இயேசுவின் கல்லறை இருக்கும் கோவில் இயேசுவின் கல்லறை இருக்கும் கோவில்  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள் - உப்பு உவர்ப்பற்றுப் போனால்….

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று, மலைமீது நின்று உலகெல்லாம் கேட்கும்படி அவரின் சீடர்களாகிய நம்மைப் பற்றி இயேசு பெருமையுடன் பறை சாற்றியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? (மாற்கு 9:50) என்ற இயேசுவின் கேள்வியை இன்றைய நம் நிகழ்ச்சியில் விவாதிப்போம்.

முன்னோர்கள் காலத்தில் உப்புக்கு தனி மரியாதை இருந்தது. உணவில் சுவை கூட்டுவதோடு உடலுக்கு சில வைத்தியங்களுக்கும் உப்பு பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்படுகிறது. பற்பொடி உபயோகிப்பவர்கள் சிறிது உப்பை சேர்த்து கலந்து தேய்ப்பதைப் பார்த்திருக்கிறோம். வாய்ப்புண் உள்ளவர்கள் உப்பு கலந்த நீரை வைத்து வாய்க்கொப்பளிப்பதையும், உப்பை ஒரு துணியில் கட்டி சூடான நல்லெண்ணையில் நனையவிட்டு, வலிக்கும் வீக்கத்துக்கும் ஒத்தடம் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். பூச்சிக் கடித்த இடத்தில் உப்பை சிறு துணியில் கட்டி தேய்ப்பதையும், ஆணிக்கால் அல்லது முள் தைத்த காலில் இரத்தக்கசிவு இருந்தால் அதை போக்க உப்பை பயன்படுத்துவதையும் கண்டிருக்கிறோம். தொண்டை கமறல், தொண்டை வலி, பெருவிரல் பாதிப்பு, கால் வலி, சரும நோய்கள் போன்றவைகளுக்கும் உப்பு கலந்த நீர் உதவுகிறது. உப்பு ஒரு கிருமி நாசினி மட்டுமல்ல, உப்பில் இருக்கும் மெக்னீசியம் தசைகள் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. உப்பு உணவுக்கு மட்டுமல்ல பல நோய்களுக்கும் மருந்தாவதோடு, மங்கல நிகழ்வுகளிலும், வழிபாட்டிலும், விவசாயத்திலும் கூட பயன்படுத்தப்படுகிறது. சில கோயில்களில் உப்பு வாங்கிக் கொட்டுவதையும் பார்த்திருக்கிறோம். உப்பானது திருஷ்டி கழிக்கும்போது உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகைய பல்வேறு நன்மைத்தனங்களைத் தன்னிலேக் கொண்ட உப்பு, அதன் சாரத்தை, அதாவது, அதன் இயல்பை இழந்துபோனால் எதைக்கொண்டு நிவர்த்திச் செய்ய முடியும் எனக் கேட்கிறார் இயேசு.

உப்பும் சுதந்திரப் போராட்டமும்

அன்பு நெஞ்சங்களே, இந்த நாட்கள் முக்கியமான நாட்கள். இவை தவக்காலம் என்பதால் மட்டுமல்ல, சரியாக 95 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்களில்தான் அண்ணல் காந்தி உப்பு சத்யாகிரகத்தை நடத்தினார். தண்டி யாத்திரை என்றும் அழைக்கப்படும் உப்புச் சத்தியாகிரகம் என்பது, காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் போராட்டமாக, மார்ச் 12, 1930இல் துவங்கி, மகாத்மா காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தியதாகும்.  ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது. அதாவது, இந்திய சுதந்திரத்துக்கும் உப்புக்கும் உள்ள நெருங்கியத்தொடர்பை இங்கு காண்கிறோம்.

நாம் உப்பாக இருக்கிறோம்

உப்பு நல்லது. ஆனால், அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள் (மாற்கு 9:50) என்று, ஒரு கேள்வியையும் அதைத்தொடர்ந்து ஒரு விண்ணப்பத்தையும் முன்வைக்கிறார் இயேசு.

இதே பகுதி மத்தேயு நற்செய்தியில் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது (மத்தேயு 5:13) என்று கூறுவதைக் காண்கிறோம்.

இயேசு தம் சீடர்களிடம், நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்.

மத்தேயு நற்செய்தி வாசகங்களை நாம் பார்த்தோமானால், நீங்கள் உப்பாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, இருக்கிறீர்கள்" என்று நமக்கு நமது பணியை நினைவுபடுத்துகிறார். "மண்ணுலகிற்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறும்போது இவ்வெண்ணங்களை நம் உள்ளத்தில் அவர் பதிக்கிறார். உலகின் உப்பு நாம் என்று மலைமீது நின்று உலகெல்லாம் கேட்கும்படி நம்மைப் பற்றி, அதாவது அவரின் சீடர்கள் குறித்து, இயேசு பெருமையுடன் பறை சாற்றியுள்ளார். நம்மீது இயேசு கொண்டிருக்கும் இந்த பெரும் எண்ணங்களுக்கு ஏற்ப உப்பாக நாம் வாழ வேண்டியது நமக்கு வலியுறுத்தப்படுகிறது.

ஏன் நம்மை உப்பு என்கிறார் இயேசு?

கொஞ்சம் நாம் ஆழமாகச் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது. உவர்ப்பற்ற பொருள்களையும் உவர்ப்புள்ளதாகவும் உண்ணக்கூடியதாகவும் உப்பு மாற்றுகிறது. கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இயேசுவின் சீடராயிருப்போர் அன்பு, பரிவு, பொறுமை, தாழ்மை போன்ற இறையாட்சியின் பண்புகளை உடையவர்களாக வாழவேண்டும். அப்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மனமாற்றம் அடைந்து உவர்ப்புள்ளவர்களாக மாறுகிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது, மேலும், உப்பு எங்கு சென்று சேருகிறதோ அந்த இடத்தில் எளிதாகக் கலந்து சுவை தருகிறது. உப்பானது தான் இருக்கும் இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும், தன்னுடைய இருப்பை நேரிடையாக வெளிக்காட்டவில்லை என்றாலும், தன்னுடைய சுவை வழியாக தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. உப்பு தன்னை உணவில் கரைத்து சுவையால் நிறைப்பது போல, நாமும் நம்மை மறைத்து பிறர் வாழ்வை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றுவது நம்முடைய மனதையும், வாழ்வையும் சிறப்பாக்கும். பிறர் வாழ்வு சுவையாக மாற நாம் நம்மை கரைக்கவேண்டும். இங்கு தியாகம் வலியுறுத்தப்படுகின்றது. உப்பு பிறர் வாழ்வை சுவைபடுத்திவிட்டு தனக்கான வாழ்வை இழந்துவிடுகிறது. தன்னை அழித்துக்கொள்வதில் அது பெறும் நிறைவே அதன் பிறவிப்பயன். அதனால்தான், சீடர்களை உப்பு என்கிறார் இயேசு.

அடுத்ததாக, உப்பு தூய்மைக்கு அடையாளமாக இருக்கின்றது. நமது வாழ்வும் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கின்றது. பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர் (மாற்கு 9,49) என்று இயேசுவே கூறுகிறார். பலிப்பொருளையே தூய்மையாக்கும் உப்பாக நாம் மாறி, இவ்வுலகம் உய்வுபெற, தூய்மையாக நாம் உழைக்க வேண்டும்.

உப்பு பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்க உதவுகிறது. உணவுப் பொருட்களை மட்டுமல்லாது, இறந்த மனிதர்களுடைய உடலையும் நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பதற்கும் உப்பு பயன்படுகின்றது. உப்பாக இருக்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், இந்த சமூகத்தை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும்.

உப்பை நாம் சுய மரியாதையின் குறியீடாகவும், சுரணையின் குறியீடாகவும் கண்டும் பழகியும் வந்திருக்கிறோம். உப்புப் போட்டுச் சாப்பிடுறியா, என்று சிலர் கேட்பதைக்கூட நாம் செவிமடுத்திருக்கிறோம். நீங்க போட்ட உப்புக்கு நான் துரோகம் செய்யமாட்டேன் என்று கூட சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆகவே, நன்றியுணர்வுடன் வாழவும், நாம் பெற்ற வரங்களுக்கு, அருளுக்கு தகுதியுடையவர்களாக வாழவும் அழைப்புப் பெறுகிறோம்.

உப்பை சம்பளமாக உரோமை போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது; வரலாற்றில் உப்பு பொன்னுக்கு சமமாக விற்பனையாகி இருந்ததை காண்கிறோம். இன்றோ, நாம் காண்பது, எல்லா கடைகளுக்கு முன்பாக ஆதரவற்று இருக்கும் ஒரே பொருள் உப்பு தான். உப்பை ஒருவரும் திருட முடியாத அளவு அதன் விலை மிகவும் மலிவாக இருக்கிறது. உப்பாக இருப்பதன் அர்த்தம் மிகவும் எளிமையாக இருப்பதை வலியுறுத்துவதாக உள்ளது. நாம் விலையேறப்பெற்றவர்கள்; எனினும் நாம் எளிமையாய் இருக்கும்போது, இந்த உலகில் உப்பாய் இருக்கிறோம்.

பூமியிலுள்ள உப்புதான் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு கடலிலே உப்புத் தன்மையை நிறைக்கிறது. உப்பின் தன்மை அது தன்னை பிரம்மாண்டமான கடலிலிருந்து பிரித்துக்கொள்வதில் இருந்து வருகிறது. தன் அழுக்குகளை, தேவையற்றவைகளை சூரிய ஒளியின் உதவியுடன் ஆவியாக்கி, முழு வெண்மையாகிறது. நாமும் இவ்வுலகிலேயே வாழ்ந்தாலும், நம் கறைகளை களைவதுடன், பிறர் தங்கள் கறைகளைக் கழுவவும் உதவ கடமை பெற்றுள்ளோம்.

உப்பாக இருப்பது என்பது சீடத்துவத்தின் ஒரு முக்கிய அங்கம்.

இந்த பின்னணியுடன் இப்போது இயேசுவின் கேள்விக்கு வருவோம்.

உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்?

உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பே, தன் சுவையை இழந்தால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப் பொருட்கள் கலந்தால், அது தன் சுவையை இழந்துவிடும். அதிகப்படியான காற்றால், வெப்பநிலை மாற்றத்தால், நீடித்த காலம் இருப்பதால், வெயில் படுவதால் என பல நிலைகளில் அது சாரம் இழக்கும். ஆக, சீடராக இருப்பதற்கு நம் வெளிப்புறத்தில் இருந்து வரும் தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவோர் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, உலகச் சக்திகளுடன் கலந்துவிட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. பின், சுவையிழந்த, பயனற்ற உப்பு வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.

உலகில் தன்னலத்தோடு வாழ்பவர்கள் வெளிவேடக்காரர்களாகவும் உவர்ப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால் உலகிற்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் உலகில் வாழ்வது வீண் என்று இயேசு அறிவிக்கிறார். உவர்ப்பற்ற உப்பு வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் எச்சரிக்கிறார்.

உருவகங்கள், உவமைகள் வழியே இயேசு கூறிய பல உண்மைகள், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னும், நமக்குள் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. இயேசு பயன்படுத்திய உருவகங்கள் தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை. எவ்வித அடுக்குமொழியோ, அலங்காரமோ இல்லாமல், அவர் உருவகங்களின் உதவியுடன் சொன்ன உண்மைகள், மக்கள் மனங்களில் ஆழமாய், பாடங்களாய் பதிந்தன.

இயல்பை இழந்து விடாதீர்கள்

உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? என்ற இயேசுவின் போதனையைப் பார்க்கும்போது, உங்கள் இயல்பை நீங்கள் எச்சூழலிலும் இழந்து விடாதீர்கள் என்பது, பொட்டில் அடித்தாற்போல் நம் முன் நிற்கிறது.

உப்பின் இயல்பு என்பது அதன் சாரமே. நிறம் இருந்து, வடிவம் இருந்து, அளவு இருந்து சாரம் இல்லை என்றால் அது உப்பைப் போன்ற மண் அவ்வளவுதான். இறைவனின் இயல்பே நம்மிடம், அதாவது, அவரின் சீடர்களிடம், 'உப்பாக,' இருக்கிறது என்பதை உணரவேண்டும். அதாவது, இயேசுவின் சீடர்கள், உலகின் ஒரு பகுதியாய், ஒரு முக்கியப் பகுதியாய் கலந்து, கரைந்து வாழ்கிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று எண்ணிச் செயல்படுவதில்லை. உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும் உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகமும் அவர்களால் பயன்பெறப் போவதில்லை, அவர்களுக்கும் அதனால் பயனில்லை. உலகிற்கு மருந்தாகவும், உலகை அழிவிலிருந்து காக்கவும் இவர்கள் கருவிகளாக இருக்கின்றனர். இறைவனின் இயல்பை இவர்கள் தங்களுடையதாக மாற்றத் தவறினால், அல்லது அந்த இயல்பை இழந்தவர்களாகச் செயல்பட்டால், இயேசுவின் சீடர்கள் என்னும் தகுதி இழந்து, வெளியில் தூக்கி வீசப்படுவர், எவருக்கும் பயனில்லாமல் போவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2024, 15:09