இந்தியப் பள்ளி மாணவர்கள் இந்தியப் பள்ளி மாணவர்கள்   (AFP or licensors)

இந்திய கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு CBCI-இன் புதிய வழிகாட்டுதல்கள்!

இந்தியாவின் அடிப்படை சாராம்சமான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்தப் புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய குறிக்கோள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI), தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது கிறிஸ்தவ மரபுகளைத் திணிக்காமல், அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை ஊக்குவிக்க அறிக்கை ஒன்றில் அழைப்பு விடுத்துள்ளதாகக்  கூறியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.

கத்தோலிக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தினமும் காலையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும் அது பொறிக்கப்படலாம் என்றும், அதன் வளாகத்தில் அனைத்துமத  இறைவேண்டல் அறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில்  இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை பரிந்துரைத்துள்ளது எனவும் மேலும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இதுகுறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கல்வி மற்றும் கலாச்சார அலுவலகத்தின் தலைவர் பேராயர் Elias Gonsalves அவர்கள், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்விப் பணிக்குழு மற்றும் கலாச்சார அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட 13 பக்க வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல் ஆவணம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளைப் போலவே, கலாச்சார மற்றும் கல்விக்கான ஆணையத்தால் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றாலும், இம்முறை வரவிருக்கும் பொதுத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர் Gonsalves.

இந்தியாவில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவை ஏறத்தாழ 14,000 பள்ளிகள், 650 கல்லூரிகள், ஏழு பல்கலைக் கழகங்கள், ஐந்து மருத்துவத்துறைகள் மற்றும் 450 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2024, 11:15