தடம் தந்த தகைமை - கனிவுடையோர் பேறுபெற்றோர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் (மத்தேயு 5:5) என்றார் இயேசு.
கனிவு - அது கருணையோடு கைகோர்த்து நிற்பதாகத் தோன்றலாம். ஆனால் அதன் கால்கள் நீதியெனும் அடித்தளத்தில் நிலைபதித்திருக்கும். இயேசு கனிவின் மனம் கொண்டவர். எனவேதான் 'நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்' (மத் 11:29) என தன்னைப் பற்றிச் சொன்னார். அவர் சொன்ன கனிவு அடிமைப்படுத்துவோருக்கும், அநீதர்க்கும் 'ஆமாம்' போட்டு 'அடுத்திருப்போர்க்கு என்ன நடந்தால் எனக்கென்ன' என அமைதியாகப் போகுதல் அல்ல. உண்மையான கனிவு கடையருக்காகக் கர்ச்சிக்கும் தன்மை உடையது. தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களின் அடிமைத்தனங்களை அறுத்தெறியப் போராடிய நெல்சன் மண்டேலா என்ற மாமனிதர் 27 ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார். அவ்வேளையில் சில குடும்பக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அரசு அனுமதித்த பின்னும் அதை ஏற்காமல் எழுச்சியோடு போராடிய போராளி. அந்த உணர்வுதான் கறுப்பின மக்கள் மீதான கனிவு. அது நீதியும் நேயமும் சார்ந்தது. அந்தக் கனிவின் மனிதரே 1993-ல் விடுதலை பெற்றத் தென் ஆப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி. இவரது வாழ்வு இயேசுவின் இச்சொல்லுக்குச் சுவை சேர்ப்பது போலன்றோ! கனிவு இல்லாக் கிறிஸ்தவம் போலிக் கிறிஸ்தவம்.
இறைவா! கனிவை இதயம் சுமந்து மண்ணில் வாழும் நாளெல்லாம் கனி தரும் மனிதனாய் வாழ வரம் பொழியும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்