பல்சுவை – புண்ணிய நலன் தரும் புனித வாரம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
விமானங்கள் ஓடுதளம் முடிந்து விட்டது என்று ஒருபோதும் வருந்துவது இல்லை. மாறாக அதன் பின்னே தான் தங்களது பயணம் துவங்குகிறது என்பதை உணர்ந்து பறக்கின்றன. தவக்காலம் முடிவடைய இருக்கிறது. ஆனால் நம் தவ வாழ்வு, தரமான வாழ்வாகத் தொடங்க இருக்கிறது. புனித வாரம் என்னும் புண்ணிய வாரத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கின்றோம். தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று புகழ் கீதம் பாடி தொடங்கிய இந்த வாரம் மிக முக்கியமான வாழ்க்கை தத்துவங்களையும் மதிப்பீடுகளையும் நமக்கு தர இருக்கின்றது. புத்தம் புதிய குருத்தோலைகள் ஏந்தி புதிய மனநிலையுடன் புனித வாரத்தில் நுழைந்திருக்கிறோம். இந்த புனித வாரத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நற்செய்தி மாந்தர்கள் வழியாக நம்மை நல்வாழ்வு வாழ வழிகாட்டுகிறது.
புனித திங்கள்; மார்த்தாவின் நறுமணத்தைலம் பூசும் செயல் மூலம், கடவுளின் பணியாளராக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும். யூதாஸ் போல தன்னையும் பணத்தையும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், பொதுநலனில் அக்கறை கொண்டவர்களாக வாழவும் வலியுறுத்துகிறது.
புனித செவ்வாய்; யுதாசின் காட்டிக் கொடுக்கும் குணத்தை எடுத்துரைத்து இது போல நம்முடைய வாழ்வு சீரழிந்து விடக் கூடாது. மாறாக இயேசுவின் அன்புச் சீடர் யோவான் போல எப்போதும் அவரை விட்டு பிரியாத நல் மனம் கொண்டவர்களாய் வாழ அழைக்கிறது. மேலும் பேதுரு போல நமது பலவீனத்தால் இயேசுவை நம் வாழ்வாலும் சொல்லாலும் மறுதலிக்கும் காலம் வரும் என்பதையும் உணர்த்தி விழிப்பாக இருக்க வழி சொல்கிறது.
புனித புதன்: பாஸ்கா விழாக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளையும் ஆர்வத்தையும் நமக்கு தூண்டும் நாள். யூதாசின் சூழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் என்னோடு பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று அறிவிக்கின்றார். நாம் யார் நம்முடைய செயல்பாடுகள் இயேசுவுக்கு உகந்தனவா இல்லை அவரை காட்டிக்கொடுப்பனவா என்று நம்மை சிந்திக்க வைக்கும் நாள்.
புனித வியாழன்; இறுதி இராவுணவு. பாதம் கழுவும் சடங்கு. நற்கருணையை ஏற்படுத்துதல் குருத்துவம், நற்கருணை இடமாற்றம் என்று பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நமக்கு தந்து, நம் வாழ்வை மெருகேற்றும் நாள். புனித வெள்ளி: கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான நாள் இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட நாள். இன்றைய நாளில் கோவில்கள் வெறுமையாக்கப்பட்டும் இறந்தவர்களின் வீட்டை போல சோகம் நிறைந்ததாக காணப்படும். மாலையில் பெரிய சிலுவை பாதையும் சிலுவை ஆராதனை, தோம்பா எனப்படும் இறந்த இயேசுவின் திரு உடல் ஊர்வலம் போன்றவையும் நடை பெறும்.
புனித சனி: தன் ஒரே மகனை இழந்து தன்னந்தனியளாக கைவிடப்பட்ட மரியாளுக்கான நாள். அன்னையின் துயரையும் அவரது உள்ளக்குமுறலையும், துணிச்சலையும் எடுத்துரைக்கும் நாள்.
இத்தகைய சிறப்புமிக்க புனித வாரம் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி எட்வின் ஜார்ஜ். சலேசிய சபை அருள்பணியாளரான தந்தை அவர்கள் தத்துவஇயலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் உள்ள பூவிருந்தவல்லி குருமடம், இலங்கை, நைஜீரியா மற்றும் இந்தியாவில் உள்ள சலேசிய சபை குருமடங்களிலும் கற்பித்தவர். தற்போது உரோமில் உள்ள மரியானும் பல்கலைக்கழகத்தில் மரியியல் சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். தந்தை அவர்களை புனித வாரம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
வருடங்கள் மாறினாலும் வசதிகள் மாறினாலும் மாதங்கள் மாறினாலும் மனங்கள் மாறினாலும் நம் மனம் மாறாவிட்டால் ஒன்றும் மாறப்போவதில்லை. புனித வாரம் ஒரு போதும் முடிவடைவதில்லை அது அனுதினமும் நம் வாழ்வில் நினைவு கூறப்பட வேண்டியது. புனித வாரத்தின் முக்கியத்துவம் உணர்வோம். புண்ணிய நலன்களால் நம்மை நிரப்பி புனித வாழ்வு வாழ நம்மை தயாரிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்