தடம் தந்த தகைமை - கவலைப் படுவதால்.....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? எனக் கேட்கிறார் இயேசு.
மீன்கள் அகப்படுவது வலையிலே. மனிதன் அகப்படுவது கவலையிலே. வலையில் அகப்பட்ட மீனுக்கு வாழ்வு கேள்வியாவது போல் கவலையோடு வாழும் மனிதனுக்கு வாழ்வென்பது பெருங்கேள்வியே. கவலையைத் துறக்கத்தான் இந்த அழகு பொழியும் உலகம், அதில் சிரிக்கும் படைப்புகள், பாசம் கலந்த உறவுகள், பண்பு - திறன் - கலை - கலாச்சாரம் - பொழுதுபோக்கு என எல்லாமே. யாவும் கடவுளின் கரையில்லாக் கொடைகள். அவற்றை விடுத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பது கடவுளைப் பழிப்பது போலன்றோ!
சிரித்து வாழ்வோரெல்லாம் கவலையற்றவர்களல்லர்; கவலையைத் துறந்து வாழக் கற்றவர்கள். இத்தெய்வீகக் கலையில் திளைத்தவர் இயேசு. இறையாட்சிப் பணியில் அவர் ஏற்ற சவால்களும், எதிர்கொண்ட எதிர்ப்புகளும் ஏராளம் ஏராளம். அவற்றைத் தாண்டிச் செல்வதில் தனி இன்பம் கண்டார். அடுத்தவரின் கவலைகளைக் கலைத்துவிடத் துடிப்பவரைத் தாக்கும் கவலைகளைக் கலைப்பதே ஒரு கலை. அநீதி, வன்மம், பாகுபாடுகளைக் கண்டும் கவலைப்படாதவரைக் கண்டு கவலைப்படுவோம்.
இறைவா! எனக்கென, இந்த உலகிற்கென நீர் உடன் வாழ்கின்றீர். இனி கவலையைக் கடந்து வாழும் துணிவு தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்