மனிலாவில் கத்தோலிக்கரின் வாழ்வுக்கு ஆதரவான நடைபயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பிலிப்பீன்ஸின் Quezon நகருக்கும் மனிலாவுக்கும் இடையே இடம்பெற்ற வாழ்வுக்கு ஆதரவான நடைபயணத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களுக்கு உரையாற்றிய கர்தினால் Jose Advincula அவர்கள், முன்சார்பு எண்ணங்களுடன் தீர்ப்பிடுதல் மற்றும் கண்டனங்களும் அற்ற வாழ்வுக்கு ஆதரவான திட்டங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் இவ்விரு நகர்களுக்கு இடையே இடம்பெறும் வாழ்வுக்கு ஆதரவான நடைபயணத்தில் கலந்துகொண்டோருக்கு இவ்வாண்டு மனிலாவின் புனித தாமஸ் பலகலைக் கழகத்தில் திருப்பலி நிறைவேற்றி உரை வழங்கிய மனிலா பேராயர், கர்தினால் Advincula அவர்கள், கத்தோலிக்கர்கள் மற்றவர்களுக்குச் செவிமடுப்பதிலும், அவர்களோடு உரையாடல் நடத்துவதிலும் கவனம் செலுத்துவதோடு, தீர்ப்பிடுதலையும் கண்டனம் தெரிவிப்பதையும் புறம்தள்ளி, இளைய தம்பதியினருக்கு ஆதரவாக உடன் நடந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வாழ்வு மற்றும் குடும்பம் தொடர்புடைய விடயங்களில் நம்முடைய அணுகுமுறைகள், திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் Advincula அவர்கள், கருவில் வளரும் குழந்தைகள், நோயுற்றோர், முதியோர் ஆகியோர் குறித்த சிறப்பு அக்கறைக்கும் அழைப்புவிடுத்தார்.
பிலிப்பீன்சில் போதைப்பொருள்களுக்கு எதிரான போர், மற்றும் மரணதண்டனையை மீண்டும் கொணர்தல் தொடர்புடைய வன்முறைகளின் காலத்தில் 2017-ஆம் ஆண்டு இந்த வாழ்வுக்கு ஆதரவான நெடுந்தூர நடைபயணம் முதன் முதலில் இடம்பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்