உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு உதவி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சூடானில் மோதல் வெடித்து ஓராண்டாகியுள்ள வேளை, ஐரோப்பிய ஒன்றியம் ஏப்ரல் 15, இத்திங்களன்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து சூடான் மற்றும் அண்டை நாடுகளுக்கான அனைத்துலக மனிதாபிமான மாநாட்டை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் உலகின் மிக மோசமான மனிதாபிமான மற்றும், மிகப்பெரிய இடப்பெயர்வு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு ஆதரவை அதிகரிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
ஐரோப்பிய ஆணையம் சூடான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கான மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு நிதி இரண்டிலும் 355 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு உதவி வழங்க உறுதியளித்துள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் 541 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு உதவ உறுதியளித்துள்ளது என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிமொழிக்குப் பதிலளித்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையின் அதிகாரப்பூர்வ உதவி நிறுவனமான CAFOD, சூடான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ள பல்வேறு நாடுகளின் உறுதிமொழிகளை வரவேற்பதாகக் கூறியுள்ளதாகவும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.
கடந்த ஓராண்டாக சூடானில் உள்ள போட்டி இராணுவ குழுக்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் போர் அதன் 5 கோடியே 10 இலட்ச மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பஞ்சத்தின் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அவசரகால உணவு மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறவேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கும் தள்ளியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்