Burkina Faso நாட்டில் துயருறும் கிறிஸ்தவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
Burkina Faso நாட்டு மக்களைக் கொடூரமான நிகழ்வுகள் தாக்கும் சூழலிலும் கூட, அவற்றிற்கு கிறிஸ்தவர்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் பதிலளிப்பதை நம்புகிறார்கள் என்று கூறியுள்ளார் அந்நாட்டிற்கான ஆயர் பேரவையின் தலைவர் Laurent Birfuoré Dabiré.
ஆபிரிக்க நாட்டில் தொடரும் பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் பலர் உயிரிழந்து வரும் வேளை, அதுகுறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ளார் Dori மறைமாவட்டத்தின் ஆயர் Dabiré.
இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் அங்கு அமைதியை ஏற்படுத்துவது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது என்று எடுத்துக்காட்டியுள்ள ஆயர் Dabiré அவர்கள், வன்முறை என்பது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, என்றும், இதில் இஸ்லாமியர்களும் பலியாகி வருகின்றார்கள் என்றும் உரைத்துள்ளார்.
நாட்டில் குழப்பத்தை உருவாக்க மதங்களை கருவிகளாகப் பயன்படுத்துவது, மற்றும் ஒரு மதப் போர் நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி பல்வேறு சமூகங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவதுதான் பயங்கரவாதிகளின் முக்கிமானதொரு நோக்கமாக இருக்கின்றது என்பதையும் அந்நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆயர் Dabiré.
இங்கே கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதில்லை என்று தன்னால் உறுதியாகக் கூறமுடியும் என உரைத்துள்ள ஆயர் Dabiré அவர்கள், விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அழைப்பு விடுத்துள்ளதுடன், வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ளும் சோதனையில் சிக்கிக்கொள்ளாமல், கிறிஸ்தவப் பிறரன்புப் பணிகளைத் தொடருமாறு தனது விசுவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தகைய துயரமான சூழலில், கிறிஸ்தவர்களாகிய நாம் நற்செய்தியின் அடிப்படையில் நமது வாழ்க்கையை கட்டி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று உரைத்த ஆயர் Dabiré அவர்கள், மற்றவர்களுடனான நமது உறவானது, சகோதரத்துவம், நட்பு, ஒருவருக்கொருவர் உதவுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, யாதெங்கா மாநிலத்திலுள்ள கொம்சில்கா, நோடின் மற்றும் சோரோ கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 170 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், எந்தத் தீவிரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது என்பது இதுவரைத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்