எருசலேமில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றும் கர்தினால் Pierbattista Pizzaballa எருசலேமில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றும் கர்தினால் Pierbattista Pizzaballa 

அன்பால் மட்டுமே மரணத்தை வென்று, காலத்தின் எல்லையை கடக்க முடியும்!

இயேசுவின் உயிர்ப்புப் பற்றிய நற்செய்தி உத்வேகமும் வாழ்வும் நிறைந்த நற்செய்தி. இன்றளவும் நம்மை வந்தடைந்து நம் நெஞ்சைத் தொடும் வாழ்வியல் வார்த்தை அது : கர்தினால் Pierbattista Pizzaballa

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்று நாம் மறைபொருளாகக் கொண்டாடும் கிறிஸ்துவின் பாஸ்காவை, நம்முடைய இந்தத் தலத்திருஅவையின் வாழ்க்கையிலும், முழு புனித பூமியிலும் நாம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்ண்டார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.

மார்ச் 31, இஞ்ஞாயிறு காலை, எருசலேமின் கல்லறைக் கோவிலில் கொண்டாடப்பட்ட இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்த கர்தினால் Pizzaballa அவர்கள், நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும் பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்துவரும் இச்சூழலில், ஆண்டவரின் உயிர்ப்பு கொண்டு வரும் வாழ்க்கை, அன்பு மற்றும் ஒளியின் நற்செய்தியை நாம் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய நற்செய்தி இரவு மற்றும் இருளைப் பற்றி பேசுகிறது, அவை இனி நம்மை பேரச்சத்தில் ஆழ்த்தமுடியாது, ஏனென்றால் அவை உதயமாகும் காலையின் வெளிச்சத்திற்கு (இயேசுவின் உயிர்ப்பிற்கு) அடிபணிய உள்ளன என்று எடுத்துக்காட்டிய கர்தினால் Pizzaballa அவர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பற்றிய நற்செய்தி உத்வேகமும் வாழ்வும் நிறைந்த நற்செய்தி என்றும், இன்றளவும் நம்மை வந்தடைந்து நம் நெஞ்சைத் தொடும் வாழ்வியல் வார்த்தை அது என்றும் சுட்டிக்காட்டினார்.

உண்மையில், நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல், வன்முறை மற்றும் போரின் இந்த இரவு ஒருபோதும் முடிவடையவில்லை. எல்லாமே அவநம்பிக்கையில் மறைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரே வலுவான மற்றும் தீர்க்கமான குரல் ஆயுதங்களின் குரல் என்று தெரிகிறது என்றும் தனது கவலையை பதிவு செய்தார் கர்தினால் Pizzaballa.

இந்த மிகப்பெரிய நெருக்கடி, வேறுபாடு இல்லாமல், நம் அனைவரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது என்றும், இந்தச் சோகத்தால் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர் என்றும் விளக்கிய கர்தினால் Pizzaballa அவர்கள்,  ஆனால் காலத்தைப் புரிந்து கொள்ளவும், விளக்கவும் முடியாது என்றாலும், இழந்தவற்றை மீண்டும் தொடங்குவதற்கான நேரம் என்ற ஒன்றை நாம் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம் என்றும் உரைத்தார்.

ஆகவே, நமது தனிப்பட்ட உறவுகளில், மதங்களுக்கிடையிலான உரையாடல்களில், அரசியல் வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில், எதுவும் நடக்காதது போல் நாம் மீண்டும் வாழ முடியாது என்றும், நமக்கு  ஒரு புதிய ஆற்றல், ஒரு புதிய வேகம், ஒரு புதிய பார்வை தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார் கர்தினால் Pizzaballa.

நம்பிக்கை, அமைதி, உண்மை, மன்னிப்பு மற்றும் சந்திப்பு போன்ற வார்த்தைகள் மீண்டும் அர்த்தமுள்ளதாக மாறுவதற்கும், அவைகள் நம் அனைவராலும் நம்பத்தகுந்தவையாக உணரப்படுவதற்கும் நாம் தீவிரமான அர்ப்பணிப்பை வழங்க வேண்டும் என அழைப்புவிடுத்த கர்தினால் Pizzaballa அவர்கள், மிகவும் ஆழமாகக் காயப்பட்ட நம்பிக்கையை மீண்டும் உருவாக்குங்கள் என்றும் விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தலத்திருஅவையினாராகிய நாம் இயேசுவின் இறையாட்சிக் குடிகொண்டிருக்கும் மற்றும், இயேசு உயிர்வாழும் இடமாகத் திகழ்கின்றோம் என்று கூறிய  கர்தினால் Pizzaballa அவர்கள், நமது கிறிஸ்தவ சமூகம் செயல்பாடுள்ளதாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கினார்.

இன்றைய நிலையில் இயேசுவின் உயிர்ப்பை வாழ்ந்து காட்டுவது மற்றும், அவரது உயிர்ப்பின் மக்களாக இருப்பது என்பது, தறிக்கும் இரவைக் கண்டு அச்சம் கொள்ளாமல், நமது பூட்டிய அறைக்குள் பயத்தால் பீடிக்கப்பட்டு அடைந்துகிடக்காமல் ஒவ்வொரு உயிரின் மனித மாண்பைக் காக்க துணிவுபெறவேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது என்றும் தெரிவித்தார் கர்தினால் Pizzaballa.

உயிர்த்தெழுதல் என்பது நம்மில் இயேசுவினுடைய வாழ்க்கை மற்றும், அவருடைய வல்லமையான அன்பின் திடீர் நுழைவு என்பதனால்தான், நாம் அனைவரும் வெறுமனே கல்லறையை மட்டுமே பார்த்துக்கொண்டிராமல் வெளியே சென்று, திருஅவையிலும் திருஅவையுடனும் வாழ்க்கை மற்றும் அன்பின் உறவுகளில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாட்டை வேகத்துடன் மீண்டும் தொடங்க விரும்புகிறோம் என்றும் எடுத்துக்காட்டினார் கர்தினால் Pizzaballa.

உயிர்த்தெழுதலின் அனுபவத்தைப் பிறருடன் நாம் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அது வாழ்ந்த, அனுபவித்த மற்றும் நற்செய்தி அறிவிக்கப்பட்ட வாழ்க்கையாக மாறாவிட்டால், நாம் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்று கூறிய கர்தினால் Pizzaballa அவர்கள், அதனால்தான் இன்றும், நம் குடும்பங்களிலும், முதியோர் இல்லங்களிலும், ஏழைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பணிகளிலும், பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும், சிறைகளிலும், தொடர்ந்து தங்கள் உயிரைக் கொடுக்கும் பலரின் மகிழ்ச்சியில், அதையே நாம் அர்ப்பணிக்க விரும்புகிறோம் என்றும் விவரித்தார்.

அன்பால் மட்டுமே மரணத்தை வென்று காலத்தின் எல்லையைக் கடக்க முடியும் என்றும், ஆகவே, நமது கிறிஸ்தவ சமூகத்தின் வாழ்வில் நாம் தேர்ந்துதெளியும் அன்பை உயிர்த்த ஆண்டவரிடம் கொடையாகக் கேட்போம் என்றும்  விண்ணப்பித்தார் கர்தினால் Pizzaballa. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2024, 15:25