மனித வர்த்தகம் மனித வர்த்தகம்   (Copyright Marlon Lopez MMG1design. All rights reserved.)

இந்தோனேசியாவில் மனித வர்த்தகத்தை நிறுத்த வேண்டுகோள்!

ஒவ்வொரு ஆண்டும் இந்தோனேசியாவின் கலிமந்தன் மாநிலத்தில் ஏறத்தாழ 1000 பேர் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கடத்தப்படுகின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தோனேசியாவின் கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் புளோரஸ் தீவில் மனித வர்த்தகத்தை நிறுத்துமாறு கிறிஸ்தவ ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தன் மாநிலத்தில் பட்டினியால் தொழிலாளி ஒருவர் அண்மையில் இறந்ததை அடுத்து, கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் புளோரஸ் தீவில் மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை வலியுத்தியுள்ளனர் கிறிஸ்தவ ஆர்வலர்கள் என்றும் தெரிவிக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறிய மனிதாபிமான தானார்வக் குழுவின் (TRUK) ஒருங்கிணைப்பாளரும், தூய ஆவியார் துறவு சபையைச் சேர்ந்தவருமான அருள்சகோதரி Maria Fransiska Imakulata அவர்கள், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் படகில் கடத்தப்பட்டனர் என்றும்,  சரியான உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் கிழக்கு கலிமந்தனில் உள்ள பாமாயில் நிறுவனத்தில் அவர்கள் கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மனித வர்த்தகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அருள்சகோதரி Imakulata அவர்கள், இதுசமந்தமாக,  ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், இதில் தொடர்புடைய அரசியல்வாதியை கைது செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிக்கா பகுதியில் வசிக்கும் 40 வயதான யோடிமஸ் மோன் காக்கா (Yodimus Moan Kaka) என்பவர், கடந்த மார்ச் 28, வியாழனன்று  பட்டினியால் இறந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி மரியா ஹெர்லினா எம்பானி (Maria Herlina Mbani), ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமையன்று,  சிக்காவில் தனது கணவருடன் மேலும் 70 பேர் அரசியல்வாதியான யுவினஸ் சோலோ என்பவரால் பணியமர்த்தப்பட்டதாகக் காவல் துறையில் புகார் செய்துள்ளார். தற்போது காக்காவின் மனைவி எம்பானி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகின்றார் அருள்சகோதரி Imakulata.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2024, 12:29