இயேசுவை அனைவரும் புரிந்துகொள்ளவில்லை, ஆதலால், ஏற்றுக்கொள்வதிலும் தயக்கம் இருந்தது. இயேசுவை அனைவரும் புரிந்துகொள்ளவில்லை, ஆதலால், ஏற்றுக்கொள்வதிலும் தயக்கம் இருந்தது.  (©Renáta Sedmáková - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே

சமூக மாந்தர் ஒவ்வொருவரும் நன்மதிப்போடு, சமத்துவத்தோடு, எல்லா உரிமைகளும் பெற்று, உவகையோடு வாழ வழிகாட்ட வேண்டிய சட்டம் மெல்ல மெல்ல அதன் உள்நோக்கை இழந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன் (மத் 5, 17), என்றார் இயேசு.

மனிதரின் சமய, சமூக வாழ்வை நெறிப்படுத்த வகுக்கப்பட்ட வழிகாட்டல்மிக்க விதிமுறைகளே திருச்சட்டங்களும் இறைவாக்குகளும். காலச்சூழலில் அவை ஏழையர்க்கு எட்டாதவையாக ஆக்கப்பட்டன. சமூக மாந்தர் ஒவ்வொருவரும் நன்மதிப்போடு, சமத்துவத்தோடு, எல்லா உரிமைகளும் பெற்று, உவகையோடு வாழ வழிகாட்ட வேண்டிய சட்டம் மெல்ல மெல்ல அதன் உள்நோக்கை இழந்தது. 'மனிதரின் நல்வாழ்வின் பெயராலே' என்ற சிந்தனை சிதறடிக்கப்பட்டு 'எல்லாம் சட்டத்தின் பெயராலே' என்ற கருத்தியல் திணிக்கப்பட்டது. அது மனிதமாய் வாழும் கடவுளின் பார்வைக்கு முரணானது. சட்டம், சட்டம் எனக் கொட்டமடித்துக்கொண்டு சாமானியரைச் சிறுகச் சிறுக சாகடித்துக் கொண்டிருந்த யூத சமூகத்தின் சிறுமைத்தன போக்கை நன்மைகளால் மீறினார் இயேசு. மனித மாண்பு உயர்த்தப்பட சட்டம் ஒருபோதும் தடையாயிருக்கக் கூடாதென அழுத்திச் சொன்னார்.

மானுடத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் எல்லாச் செயலும் திருச்சட்ட நிறைவேற்றல் என்பதே இயேசுவின் பார்வை. அது அழித்தல் அல்ல, புனரமைத்து ஆற்றலூட்டல். அக்கடமை நமக்கும் உண்டு. பெரும்பாலும் சட்டங்கள் ஏழைகளை ஏய்த்து, செல்வர்களைச் செழிப்பாக்குகின்றன.

இறைவா! சட்டத்தனம் அல்ல, சாமானியத்தனத்தையே நீர் விரும்புகிறீர் என உணர உள்ளவுறுதி தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2024, 12:05