உயிர்த்தெழுந்த இயேசு உயிர்த்தெழுந்த இயேசு 

விடை தேடும் வினாக்கள் - ஏன் என்னைக் கைவிட்டீர்?

இயேசுவின் பாடுகளைக் கூர்ந்து கவனித்தால், நம்மைப் பலம் உள்ளவர்களாக மாற்ற அவரே திட்டமிட்டு தன் மீது தானே வரவழைத்துக் கொள்கிறார் பலவீனத்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசுவைப் போல் ஒவ்வொருவரும் வாழவேண்டும், கிறிஸ்து அவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாழவேண்டும் என கிறிஸ்தவப் பெற்றோர்களால் ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படுகிறது. ஆனால் காலம் செல்ல செல்ல நம் விசுவாசம் தடுமாறுகிறது, குறைபடுகிறது, சிலவேளை காணாமலும் போய்விடுகிறது. நாம் கிறிஸ்துவாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் இயேசு நாமாக வாழ்ந்தார் என்பது மிகப்பெரும் மறையுண்மை. நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, அவர் கூறிய ஒரு வார்த்தையை வாழ்வில் ஒருமுறையாவது சொல்லிவிடுகிறோம். ஆம், ஏலி... ஏலி... லெமா சபக்தானி! என்ற வார்த்தையை. மனித குலத்திலிருந்து மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை இது. "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மத் 27:46) என்ற வார்த்தைதான் அது.

‘கைவிடப்படல்’ என்பது, நமக்குள் ஏற்படுத்துவது கொடிய மரணத்தின் வலி. இதனை அனுபவிப்பவர்களுத்தான் அது புரியும். 'எல்லாரும் இருந்தும் நம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்களே, யாராலும் நமக்குத் பலனில்லாமல் போய்விட்டதே, பெற்றவர்களும் உற்றார் உறவினர்களும் கூட நம்மைப் புரிந்துகொள்ளவில்லையே, ஆபத்து நேரங்களில் நமக்கு யாரும் உதவவில்லையே, எல்லாரும் இருந்தும் நான் இப்படி அனாதையாகிவிட்டேனே' என்று எண்ணி எண்ணி பலர் புலம்பி அழும் கோரக்காட்சி கண்ணால் காண்பவரையும் இரணப்படுத்தும். “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக்  கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?” (திபா 22:1) என்று தாவீது அரசர் கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவதைப் பார்க்கின்றோம். இதே வார்த்தையைச் சொல்லித்தான் நமதாண்டவரும் இறைத்தந்தையான கடவுளை நோக்கிக் கதறுகின்றார்? தான் நம்பியிருந்த சீடர்களெல்லாம் ஓடிவிட்டனர். யூதாசு இஸ்காரியோத்து காட்டிக்கொடுத்தார். பேதுரு மறுதலித்தார், மற்றவர்கள் எல்லாம் மாயமாய் மறைந்தனர். ஓசன்னா பாடிய கூட்டம், ‘ஒழிக, அவனை சிலுவையில் அறையும்!’ என்று கத்தியது. ஆக, இயேசுவுக்கு ஏற்பட்ட மரண வலிகளைவிட, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட வலிகள்தான் மிகவும் கொடியது. இந்த வலிகளின் துயரத்தில்தான் “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் இறைத்தந்தையை நோக்கி கதறினார் இயேசு.

இங்கு இறைத்தந்தையை நோக்கி இயேசு குற்றம் சாட்டுவதாக நாம் தப்பர்த்தம் கொண்டுவிடக்கூடாது. இது இறைவனுக்கான கேள்வி, ஆனால், இறைவனைப் பற்றிய கேள்வியல்ல. எந்த மனித குலத்திற்காக தன் மகிமையெல்லாம் விட்டு கீழிறங்கி வந்தாரோ, அந்த மனிதர்களுள் ஒருவர் கூட அவருக்கு உதவவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான்,  இந்த மனிதர்களிடையே, என்னை உணர்ந்துகொள்ளாத, புரிந்துகொள்ளாத மனிதர்களிடையே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கேட்பதாக வேண்டுமானால் அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில், கடவுளைப் பார்த்து கடவுளே இந்த கேள்வியைக் கேட்க முடியுமா? அதாவது, இது அவர் தன்னைப் பார்த்தே கேட்பதுபோல் தான். கொஞ்சம் ஆழமாக புரிந்துகொள்ள முனைந்தால், நம் மனித குலத்தைக் குறித்து, தன்னைப் பார்த்தே அவர் தனக்குள் கேட்ட கேள்வியாகக்கூட எண்ணிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இன்னும் வேறு ஒரு கோணத்தில் பார்த்தோமானால், மனிதனைப் படைத்த அதே கடவுள்தான் மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாய்ப் பிறக்கத் திட்டமிடுகிறார். இதனால், அனைத்து சக்திகளும் வாய்ந்த கடவுள்,  மிகவும் பலவீனமான மனிதனாய்ப் பிறந்தார். இயேசுவின் பாடுகளைக் கூர்ந்து கவனித்தால், நம்மைப் பலம் உள்ளவர்களாக மாற்ற அவரே திட்டமிட்டு தன் மீது தானே வரவழைத்துக் கொள்கிறார் பலவீனத்தை. "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்" என்பதில் அவரின் பலவீனத்தை முதலில் பார்க்கின்றோம். மனிதனாய்ப் பிறக்காமலேயே மனித பாவப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டிருக்க அவரால் கூடும். ஆனாலும் மனிதன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாகவே, தன் அன்பை மனிதனுக்குப் புரியவைக்கவே, மனிதன் ஆகிறார். இது தேவையா என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன உதாரணத்தை இங்கு தருகிறோம்.

ஒரு விதவைத்தாயின் மகன் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறான். கிராமத்தில் வாழும் தாய் மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும். பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வீட்டில் மகனுக்கென்றே செய்த பண்டங்களையும் எடுத்துக்கொண்டு, இரவு முழுவதும் தூங்காமல் பேருந்து பயணம் செய்து, சென்னைக்குச் சென்று மகனைப் பார்க்கிறார். மகன் கேட்டான்,  "எதற்கு அம்மா இவ்வளவு கஷ்டம்? வங்கியில் என் அக்கவுண்டில் பணத்தை போட்டுவிட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்திருக்கலாமே" என்று. அம்மா சொன்னார், "வங்கியில் பணத்தைப் போடலாம். என் அன்பைப் போடமுடியுமா? நான் செய்த பண்டத்தைப் போட முடியுமா? மகனைப் பார்க்கும்போது கிடைக்கும் இன்பம் வங்கியில் பணத்தைப் போடும்போது கிடைக்குமா? " என. மகனால் பதில் சொல்ல முடியவில்லை

இதேபோலதான் பாடுகள் படாமலேயே பாவங்களுக்குத் தீர்வு காண கடவுளால் முடியும்.

அது அவரது வல்லமையைக் காட்டும். மனிதர் மீது கொண்டிருக்கும் அன்பைக் காட்டுமா?

"இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்" என்ற வார்த்தையை அவர் நினைத்திருந்த நொடியிலேயே அது அகன்றிருக்கும்! ஆனால் எதற்காக அந்த வார்த்தையை பயன்படுத்தினார்? நமது ஆன்மீகப் பயணத்தில் பயம் வந்தால், "மகனே/மகளே, கவலைப்படாதே. எனக்கே பயம் வந்தது, உனக்காக நானே ஏற்றுக்கொண்ட பயம், உனக்கு முன்னுதாரணம் காட்ட. அதை எப்படி அகற்றினேன்? என்பதை எண்ணிப்பார். "எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்பதன் வழியாகத்தான் என்கிறார் இயேசு. இதைப்போன்றுதான், "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" என்ற வார்த்தைகள் அவர் அனுபவித்த வேதனையின் அளவையும், அவர் திட்டமிட்டே ஏற்றுக்கொண்ட மனித பலவீனத்தையும் நமக்கு விளக்குகின்றன. நம்மை பாவத்திலிருந்து மீட்ட நிகழ்வுகளில் நமக்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் விட்டுச்சென்றுள்ளார் இயேசு. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குறுதிகளுக்கு ஏற்ப, நம்மில் ஒருவரையும் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால்தான், கடவுள் தன் மகன் மீதே நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமத்தி, அவரைச் சிலுவையில் நம் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல் இருப்பதற்காகவே கடவுள் இயேசுவைச் சிலுவையில் கைவிட்டார். தாங்கிக்கொள்ள முடியாத இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறினார்.

உலகின் பாவங்களைப் போக்கவேண்டுமெனில் மானிடரின் பாவங்களையெல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் உயிர்துறக்கிறார் இயேசு. “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா பிரிவு 53, வசனம் 5 அதை ஒரு முன்னறிவிப்பாக வழங்கியது.

இன்னுமொன்றை கவனித்தீர்களா? இருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாததுபோல், பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பது நாம் அறிந்ததுதான். இங்கோ நம் பாவங்களின் சுமையை தோளில் சுமப்பதனால், தன் புனிதத்தின் நிலையை தற்காலிகமாக, அதுவும் நமக்காக இழந்து நிற்பதாக சில அறிஞர்கள் கூறுவதுண்டு. பாவத்தின் சுமையை இயேசு ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்தில் அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. ஏனெனில், தற்போதைக்கு புனிதம் எனும் தந்தையும், பாவம் சுமக்கும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப் போயுள்ளனர். பாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) என்னும் வார்த்தைகள் விவரிக்கின்றன. எப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது, எனக் கூறுவோரும் உண்டு. அதாவது, நம் பிரதிதியாக இயேசு நிற்கிறார். இதன் அடிப்படையில் இயேசுவின் "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வார்த்தைகளை விவரிக்கும் சிலர், இந்த மக்களின் பாவங்களை, நான் சுமந்திருக்கும் பாவங்களை கழுவி, இந்த மக்களை ஏற்றுக்கொள்ளும் என அவர் தந்தையை நோக்கி கேட்பதாக அர்த்தம் கொள்வர்.

”உன்னை எப்படியெல்லாம் நம்பியிருந்தேன். இப்படி என்னை கைவிட்டு விட்டாயே?” என்று நம்முடைய நெருங்கிய நண்பர்கள் நமக்கு ஏதாவது தீங்கு செய்கிறபோதோ, உதவி கேட்டு மறுக்கிறபோதோ, நாம் சொல்வதுண்டு. அது நாம் அந்த நண்பரிடத்தில் வைத்திருக்கிற தீராத நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கை சிதைக்கப்படுகிறபோது, மனம் நொறுங்குண்டு இந்த வார்த்தைகளை உதிர்க்கிறோம். அப்படிப்பட்ட தொனியில் தான், திருப்பாடல் ஆசிரியரின் வரிகள் அமைந்திருக்கின்றன. “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக்  கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?” என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்ட வரிகளைத்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது கேட்கிறார். அதைத்தான் நாம் ஒவ்வொருவரும் துன்பவேளைகளில், இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டதாக எண்ணி உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் பார்த்தால், நமக்கு தாங்கமுடியாத சோதனைகளைக் கொடுத்தாலும் இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. நம் நிராகரிப்பினால் உண்டான கசப்பு அவர் மனதில் பதிவதில்லை. ஆகவே அவர் பழிவாங்கும் இறைவனல்ல, நம் நிலை குறித்து பரிதவிக்கும் இறைவன். நம்புவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2024, 13:55