தடம் தந்த தகைமை : தாவீது கோலியாத்தைத் தோற்கடித்தல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து “நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா?” என்று சொல்லி தன் தெய்வங்களின் பெயரால் தாவீதை சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் வானத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில், இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார்.
பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீதும் அவனுடன் போரிட, பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்; அதைக் கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு, தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன் மீது வெற்றி கொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி, அந்தப் பெலிஸ்த்தியனின் மேல் ஏறிநின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையைக் கொய்தார். யூதா மக்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயிமின் சாலையில் காத்து, எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்