அன்னை மரியா அன்னை மரியா 

நேர்காணல் – கிறிஸ்தவர்களின் சகாய அன்னை

திருத்தந்தை 5ம் பத்திநாதர் கி.பி. 1571ம் ஆண்டு, அன்னை மரியாவிற்கு நன்றியறிதலாக கிறிஸ்தவர்களின் சகாயமான புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வேண்டுதலை 'லொரெட்டோ' மன்றாட்டு மாலையில் சேர்த்து மகிழ்ந்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அகிலம் காக்கும் அன்னையாய் நின்று ஆற்றல் தருபவர் அன்புத்தாய் அன்னை மரியா. வாழ்வில் ஏற்படும் இன்னல் இடையூறுகளை நீக்கி இனிமையினைத் தருபவர் அவர். உள்ள நலனை மட்டுமன்று உடலளவில் ஏற்படும் அனைத்து இடையூறுகளையும் நீக்கி ஈடில்லா உவகையைத் தரும் அன்னை மரியா, கிறிஸ்தவர்களின் சகாய அன்னையாக எழுந்தருளி, நமக்கு நன்மைகள் பலவற்றைத் தருகின்றார். திருத்தந்தை 5ம் பத்திநாதர் கி.பி. 1571ம் ஆண்டு, அன்னை மரியாவிற்கு நன்றியறிதலாக கிறிஸ்தவர்களின் சகாயமான புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வேண்டுதலை 'லொரெட்டோ' மன்றாட்டு மாலையில் சேர்த்து மகிழ்ந்தார். மன்னன் நெப்போலியனின் ஆணைக்கிணங்க திருத்தந்தை 7ம்பத்திநாதர் 1808 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்று வருடகாலமாக சவோனா என்னுமிடத்தில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். 1814ம் ஆண்டு சவோனாவின் பாதுகாவலியான இரக்கத்தின் அன்னையின் திருவிழா நாளான மார்ச் 17ம் தேதி அன்று திருத்தந்தையை விடுதலை செய்தான் மன்னன். விடுதலை செய்யப்பட்ட திருத்தந்தை உரோமிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது பல இன்னல்களுக்கு பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியைப் பறைச்சாற்றும் விதமாக சென்ற வழிகளில் இருந்த அன்னைமரியாவின் திருஉருவ சுருபங்களுக்கு கிரீடங்கள் அணிவித்தார். கடவுளுக்கும் அன்னை மரியாவுக்கும் நன்றி செலுத்தும் விதமாக உரோம் நகரத்தில் சகாய அன்னையின் திருநாளை மே 24ம் நாள் அன்று கொண்டாடவேண்டும் என்று உறுதிப்படுத்தினார். திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பற்றிய கருத்துக்களை இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி ஜேசுதாஸ்.

சலேசிய துறவற சபையைச் சார்ந்த அருள்பணி ஜேசுதாஸ் பெரியநாயகம் அவர்கள், சென்னை சலேசிய மறைமாநிலம் சார்ந்த குருவானவர். இவர் உரோமில் உள்ள பாப்பிறை சலேசிய கல்லூரியில் சமூக ஊடகவியல் துறையில் ‘வழியோர சிறார்களிடம் தமிழ் சினிமாவின் கற்றலின் தாக்கம்” பற்றிய ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.  இவர் இசை வழியாக இறைவார்த்தையை திருவழிபாடுகளில் பாடவும், செபிக்கவும், இளைஞர்களிடையே இறைவார்த்தையை இசை வழியாக கொண்டு செல்லவும் தமிழக தலத்திருஅவையில் பணிகள் பல புரிந்துள்ளார். இணையதளத்தில் இவரின் பாடல்கள் இளைஞர்களிடையே ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அருள்பணி ஜேசுதாஸ் பெரியநாயகம் அவர்கள், இப்போது சென்னை சலேசிய மறைமாநிலத்தலைவரின் ஆலோசகராகவும், தீபகம் தொன்போஸ்கோ நம்பிக்கை மற்றும் விழுமியக்கல்வி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றார்.

‘நம்பிக்கையைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பில், சென்னை சலேசிய மறைமாநிலம் முழுவதிலும் சிறப்பாக இளையோர் மத்தியில் தீபகம் வழியாக இவர் ஏற்படுத்திவரும் நம்பிக்கை எழுச்சியும், மறுமலர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. தந்தை அவர்களை கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

சலேசிய சபையின் அருள்பணி ஜேசுதாஸ் பெரியநாயகம் அவர்களுடன் நேர்காணல் – கிறிஸ்தவர்களின் சகாய அன்னை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2024, 09:23