தடம் தந்த தகைமை – தோற்கடிக்கப்பட்ட சிரியா படை
மெரினா ராஜ் – வத்திக்கான்
சிரியா நாட்டின் அரசன், “நீங்கள் போய், எலிசா இறைவாக்கினர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்” என்றான். ‘அவர் தோத்தானில் இருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆதலால், அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர். கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, “ஐயோ! என் தலைவரே, என்ன செய்வோம்?” என்று கதறினான். அதற்கு அவர், “அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்” என்றார்.
பின்பு எலிசா, “ஆண்டவரே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்!” என்று வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ! மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான். சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, “இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்” என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, “இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன்” என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்