இறைமக்களுடன் கர்தினால் Vincent Nichols இறைமக்களுடன் கர்தினால் Vincent Nichols 

இயேசுவின் உயிர்ப்பு நமக்கான புதிய வழியைத் திறந்துள்ளது

நமது அன்றாட பணிகள் வழியாக நாம் ஒருவருக்கொருவர் அன்பில் வாழ வேண்டும் என்பதும், முக்கியமான தருணங்களில், சுயநலத்தை மறந்து பிறரன்புப் பணியாற்ற வேண்டும் என்பதும் நமக்கான இயேசுவின் உயிர்புச் செய்தியாக அமைகிறது : கர்தினால் Vincent Nichols

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவின் உயிர்ப்பில் நாம் புதியதொரு வெற்றியைக் கொண்டாடுகின்றோம் என்றும் அது நமக்கொரு புதிய மற்றும் அற்புதமான வழியைத் திறந்துள்ளது என்றும் கூறினார் கர்தினால் Vincent Nichols

மார்ச் 31, இஞ்ஞாயிறு இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டரிலுள்ள மறைமாவட்டப் பேராலயத்தில் நிகழ்ந்த உயிர்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறிய கர்தினால் Nichols அவர்கள், சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு நமது வாழ்வின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கின்றார் என்று உரைத்தார்.

இயேசு இப்புவியில் வாழ்ந்த நாட்களில், இந்த உண்மையான வாழ்க்கை முறையின் படிப்பினைகளை வாழ்ந்து காட்டினார் என்றும், சேவை மற்றும் தியாகம் என்ற இரண்டு வார்த்தைகளில் அவற்றை சுருக்கமாகக் கூறலாம் என்றும் உரைத்த கர்தினால் Nichols அவர்கள், இதுவே மகத்துவத்திற்கான பாதையாகும் என்றும், இது இயேசுவின் பாதம் கழுவுவதிலும், சிலுவைப் பலியிலும் வெளிப்பட்டது என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்தச் சேவை மற்றும் தியாகதின் வழியாக ஒன்றிணைந்த மனநிலையில் வறுமையை ஒழிக்கவும், போரிடும் இருதரப்பினரிடையே அமைதியை ஏற்படுத்தவும், இல்லம் மற்றும் சமுதாயத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் முடியும் என்பதால், இவை இரண்டின் வல்லமை நம் உலகில் ஊற்றப்படவேண்டுமென இறைவேண்டல் செய்வோம் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Nichols.

பயனைத் தவிர வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் இல்லை என்பதால், பிறருக்குப் பயன்படாத வாழ்க்கையைத் தக்கவைப்பதில் வளங்களை வீணாக்காமல் இருக்க வேண்டிய கடமை நமக்கு இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Nichols அவர்கள், அந்த இழிவுபடுத்தும் கண்ணோட்டத்தில் இருந்து இயேசுவின் உயிர்ப்பு நம்மை விடுவிக்கிறது என்றும், இயேசுவின் உயிர்ப்பை மரணம் தனது பிடியில் வைத்திருக்க முடியவில்லை என்றும் விளக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2024, 15:38