வாரம் ஓர் அலசல் - கல்வாரிக்குப் பயணமாவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இன்று நாம் நமக்காக சிலுவையை தூக்கிக் கொண்டு நடந்த இயேசுவின் பாடுகளின் பாதையில் பாதத்தை எடுத்து வைக்கிறோம். தவக்காலத்தின் இறுதி நாள்களில் இருக்கும் நாம், இயேசு எருசலேம் நுழைந்த குருத்து ஞாயிறு நிகழ்வோடு இணைந்து புனித வாரத்திற்குள் நுழைந்துள்ளோம்.
இயேசுவின் இந்த புனித பவனியில் சுகத்தையல்ல துயரையும், இன்பத்தையல்ல துன்பத்தையும், எழுச்சியையல்ல வீழ்ச்சியையும் எதிர்கொள்ளப்போகிறோம். ஆனால், அவைகளின் முடிவில் நாம் மடியப் போவதில்லை. உயிர்ப்பெனும் வெற்றியை பெறப்போகும் நாம், எத்தகைய விலையை அதற்கு கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க உங்களை அழைக்கின்றோம்.
முதலில் நம் கேள்வி என்னவென்றால், இவ்வாரம் முழுவதும் நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறை நிகழ்வுகளில் நாம் பங்கேற்கப் போகிறோமா அல்லது பார்வையாளர்களாக இருக்கப் போகிறோமா, என்பதுதான்.
இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவிய சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், சிலுவையின் அடியில் நின்ற அன்னை மரியா, இயேசுவின் நிலை கண்டு அழுத பெண்கள், நல்ல கள்வன், இயேசுவின் அடக்கத்திற்கு உதவிய அரிமெத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, நிக்கதேமு போன்றோரைப் போல நாம் இயேசுவின் பாடுகளில் பயனுள்ளவகையில் பங்கேற்கிறோமா என்ற கேள்வி நம் முன் நிற்கிறது.
இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு, பிரச்சனைகள் சூழந்ததும் பொறுப்பிலிருந்து விலகிவிட்ட பிலாத்து, அவரைக் கண்டனம் செய்வதிலேயே குறியாக இருந்த மதத் தலைவர்கள், அவரைத் துன்புறுத்திய வீரர்கள், அவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட பின்னரும் கேலி செய்த பார்வையாளர்கள் என்பவர்களின் வரிசையில் நாமும் இருக்கப் போகிறோமா என்ற கேள்வியும் எழுகிறது.
புனித வாரத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் குருத்து ஞாயிறில் இருந்து நம் பயணத்தைத் துவக்குவோம். தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்கங்களோடு, ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணம் வந்த கூட்டம் அவரை வரவேற்கிறது. இயேசுவோ தன் சிலுவை மரத்தையும், ஆணிகளையும், முள்முடியையும் தேடி எருசலேமுக்குள் நுழைகிறார். தாம் எதிர்கொள்ளப்போகும் பாடுகளைப்பற்றி இயேசுவுக்குத் தெரியும். தெரிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு புகுந்தார்.
தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று பாடி எருசலேம் நகருக்குள் அழைத்துச் செல்லும் இதே மக்கள் சில தினங்களில் ஒழிக, ஒழிக, இவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சொல்லப்போகின்றார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் பிடிபடப்போவது, அவரை விட்டு சீடர்கள் ஓடிப்போக இருப்பது, அவர் மீது சிலுவை சுமத்தப்படப்போவது, தாம் சிலுவையிலே இறக்கப்போவது எல்லாமே இயேசுவுக்குத் தெரியும். தெரிந்திருந்தது மட்டுமல்ல, அவரே அவைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்.
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தோமானால், துவக்கத்திலிருந்தே இயேசு நம்மை ஆச்சரியத்திலாழ்த்துகிறார். மக்கள் மிகவும் உயரிய வரவேற்பை கொடுக்க, அவரோ, கழுதையின் மீது ஏறி வருகிறார். அரசராக குதிரையில் வரவேண்டியவர் அமைதிக்கொடி ஏந்தி கழுதையில் வருகிறார்.
பாஸ்கா திருவிழாவின்போது, தங்களை விடுவிக்கவல்ல வல்லமையுள்ளவராக மக்கள் அவரை எதிர்நோக்கியிருக்க, அவரோ, தன்னையே பலியாக்கி பாஸ்காவை நிறைவுச் செய்கிறார்.
உரோமையர்களை வாள் கொண்டு வெற்றி காண மக்கள் விரும்பும்போது, அவரோ சிலுவையைக் கையிலெடுக்கிறார். அவர் பாதையே வித்தியாசமானதாக இருந்தது. தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி இறைத்தந்தையிடம் வேண்டுகிறார்.
மன்னருக்கெல்லாம் மன்னர் சிலுவை மரத்தில் முடிசூட்டப்படுகிறார். அனைத்துலகிற்கும் ஆண்டவர், அனைத்தும் களையப்ப்பட்டு, மகிமைக்குப் பதிலாக, முட்களால் முடிசூட்டப்படுகிறார். மனித உரு எடுத்த நன்மைத்தனம் இங்கு அவமானப்படுத்தப்பட்டு, அடிக்கப்படுகிறது. அனைத்தையும் நம் மீட்புக்காக ஏற்றுக்கொள்கிறார். அது மட்டுமா, நமக்கென ஓர் அன்பான தாயையும் இறுதி நேரத்தில் வழங்குகிறார்.
யூதாசு பணம் பெற்றுக்கொண்டு இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார்.
பேதுரு மறுதலிக்கின்றார்.
சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடுகின்றனர்.
இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பளிக்கும் பிலாத்து, சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைவிட யூதத் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்துகொள்கிறார்.
ஆகவே, இவ்வுலகம் கைவிட்ட நிலையை உணரும் இயேசு துயரம் தாங்காமல், “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூக்குரல் எழுப்புகிறார்.
தன் தந்தையின் திருவுளப்படி, துன்பதுயர்களையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்டதன் வழியாக, தன்னைத் தாழ்த்தியதன் வழியாக, அவர் மகிமையை அடைந்தார், வெற்றி வாகைச் சூடினார். அனைத்துமறிந்த வார்த்தையானவர், சிலுவையிலிருந்து நமக்கு மௌனத்தில் கற்பித்தார். ஆனால், தன்னை அனுப்பிய தந்தையிடம் தன் ஆவியை இயேசு ஒப்படைத்தபோது, படைப்பால் மௌனம் காக்க முடியவில்லை. சூரியன் மறைந்தது, வானம் இடித்தது, பூமி அதிர்ந்தது.
குருத்தோலையின் வெற்றியாக துவங்கியது, வெள்ளியன்று சிலுவை மரத்தின் தோல்வியாகத் தெரிந்தது. ஆனால், மீண்டும் ஞாயிறன்று வெற்றியே உயிர்த்தெழுகிறது.
துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை என்பதும், பாடுகள் இல்லாமல் பாஸ்கா இல்லை என்பதும் இந்த புனித வாரத்தில் நமக்கு மீண்டும் கற்றுத் தரப்படுகிறது.
வாழ்வு கொடுக்கும் பணியைச் செய்ய வந்த இயேசு, நீதி, அன்பு, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பாதையில் பயணம் செய்து ஆயுதமின்றி அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் பேரணி நடத்தியவர்.
இன்று நாம் காண்பதென்ன? நீதியைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அநீதிக்கு ஆளாக வேண்டிய நிலை. அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களின் குரல் ஒடுக்கப்படுகின்ற நிலை. இப்போதுதான் இயேசுவின் படிப்பினை நம் முன் நிற்கிறது. துன்பமின்றி இன்பமில்லை, தோல்வியின்றி வெற்றியில்லை; சாவின்றி உயிர்ப்பில்லை; காயமற்ற போர்க்களமில்லை; இரவின்றிப் பகலில்லை என்பதை இயேசுவின் இப்புனித வாரம் சொல்லித் தருகிறது. உயிர்ப்பை நோக்கிச் செல்லும் நாம், பாடுகள் மற்றும் மரணம் என்னும் வேள்வித் தீயைத் தாண்டிச் செல்லத் தயாராவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்