ஓய்வு நாளில் குணப்படுத்தும் இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தும் இயேசு  

தடம் தந்த தகைமை – மணமகன் தங்களோடு இருக்கும்வரை

திருமண வீட்டில் நோன்பு இருப்பது இழுக்கு. அர்த்தமும் ஆனந்தமும் தரும் செயல்களை விடுத்து, சடங்கு சம்பிரதாயங்களுள் முடங்குவது மூடத்தனம்!

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள், (மத் 9:14-15) என பதிலளித்தார்.

நோன்பு: உள்ளமுருகி,உடல் வருத்தி, உணர்வு அடக்கிச் செய்யும் ஓர் ஒடுக்க நற்செயல். அச்செயல் சடங்காகிப் போனதே அதர்மம். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் பரிசேயர்களைப்போல யூத வழக்கப்படி திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு கடைபிடித்தனர். அதை உள்ளரங்கமாக அன்றி வெளியரங்கமாக தலைமேல் சாம்பல் பூசி, அதை முகமெல்லாம் வழியச்செய்து, சோக முகத்தோடு நடமாடி வந்தனர். இவ்வெளிவேடச் சடங்குத்தனச் சீர்கேட்டை இயேசு ஆதரிக்கவில்லை (மத் 6:16-18) வழக்கமாக, யூத சமூகத்தில் ஆண்டின் பாவப் பரிகார நாளில், குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால், நாட்டில் பொதுச் சேதங்கள் ஏற்பட்டால், இயற்கைச் சீற்றங்களின் கோரப்பிடியில், இறை இரக்கத்தைப் பெறும் நோக்கில் நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இயேசுவின் வருகையும் வாழ்தலும் திருமண விழாவிற்கு ஒப்பானது. மெசியா எனும் இயேசுவே இங்கு மணவாளன். திருமண வீட்டில் நோன்பு இருப்பது இழுக்கு. அர்த்தமும்

ஆனந்தமும் தரும் செயல்களை விடுத்து, சடங்கு சம்பிரதாயங்களுள் முடங்குவது மூடத்தனமல்லவா! பழமையின் பெயரால் புதிய அறிவை, அனுபவத்தை ஏற்க மறுப்பது தற்கொலைக்குச் சமம்.

இறைவா! சடங்குத்தனங்களுள் முடங்காமல் சரியானதைத் தேர்ந்து தெளிய ஆற்றல் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2024, 15:58