இயேசுவின் போதனை இயேசுவின் போதனை 

தடம் தந்த தகைமை - பொய்யாணை இடாதீர்

உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் புனையும் உலகில் வாழ்கிறோம். மனச்சான்றை மரணிக்கச் செய்து சாதிக்கும் எதுவும் நம்மோடு வருவதுமில்லை, வாழ்வு தருவதுமில்லை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம் என்கிறார் இயேசு.

பழைய ஏற்பாட்டுக்கு முந்தைய காலந்தொட்டே ஆணையிடும் பழக்கம் சமூகத்துள் நிலவி வந்தது. ஒருவர் தன்னை நிரூபிக்க,  தன் சொல்லும் செயலும் உண்மை என சாதிக்க, தான் வழிபடும் கடவுளின் பெயரால் இந்த வாக்குறுதியை மேற்கொண்டனர். ஆனால் பல்வேறு சூழல்களில் இஃது ஒரு கபட நாடகமாகவே அரங்கேறியது. இப்போலித்தனப் பொய்கூறலால் ஏழையரும், உண்மைகளும் ஊமையாகிப் போயினர். எனவேதான் இயேசு ஆணையிடவே வேண்டாம் என அதிகாரத்தோடு சொன்னார்.

உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் புனையும் உலகில் வாழ்கிறோம். மனிதர் என்றால் மனம் கொண்டவர் எனப் பகுக்கலாம். அந்த மனதிற்குள் எழும் உயிர்க் குரலே மனச்சான்று. மனச்சான்றை மரணிக்கச் செய்து மனம்போல ஆணையிட்டுச் சாதிக்கும் எதுவும் நம்மோடு வருவதுமில்லை, வாழ்வு தருவதுமில்லை. உண்மையே உயர்நெறி. உண்மையான மகிழ்ச்சியின் அடித்தளம் மனசாட்சியில் உள்ளது.

இறைவா! பேரிரைச்சல் நிரம்பிய இவ்வுலகில் மிக மிக மெலிதாய் உம் குரல் என் மன ஆழத்திலிருந்து வெளிப்படுவதைக் கேட்டு வாழும் கூர் செவிகள் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2024, 16:57