந்த உருமாற்ற நிகழ்விற்குப் பின்பு இயேசு தனது சீடர்களுடன் தாபோர் மலையைவிட்டு இறங்கிய பிறகு தம் சாவைக் குறித்து இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். ஆகவே, இயேசு நமக்காக உருமாற்றம் பெற்றதுபோல், நாமும் பிறரது நல்வாழ்விற்காக உருமாற்றம் பெறுவோம். தடைகளைப் பின்னுக்குத் தள்ளி இலட்சியமுடன் முன்னேறிச் செல்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்