தடம் தந்த தகைமை – பாவிகளையே அழைக்க வந்தேன்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பரிசேயர் இயேசுவின் சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
கடவுளின் படைப்பில் பாகுபாடுகள் ஏதுமில்லை. பாகுபாடுகள் படைக்கப்பட்டது மனிதராலே. யூத சமூகத்தில் உரோமை அரசு தலைவரி, நிலவரி, சுங்கவரி எனப் பல்வேறு வசூல்களை மேற்கொண்டது. அதற்கென சில யூதர்களையே பயன்படுத்தியது. விதிக்கப்பட்ட வரிக்கு மேலாக வாங்கிச் சுருட்டும் திருட்டுப் பழக்கம் வரி தண்டுவோரிடம் இருந்ததால் அவர்களை இழிவாகப் பார்க்கும் மனநிலை மண்டிக் கிடந்தது. அத்தகையவர்களோடு இயேசு பந்தியலமர்ந்து விருந்துண்டது விமர்சனத்துடன் கூடிய கேள்வியாக்கப்பட்டது. இந்த வரி தண்டுபவர்களோடு பாவிகள் என ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டனர். யூதர்களின் பார்வையில் யார் பாவிகள்? ஏழைகள், மாற்றுத்திறனாளர்கள், வாழ வழியற்றவர்கள், கைம்பெண்கள், அரசாலும் சமூகத்தாலும் சமயத்தாலும் பின்தள்ளப்பட்டு பொருளாதாரத்தில் வலுவற்ற வறியவர்கள் மற்றும் நோயுற்றோர். அவர்களை அரவணைப்பதும் ஆற்றுப்படுத்துவதும் உடனிருப்பதும் உறவு கொண்டாடுவதும் சக மனிதரின் பணி. அதனைக் கடவுள் பலியாகப் பார்க்கின்றார்.
இறைவாக்கினர் ஓசெயின் (6:6) ஓசையில் இயேசு பேசியது முற்றிலும் உண்மையே. உண்மையான பலி என்பது பரிவுமிகு பாசப் பணிகளே. வறியோரிடம் பரிவு காட்டும் உணர்வைப் புறந்தள்ளி தலைசிறந்த பக்தியில் வளர முயல்வது ஆபத்தானது.
இறைவா! சமூகத்தில் நலிந்தவர்களுடன் நல்லுறவோடு வாழும் நன்மனதைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்