நோயுற்றவரை குணமாக்கும் இயேசு நோயுற்றவரை குணமாக்கும் இயேசு 

விடை தேடும் வினாக்கள் – ஒன்பது பேர் எங்கே?

நிலநடுக்கம், சுனாமி, கலவரங்கள், போர்கள், கொள்ளைநோய் போன்ற பல்வேறு துன்பங்களில் ஒருங்கிணையும் நாம், அத்துன்பங்கள் விலகியதும், மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார். (லூக்கா 17:19)

இயேசுவின் புதுமைகள் எப்போதுமே வித்தியாசமான அனுபவங்களாகவும், புதுமையான பாடங்களை நமக்குக் கற்றுத் தரும் நிகழ்வுகளாகவும் அமைந்து விடுகின்றன. இந்தப் புதுமையின் வாயிலாகவும் அவர் நமக்குள் பல சிந்தனைகளை விதைக்கின்றார்.

இயேசு கடைசியாக எருசலேமுக்கு வருகின்ற பயணம் இது. இதன்பின் அவர் தனது சிலுவைச் சாவுக்குள் நுழையப் போகிறார். பிரிவினையால் பிரிந்து கிடக்கின்ற எருசலேம், சமாரியா போன்றவற்றுக்கு ஓர் இணைப்புப் பாலமாக இயேசுவின் கடைசிப் பயணம் அமைகிறது. லூக்கா நற்செய்தியின் பதினேழாவது அதிகாரம், சீடர்களுக்கான படிப்பினைகள் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியும் லூக்கா நற்செய்திக்கான மிகவும் தனித்துவமான பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதிக்கு சற்று முன் தான் செல்வரும் இலாசரும் என்ற உவமையை இயேசு கற்பித்திருந்தார்.

யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்திருந்த பத்து பேரை, தொழுநோய் என்ற துன்பம் ஒருங்கிணைத்தது என்பதையும், அந்த நோய் நீங்கியதும், சமாரியர் ஒருவர் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறார் என்பதையும் இங்கு காண்கிறோம்.

முதல் ஏற்பாட்டு காலத்தில், தொழுநோய் பரவக்கூடிய ஓர் ஆபத்தான நோயாக இருந்தபடியால், இதனால் பாதிக்கப்பட்ட மக்களை தீட்டானவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை மக்களின் பாளயத்திற்கு (கூடாரம்) வெளியில் வைத்தனர். மக்கள் நகரமயமனாபோது இந்த தொழுநோயாளர்கள் நகருக்கு வெளியில் வைக்கப்பட்டனர். அதிகமானோர் பாலை நிலங்களிலும், குகைகளிலும் தங்கி, பிச்சையெடுத்தும், வேறு சிறு தொழில்களை செய்தும் தங்கள் வாழ்நாட்களை எண்ணினர். இவர்களில் சிலர் வழிப்பறி கொள்ளைக்காரர்களாகவும் உருவாகினர். நோய் கடவுளின் தண்டனை என்ற முதல் ஏற்பாட்டின் சில இறையியல் கருத்துக்கள் தொழுநோயாளர்களை அதிகமாக பாதித்தது அக்கால உலகில் அதிகமான பகுதிகளில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்துள்ளது.

தொழுநோய் பிடித்தவர்களை யூதர்கள் தள்ளி வைத்துவிடுவார்கள். ஆக, தொழுநோய் பிடித்திருக்கிறது என்ற காரணத்தில் முதலில் ஒதுக்கப்படுகிறார் இந்தச் சமாரியர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அங்கே மற்ற தொழுநோய் பிடித்தவர்களோடு இருக்க முடியாது. ஏனெனில் இவர் சமாரியர். மற்றவர்கள் யூதர்கள். இருப்பினும் அவர்கள், ஒன்றித்திருப்பதை, அதாவது ஒரே நோயின் காரணமாக ஒன்றித்திருப்பதைக் காண்கிறோம்.

நிலநடுக்கம், சுனாமி, கலவரங்கள், போர்கள், கொள்ளைநோய் போன்ற பல்வேறு துன்பங்களில் ஒருங்கிணையும் நாம், அத்துன்பங்கள் விலகியதும், மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோம் என்பது உண்மை. 1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெருமழை ஒன்று பெய்தது. பெரு வெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. தூய யோசேப்பு கல்லூரியும் பாதிக்கப்பட்டது. திருச்சி தூய யோசேப்பு கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவைகளில் சேரிகளும் உண்டு, அக்ரகாரங்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கல்லூரி கட்டடத்தின் 2வது 3வது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, கொஞ்சம் வசதி உள்ளவர் என்று எல்லாரும் சேர்ந்து தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் வீட்டு சுவர்கள் வெள்ளத்தில் இடிந்த போது, காலம் காலமாய் அவர்கள் கட்டிவைத்த பிரிவுச் சுவர்களும் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்து, அவர்கள் மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை எழுப்பியபோது, இந்த பிரிவுச்சுவர்களும் கட்டப் பட்டுவிட்டன என்பதே உண்மை. இதேபோல்தான், தொழுநோய் என்ற துன்பம் இந்த பத்து நோயாளிகளை பாகுபாடுகளை மறந்து சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும் என்ன நடந்திருக்கும்  என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது.

"மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று இயேசு தேடுகிறார். நன்றி பெறவேண்டும் என்பதை விட, அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்பதை இயேசு அதிகம் தேடியிருப்பார். நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும் சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். குருக்களிடம் தாங்கள் போகும் போது, இந்த சமாரியனுக்கு அங்கே என்ன வேலை? இந்த சமாரியனோடு அவர்கள் குருக்களிடம் போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கி வைத்த தொழு நோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே என்று யூதர் நினைத்திருக்கலாம். அவர்கள் இப்படி வேற்றுமை காட்டும் எண்ணங்களில் இருந்ததை அவர்களின் உஷ்ணப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்க வேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு, தெய்வம் என்பதை உணர்ந்ததால் அவரிடமே சரண் அடைவோம் என எண்ணி யேசுவிடம் திரும்ப வருகிறார். திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, யேசுவுக்கு ஒரு புறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக் கடன் செலுத்த வந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப் பட்டது, ஒதுக்கப் பட்டது குறித்து யேசுவுக்கு வேதனை. அந்த வேதனை, "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற கேள்வியாக வெளிவருகிறது.

சமாரியர்களை யூதர்கள் உண்மை இஸ்ராயேலராக கருதவில்லை. அவர்கள் அசிரியருடன் கலப்பு செய்யப்பட்டவர்கள் என்றே கருதினர். யூதர்களின் விவிலியத்தையும் சமாரியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் முதல் ஐந்து நூல்களான சட்ட புத்தகத்தை மட்டுமே தங்கள் விவிலியமாக ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் விலக்கி வைத்து ஒருவர் மற்றவரை குறைவானவர்களாக கருதினர். இணைந்து வாழ்தல் நல்லது தான் ஆனால் அது புனிதத்தின் இணைப்பாய் இருக்க வேன்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உலக மொழி, இறைவனோடு கூடி வாழ்ந்தால் மட்டுமே கோடி நன்மை என்பது ஆன்மீக மொழி.

அந்த சமாரியரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போம். தேவைகள் உருவாகும் வேளையில், நம்மில் பலர், இறைவனைத் தேடிச்செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறோம். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பல முறை, நாம், இறைவனை, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில், தேடிச்சென்றிருக்கிறோம். ஆனால், நம் தேவைகள் நிறைவேறியபின், இறைவனுக்கு நன்றி கூற, அதே அளவு ஆர்வமும், தொடர் முயற்சிகளும் நம்மிடம் உள்ளனவா என்பதை எண்ணிப்பார்க்க, குணம்பெற்ற சமாரியர் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக, உந்துசக்தியாக அமைந்துள்ளார்.

இப்புதுமை நமக்குச் சொல்லித்தரும் பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வைப்பற்றிய பாடம்.

உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? நன்றியுள்ளவர் ஒருவர் எனில், நன்றி மறந்தவர்கள் ஒன்பது பேர் இருப்பர் என்பதைத்தான், “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற கேள்வி நமக்கு நினைவுறுத்துகிறது.

கிடைத்த நன்மைகளுக்கு நன்றிசொல்லும் நேரங்களைவிட, இன்னும் தேவை என்று விண்ணப்பிக்கும் நேரங்களே, நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம். எப்போதும் நன்றி நிறைந்த மனநிலையில் வாழ வேண்டும் என்பதை உணர்த்த, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வலம்வரும் ஒரு சிந்தனைத் தொகுப்பு இதோ:

நீங்கள் இன்று காலை ஓரளவு சுகத்துடன் கண் விழித்திருந்தால், பேறுபெற்றவர்கள். இந்த வார இறுதிக்குள் இறக்கவிருக்கும் பத்து இலட்சம் மக்களைவிட நீங்கள் பேறுபெற்றவர்கள்.

போர் அபாயம், சிறைவாசம், சித்திரவதைகள் ஏதும் இல்லாமல் உங்கள் வாழ்வு செல்கிறதென்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள். உலகில் ஒவ்வொரு நாளும் 50 கோடி மக்களுக்கு இந்த நிலை இல்லை.

பயமேதுமின்றி உங்களால் ஒரு சமய வழிபாட்டில் கலந்துகொள்ள முடிந்தால், நீங்கள் உலகின் 30 கோடி மக்களைவிட பேறுபெற்றவர்கள்.

உடுத்த உடையும், இரவில் உறங்க ஒரு வீடும் உங்களுக்கு இருந்தால், உலகின் 75 விழுக்காட்டு மக்களைவிட நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள்.

நம் உள்ளங்கள் நன்றி உணர்வுகளால் நிறைந்திருக்கும்போது, நம்மைச் சூழ்ந்துள்ள பல்வேறு உடல், உள்ள நோய்கள் நீங்கும். அவ்வேளையில், இயேசு, அந்த சமாரியரை நோக்கிச் சொன்ன சொற்களையொத்த ஓர் ஆசீரை நாமும் பெறுவோம்: "எழுந்து செல்லும். உமது நம்பிக்கையும், நன்றியுணர்வும் உமக்கு நலமளித்தன"

இந்த ஒருவர் திரும்பி வந்ததற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அது அவருக்கு இயேசுவின் மீது இருந்த ‘அன்பும், நன்றி உணர்வும்’! தான் நலமடைந்ததை உணர்ந்த கணத்திலேயே, அவர் தனது பயணத்தை ஒரேயடியாகத் திருப்பி, இயேசுவை நோக்கி ஓடினார். இயேசுவின் பாதத்தில் விழுந்து பணிந்தார். விண்ணப்பம் வைத்த போது பத்து பேரோடு சேர்ந்து தொலைவில் நின்று இயேசுவை வேண்டியவர், இப்போது இயேசுவின் பாதத்தில் இயேசுவை அருகில் பார்க்கிறார். ஒரு தனிப்பட்ட அனுபவத்துக்குள் அவர் கடந்து செல்கிறார்.

நமது வாழ்க்கையில் இறைவன் மாற்றங்களைக் கொண்டுவரும் போது நமது வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவருக்கு புகழ்ச்சியை வழங்க வேண்டும். மாற்றத்தை உணர்ந்த கணத்திலேயே இறைவனைப் போற்றும் நிமிடம் துவங்க வேண்டும்.

“நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்கிறார் இயேசு ! ‘நீங்கள் நலம் பெறுவீர்கள்’ என சொல்லவில்லை. தொட்டு சுகம் கொடுக்கவில்லை. வெறுமனே குருக்களிடம் அவர்களை அனுப்பி வைக்கிறார் இயேசு. குருக்கள் தான் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சான்றளித்து இவர்களை ஒதுக்கி வைத்தவர்கள். அப்படி ஒதுக்கியவர்களாலேயே ‘இவர்கள் தூய்மையானவர்கள்’ என பறை சாற்ற வைக்கிறார் இயேசு. நமது எதிரியையே நமக்கு சான்று அளிப்பவனாய் மாற்றும் இறைவனின் வல்ல செயல் அது.

அவர்கள் அந்த வார்த்தையை நம்பி செல்கின்றனர். பயணத்தில் அவர்கள் சுகம் பெற்றுக் கொள்கின்றனர். நாமும் நமது பாவ வாழ்க்கையை விட்டு விலக வேண்டுமெனில் இயேசுவின் வார்த்தைகளை நம்பிப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது தேவையாகிறது. இயேசுவின் வார்த்தைகளை நம்பிப் பயணிக்கும் போது பயணம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாக்கும். இயேசுவின் வார்த்தை நமது பாவக் கறைகளை கொஞ்சம் கொஞ்சமாய்க் கழுவி நம்மை தூய்மையாக்கும்.

 “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? ” என இயேசு கேட்கிறார். “குருக்களிடம் காட்டுங்கள்” என்பதே அவர் அவர்களுக்கு இட்ட கட்டளை. மற்ற ஒன்பது யூதர்களும் அதன் அடிப்படையில் கோயிலுக்குப் போயிருக்கலாம். குருக்களிடம் காட்டியிருக்கலாம். சட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் ஒருவர் மட்டும் சட்டத்தை விட மேலாய் இறைவனை தேடுகிறார். சமாரியரைத் தவித்து மற்ற ஒன்பது பேர், ' தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது' என்று தங்களுக்கு நலம் தந்த இயேசுவை மறந்துவிட்டு தங்களுடைய வழியில் போய்விடுகின்றார்கள். ஆனால், அவர்களில் இருந்த இந்த ஒரு சமாரியர், ' இயேசுவால்தான் தனக்கு நலம் கிடைத்தது' என்று நன்றிப் பெருக்கோடு அவரிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து தன்னுடைய நன்றியைச் செலுத்துகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், " எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்கின்றார்.

நன்றி கூறும் செபங்களால், இறைவனுக்கும், பிறருக்கும் நன்றி சொல்லும் பொது, அதுவும் உதட்டளவில் இல்லாமல்,  உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லும்போது, மன நிறைவு கிடைப்பதை நாமே பலமுறை உணரலாம். கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு. ஒன்று விண்ணகம். மற்றொன்று நன்றி நிறைந்த உள்ளம்."

இன்றைக்குக் கடவுளிடம் போவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அவரிடம் திரும்பப் போவதும் முக்கியமே என்பதை இந்த சமாரியர் நமக்கு சொல்லித்தருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 10:31