இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவுக்கான தயாரிப்புகள் இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழாவுக்கான தயாரிப்புகள்  (ANSA)

தடம் தந்த தகைமை - இதைப் பெற்று உண்ணுங்கள்

பாஸ்காக் கொண்டாட்டத்தின் நீட்சியாக இயேசு தம்மையே செம்மறியாக்கி நற்கருணை விருந்தாக்கினார். இங்கே இயேசுவே பலிப்பொருளும், பலி நிறைவேற்றுபவருமாகின்றார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில், இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம் (மத் 26, 26-28) என்றார்.

எகிப்திய அடிமைத்தனத்திற்கு முன்னதாக இஸ்ரயேலர் தங்கள் நன்றியின் விழாக்களைப் போசா, மசோத் எனப் பெயரிட்டுக் கொண்டாடினர். அதனையே அவர்கள் விடுதலை பெற்றுக் கடந்து வந்தபோது பாஸ்கா விழாவாக உருமாற்றினர். அதனில் ஒருவயதான செம்மறி பலியிடப்பட்டுப் பரிமாறப்பட்டது. அந்தப் பாஸ்காக் கொண்டாட்டத்தின் நீட்சியாக இயேசு தம்மையே செம்மறியாக்கி நற்கருணை விருந்தாக்கினார். இங்கே இயேசுவே பலிப்பொருளும், பலி நிறைவேற்றுபவருமாகின்றார்.

இயேசுவின் நற்கருணை விருந்து அவர்தம் சீடர்களுக்குப் பல பாடங்களைப் புகட்டியது. இயேசுவைப் பின்பற்றுவோர் 1. பணிவிடை புரிபவராக, 2. பலியாகத் தயாரானவராக, 3. தன்னை உடைத்துப் பங்கிடத் துணிந்தவராக, 4. பந்தி வழியாக சமத்துவம் பேணுபவராக, 5. பலரும் வாழத் தம்மைத் தற்கையளிப்பவராக வேண்டும். எங்கெல்லாம் தியாகமிக்கப் பகிர்வு நிகழ்வாகிறதோ அங்கெல்லாம் இயேசுவின் நற்கருணை விருந்து உயிரெடுக்கிறது. பரிவோடும் பாசத்தோடும் பணிவோடும், பகிர்வுப் பார்வையோடும் புரியும் ஒவ்வொரு தியாகச் செயலும் ஒரு திருவிருந்துக் கொண்டாட்டத்தின் பரிணாமமே.

இறைவா! உம் திருமகனின் திருவிருந்து உணர்த்தும் உண்மைகளை உளமேந்தி என்னையும் பிறருக்காய் உணவாக்கும் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2024, 16:39