மியான்மாரின் கிராமத்தில் 50 வீடுகளுக்கு இராணுவம் தீவைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மார்ச் 28, புனித வியாழனன்று மியான்மரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கத்தோலிக்க கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஒரு பள்ளி கட்டிடம் அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது என்று கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
கத்தோலிக்கர்களும் புத்தமதத்தினரும் பல ஆண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் கிராமமான மோன் ஹலா மீது நிகழ்த்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்றும், அந்த உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தில் புத்தமதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் அதிகம் இருந்தனர் என்றும் தெரிவிக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்தக் கிராமம் ஏற்கனவே பல தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்றும், கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 20- ஆம் தேதியன்று, இங்குள்ள 350 வீடுகளில் குறைந்தது 320 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இந்தக் கிராமங்கள் பல ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் அருட்கன்னியரை தலத்திருஅவைக்குத் தந்துள்ளன என்றும் யாங்கூனின் கர்தினால் சார்லஸ் போ மற்றும் மாண்டலேயின் பேராயர் மார்கோ டின், மோன் ஹலா கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாட்டில் அமைதிக்காக இறைவேண்டல் செய்ய கர்தினால் சார்லஸ் போ அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு Mon Hla கிராமத்தின்மீது இந்த அண்மைய தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்