கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித்   (Copyright: Aid to the Church in Need)

காவல்துறை அதிகாரி நியமனத்திற்கு கர்தினால் இரஞ்சித் எதிர்ப்பு!

Deshabandu Tennekoon, இலங்கையின் காவல்துறை தலைவராகத் தற்காலிக அரசுத்தலைவர் இரணில் விக்கிரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது: கர்தினால் மால்கம் இரஞ்சித்

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

இலங்கையில் 2019-ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவரை அந்நாட்டின் உயர்மட்ட காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிராகக் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Deshabandu Tennekoon-வை அந்நாட்டின் காவல்துறைத் தலைவராகத் தற்காலிக அரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமித்துள்ள வேளை, இதனை எதிர்த்து, மார்ச் 12, இச்செவ்வாயன்று, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் கர்தினால் இரஞ்சித் என்று அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

கர்தினால் இரஞ்சித் அவர்கள் CPA எனப்படும் ஒரு பொதுக் கொள்கை ஆய்வுக் குழுவுடன் இணைந்து இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த நியமனம் சட்டவிரோதமானது என்று அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு உரைக்கிறது.

2019-ஆம் ஆண்டு, உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை விசாரித்த அரசுத் தலைவரின் விசாரணை ஆணைக்குழு, அவற்றைத் தடுக்கத் தவறியதாக Tennekoon  மீது குற்றஞ்சாட்டிய போதிலும், 2023-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதியன்று அரசுத் தலைவர் விக்கிரமசிங்க அவர்களால் அவர் பொறுப்பு-காவல்துறைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார் என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மூன்று சொகுசு உணவு விடுதிகளில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்ததில் வெளிநாட்டினர் உட்பட 273 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2024, 15:01