ஹெய்டி மக்கள் ஹெய்டி மக்கள்  (AFP or licensors)

அமைதி நிலவ, வன்முறைகள் நிறுத்தப்பட செபிக்க வேண்டும்

ஆயுதமேந்தியவர்களின் கடுமையான செயல்களால் ஹெய்டியில் வாழும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பயங்கரவாதக் குழுக்கள் விளைவிக்கும், தீவிரவாதம் மற்றும் அச்சுறுத்தும் செயல்களால் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், நாட்டில் அமைதி நிலவவும், வன்முறைச்செயல்கள் நிறுத்தப்படவும் தொடர்ந்து செபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அருள்பணியாளர் Renold Antoine.

மார்ச் மாதத்தின் துவக்கத்தில் குளூனி சபை அருள்சகோதரிகள் மூவர் பயங்கரவாதக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளதைத் தெரிவித்து ஹெய்டியில் நிலைமை மோசமாகி வருகின்றது என்று கூறி தனது கருத்துக்களை எடுத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ஹெய்டியில் பணியாற்றும் மீட்பர் சபை மறைப்பணியாளர் அருள்பணி Renold Antoine.

மக்களுக்குக் கடுமையானப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீவிரவாத செயல்களுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து “வேண்டாம்" என்று கூறவேண்டும் என அழைப்புவிடுத்துள்ள அருள்பணியாளர் அவர்கள், அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும் ஒன்றிணைந்த வாழ்க்கைக்கு "ஆம்" என்று சொல்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வங்கிகள், பொதுக் கட்டிடங்கள், பல வணிக நிறுவனங்கள் தீவிரவாதக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள அருள்பணியாளர் அவர்கள், ஆயுதமேந்தியவர்களின் கடுமையான செயல்களால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், மக்கள் அங்கு பாதுகாப்பாக உணர்ந்தாலும், பெரும்பாலும் மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளிலேயே அவர்கள் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 24 அன்று, கடத்தப்பட்ட அனைத்து மக்களின் விடுதலைக்காக ஹெய்டியில்  உள்ள தலத்திருஅவை ஆலயங்களில் சிறப்பு செப வழிபாடு நடத்தப்பட்டது என்று கூறியுள்ள அருள்பணியாளர் அவர்கள், நாட்டின் நிலைமை சீரழிந்து வருகின்றது எனவே அதற்காகத் தொடர்ந்து செபிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2024, 09:59