தூய ஆவியார் தூய ஆவியார்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-6, தூய ஆவியை இழக்காதிருப்போம்!

நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள தூய ஆவியாரை, நமது பாவச் செயல்களால் இழந்துவிடாதிருப்போம்!
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-6, தூய ஆவியை இழக்காதிருப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

மன்னர் ஒருவர் நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தார். தனக்கு அறிவுரை கூறும் அனைவரும் ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்தால் தன்னுடைய ஆட்சி சிறப்பாக நடக்கும் என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். பண்டிதர் ஒருவர் அம்மன்னருக்கு உற்ற நண்பனாய் இருந்தார். ஒரு நாள் மன்னருக்கு ஒரு மிக பெரிய சந்தேகம் ஏற்பட்டது. பண்டிதரை அழைத்து, "என் உயிர் நண்பரே, நீங்கள் ஒரு சிறந்த பண்டிதர் என்பதை நான் நன்கு அறிவேன் ஆகையால் என் சந்தேகத்தை நீங்கள் தான் தீர்த்துவைக்க வேண்டும்" என்று கூறி, “பாவத்தின் தந்தை யார்?” என வினவினார். இதற்கான விடை பண்டிதருக்குத் தெரியவில்லை. அதனால் மன்னர் அவரிடம், "இப்போதே விட கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் கண்டிப்பாக இதற்கான விடையை நீங்க கூற வேண்டும். இல்லையேல் அதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார். சோகத்தோடு வீடு திரும்பிய பண்டிதர், தன்னிடம் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் புரட்டினார். ஆனால் எதிலும் விடை கிடைக்கவில்லை. அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தனக்குத் தெரிந்த மற்ற பண்டிதர்களிடம் இது குறித்துக் கேட்டுப் பார்த்தார். ஆனால் யாருக்கும் விடைதெரியவில்லை. நாட்கள் கடந்து கொண்டிருந்தன. "மன்னர் கொடுத்த கால அவகாசம் நாளையோடு முடிகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லையே" என்று புலம்பியவாறு ஒரு தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் வருகையை கவனித்த ஒரு விலைமகள், "என்ன பண்டிதரே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள், ஏன் இன்று மிகுந்த சோகத்தோடு இருக்கிறீர்கள்" என்று கேட்டாள். அப்போது அவளிடம் தனக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து விளக்கினார். "அட இவ்வளவு தானா, இந்தக் கேள்விக்கான விடை எனக்குத் தெரியுமே" என்றாள் அப்பெண். மிகவும் மகிழ்ந்த பண்டிதர், "உனக்கு விடை தெரியுமா? தயவு செய்து சொல்" என்று கேட்டார். "சரி நான் விடையை கூறுகிறேன் ஆனால் நீங்கள் என் வீட்டிற்கு இப்போது வர வேண்டும். அதற்காக நான் உங்களுக்கு ஒரு பொற்காசையும் தருகிறேன்" என்றாள். விலைமகளின் வீட்டிற்கு எப்படி செல்வது என்று ஒரு நொடி சிந்தித்த பண்டிதர், நமக்கு இப்போது விடைதான் முக்கியம். ஆகையால் அவள் வீட்டிற்குச் சென்று வந்த பிறகு ஏதேனும் பரிகாரம் செய்துகொள்ளலாம் என்று எண்ணியவாறு அவள் வீட்டிற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரிடம் ஒரு பொற்காசை கொடுத்தாள். அப்போது, "என் கேள்விக்கான விடையை கூறு" என்று பண்டிதர் கேட்டார். அதற்கு அவள், "வாருங்கள் என் படுக்கை அறைக்குச் செல்லலாம் அங்கு நான் விடையை கூறுகிறேன். அதோடு உங்களுக்கு 10 பொற்காசுகளையும் தருகிறேன்" என்றாள். ‘விடையோடு சேர்ந்து 10 பொற்காசுகளா! இது நன்றாக இருக்கிறதே!’ என்று எண்ணிவாறு அவளின் படுக்கை அறைக்குச்  சென்றார். அங்கு அவள் சொன்னபடியே 10 பொற்காசுகளை கொடுத்தாள். "சரி, இப்போது விடையை கூறு" என்று கேட்டார் பண்டிதர். உடனே அப்பெண், "வந்தது வந்தீர்கள் என் மடியில் சற்று நேரம் அமருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு விடையைக் கூறி, 50 பொற்காசுகள் தருகிறேன்" என்றாள். ‘ஆகா! இது என்ன அற்புதம்! பெண்ணின் மடி, 50 பொற்காசுகள் அதோடு விடையும் கிடைக்கிறது. என்ன நடந்தாலும் பரிகாரம் செய்து நம் பாவத்தை போக்கிக்கொள்ளலாம்’ என்று எண்ணிவாறு அவள் மடியில் அமரச் சென்றார் பண்டிதர். உடனே அந்தப் பெண், பண்டிதருக்கு பளார் என ஓங்கி ஓர் அறைவிட்டாள்.  பண்டிதருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது அந்தப் பெண், "பாவத்தின் தந்தை யார் என்று இப்போது புரிகிறதா? ஆசை தான் பாவத்தின் தந்தை” என்றாள். இதை கேட்டதும் பண்டிதர் தான் செய்த தவறை உணர்ந்தார், தான் பெற்ற பொற்காசுகள் அனைத்தையும் அவளிடமே கொடுத்துவிட்டு, மன்னிப்பு வேண்டியவாறு, மன்னரைக்  காண விரைந்து சென்றார். அரண்மனையை அடைந்ததும், 'மன்னா மன்னா' எனக்  கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார். மன்னரைக் கண்டதும், "ஆசை தான் பாவத்திற்கான தந்தை மன்னா" என்று கூறினார். அதோடு இந்த விடையை யார் அவரிடம் கூறியது என்ற முழு விவரத்தையும் மன்னரிடம் சொன்னார். தன் கேள்விக்கான விடையை அறிந்ததும் மன்னர் மனம் மகிழ்ந்து, ஆகா எத்தனை அற்புதமான விளக்கம்! என்று கூறினார். அப்போது பண்டிதர் தான் செய்த தவறுக்குத் தண்டனை தரும்படி மன்னரிடம் வேண்டினார். அதற்கு மன்னர், "நீங்கள் உங்கள் தவறை எப்போதோ உணர்ந்து விட்டீர்கள். ஆகையால் உங்களுக்குத் தண்டனை ஏதும் இல்லை" என்றார்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தூயதோர் உள்ளம் பெறுவோம்!’ என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 10-வது இறைவார்த்தைக் குறித்து மட்டும் தியானித்தோம். குறிப்பாக, தூய ஆவியாரின் துணைகொண்டு நம் பாவங்களை களையவும், நம்மை பாவமற்ற புதிய வாழ்விற்குப் புதுப்பித்துக்கொள்ளவும் இறையருள்  வேண்டி மன்றாடினோம். இவ்வாரம், 11-வது இறைவார்த்தையைக் குறித்து மட்டும் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அந்த இறைவார்த்தையை வாசிப்போம். "உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்" (வச. 11). பொதுவாக ஒருமனிதரை கடவுளிடமிருந்து அந்நியப்படுத்துவது அவர் செய்யும் பாவங்கள்தாம். பாவத்தின் ஆணிவேர் ஆசை என்று மேற்கண்ட கதையில் கண்டோம். தாவீதுக்கு எல்லாவற்றையும், அவர் விரும்பியதற்கும் மேலாகவே கடவுள் அருளியிருந்தார். ஆனால் தாவீது, தீய ஆவியின் தூண்டுதலால்  பெரும்காமத்தில் விழுந்து இந்தப் பாவத்தைப் புரிகின்றார். ஒரு மனிதர் அவர் ஆண்டியாக இருந்தாலும் சரி, அல்லது அரசராக இருந்தாலும் சரி, இந்தப் பாவ இச்சையின் சோதனையிலிருந்து  தப்பிப்பது கடினம்தான். இது நமது உணர்வுகளுடன் ஒன்றிப்போன ஒன்றுதான். இந்த உணர்வுகள் வழியாகத்தான் அலகையான பகைவன் தனக்கே உரிய ஊனியல்புக்குரிய ஆசைகளை நம்மில் தூண்டி எழுப்புகின்றான். இவற்றிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமெனில், நாம் தூய ஆவியாரின் துணையைக் கண்டிப்பாக கைக்கொள்ள வேண்டும். அதனால்தான், "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்" என்று தாவீது உருக்கமாகக் கடவுளிடம் இறைவேண்டல் செய்ததைக் குறித்து கடந்த வாரம் நாம் தியானித்தோம்.

இன்று நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தையில் இரண்டு கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் தாவீது அரசர். முதலாவதாக, "உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்" என்கின்றார். இதன் பொருள் என்ன? தாவீது தான் இறைவன்மீது கொண்டிருந்த பிரமாணிக்கத்தின் காரணமாக, அனைத்துவிதமான வெற்றிகளையும் பெற்றார். அவருக்குக் கிடைத்த முதல் வெற்றி, ஓர் இளைஞனாக அவர் கோலியாத்தை வென்றதுதான். அதன் பிறகு சவுல் மன்னர் அவர்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவரைக் கொல்ல முயன்றபோது, அத்தகையதொரு இக்கட்டான சூழலில் கடவுள் அவருக்குப் பெருந்துணையாக நின்று அவரைக் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர், கடவுள் அவரது எதிரிகள் அனைவரையும் ஒழித்து அவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்தார். ஆக, இவை அனைத்திற்கும் காரணம் கடவுளின் உடனிருப்பும் அவரது பேரன்பும் என்பதை தாவீது நன்றாகவே உணர்ந்திருந்தார். ஆனால் அவர் உரியாவின் மனைவி பெத்சேபாவுடன் பாவம் புரிந்தபிறகு கடவுளிடமிருந்து வெகுதொலைவிற்குச் சென்றுவிட்டதாக உணர்கின்றார். தான் செய்த பாவத்தின் காரணமாக, கடவுள் தன்னை புறக்கணித்து விட்டதாக நினைக்கத் தொடங்குகின்றார். இன்னும் சொல்லப்போனால் கடவுளின் உடனிருப்பும் பேரன்பும் தன்னை விட்டு அகன்றுவிட்டதாகவே புலம்பி அழுகிறார். இதே நிலை நீடித்தால், எங்கே தான் கடவுளிடமிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில், "கடவுளே, உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்" என்று கதறித்துடிக்கின்றார் தாவீது. மேலும், "ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும். என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்" (காண்க. திபா 38:21-22) என்றும், "ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும்; என்னைக் கைவிடாதிரும்" (காண்க. திபா 27:7-9) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் இதே கருத்தைக் கூறி இறைவேண்டல் செய்கின்றார் தாவீது.

இரண்டாவதாக, "உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்" என்று கூறி மீண்டும் தூய ஆவியின் பெரும்துணையை வேண்டுகின்றார் தாவீது. தூய ஆவியார் ஞானத்தின் ஊற்றாக விளங்குகின்றார். குறிப்பாக, தூய ஆவியார் என்றாலே, 'தெளிந்து தேர்தலில்' துணையிருப்பவர் என்பதை நாம் அறிவோம். இங்கே 'தெளிந்து தேர்தல்' என்பது சரியானதைத் தேர்வு செய்வது. எது சரி, எது தவறு? எது தூய ஆவியாரிடமிருந்து வருவது, எது தீய ஆவியிடமிருந்து வருவது? கடவுள் விரும்புவது எது, வெறுப்பது எது, எந்த வழியில் பயணிப்பது, எந்த வழியைத்  தவிர்ப்பது என்பதையெல்லாம் தூய ஆவியார் வழங்கும் ‘தெளிந்து தேர்தல்’ என்ற அருள்கொடை வழியாகத்தான் அறிந்துணர முடியும். மேலும் இந்தத் தெளிந்து தேர்தலை செயல்படுத்த நமக்கு ஞானம் தேவைப்படுகிறது. இந்த ஞானம் வேண்டுமென்றால் நமக்குத் தூய ஆவியார் தேவைப்படுகிறார். இந்தத் தூய ஆவியார் நமக்கு வேண்டுமெனில் நம்மில் பாவம் இருக்கக் கூடாது. பாவம் இருக்கும் இடத்தில தூய ஆவியார் இருக்க மாட்டார். ஆக, தான் புரிந்த பாவத்தால் தூய ஆவியார் தன்னிடமிருந்து அகன்று போய்விடக்கூடாது என்பதனாலலேயே, "கடவுளே, உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்" என்கின்றார் தாவீது.

மேலும் ஊனியல்பால் வருவது பாவம், தூய ஆவியால் வருவது வாழ்வு என்று  பவுலடியாரும் எடுத்துக்காட்டுகின்றார். ‘ஊனியல்பால் விளைவது பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்’ என்றும், ‘தூய ஆவியால் விளைவது அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்’ (காண்க. கலா 4:19-22) என்றும் விளக்குகின்றார். ஆகவே, நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள தூய ஆவியாரை, நமது பாவச் செயல்களால் இழந்துவிடாதிருக்க இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2024, 13:04