விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-3, தீயவர் தீய வழியிலேயே அழிவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘வஞ்சகம் தவிர்ப்போம்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பப்பாடலில் 1 முதல் 3 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில், தோயேகுவிடம் விளங்கிய தீமையின் செயல்கள், நம்மிடமும் இருக்கின்றவனவா என்பதை ஆய்வு செய்து பார்த்து, நல்வாழ்வு வாழ இறையருள் வேண்டி மன்றாடினோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4,5 ஆகிய இரண்டு இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறை ஒளியில் அவ்வரத்தைகளைக் கேட்போம். “நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே! ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்; உன்னைத் தூக்கி எறிவார்; கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்; உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்” (வச 4-5).
முன்பொரு காலத்தில் மன்னர்கள் போர் வெற்றியை கொண்டாட எதிரி நாட்டிலிருந்து அடிமைகளாக ஆண்களையும் பெண்களையும் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று. அங்கே சந்தைகளில் விற்பனை செய்வார்கள். அது வெற்றியின் பெருமிதம் என எண்ணிக் கொள்வார்கள். அப்படி ஒருவன் பத்து ஆண் அடிமைகளை விற்பதற்காக அழைத்துக் கொண்டு பக்கத்து நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் காடு ஒன்றை கடந்தாக வேண்டும். அது விலங்குகள் அதிகமாக நடமாடும் பயங்கரமான காடு. அடிமைகளை அழைத்துச் சென்றவனோ, மிகக் கொடூரமானவன். இரக்கம் என்பது துளியும் இல்லாதவன். காட்டை கடக்கின்ற போது எதிரில் ஒரு மிகப்பெரிய புலி ஒன்று இவர்களை விரட்டவே. அனைவரும் ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டார்கள். குகைகுள்ளும் புலி வந்துவிட்டது. தப்பிக்க வழியே இல்லை. அழைத்துச் சென்றவன் கீழே படுத்துக்கொண்டு அவன் மீது 10 அடிமைகளையும் படுக்கச் சொல்லி தன் உயிரைக் காத்துக்கொள்ள எண்ணி அடிமைகளுக்கு கட்டளையிட்டான். அடிமைகளும் மன வேதனையிலும் பசி கொடுமையிலும் செய்வதறியாது அவன் கட்டளைப்படி கீழ்ப்படித்தார்கள். அடிமைகள் அத்தனைபேரும் செத்தவர்கள் போல சுவாசத்தை முழுவதுமாக அடக்கிக்கொண்டு அமைதியாக சவம் போல கிடந்தார்கள். அதனால் அழைத்துச்சென்ற கொடுங்கோலனுக்குப் பயமில்லை. சாகப் போவது கண்டிப்பாக நாமாக இருக்க முடியாது. என்று திடமாக நம்பினான். நன்றாக கண் விழித்து புலி யாரை தூக்கிச் செல்கிறது என்பதைக் காண ஆவலுடன் இருந்தான். புலியோ சுவாசம் வரும் இடத்தை அடையாளம் கண்டு மற்றவர்களை தன் காலால் தள்ளிவிட்டு அவனை மட்டுமே தூக்கிச் சென்றது. தனக்கு மட்டும் வராது. என்று நினைப்பவனுக்கு மட்டும் வந்தது. அதுதான் கர்ம வினை என்பது.
இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில் முதலாவதாக, “நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே!" என்கின்றார் தாவீது அரசர். நமது அன்றாட வாழ்வில் இதனை அடிக்கடி கேட்டிருப்போம். அதாவது, 'நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும்... நீ கொஞ்சம் கவனமா இருந்துக்கோ" என்று நாம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இதுமட்டுமன்றி, 'நாக்காலே போட்ட முடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா?, நாக்கில் இருக்கின்றன நன்மையும் தீமையும், நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான்' என்றும் நாவைக் குறித்த பழமொழிகளும் உண்டு. "ஊகங்கள் சந்தேகங்கள் கட்பனைகள் புறம் கேளிக்கை இவைதான் பொழுதைக் கழிக்கின்றன. பொய்கள் ஓடையாய் உருகி வழிய நரம்பில்லா நாவு வளைந்து நெளிந்து குளைந்து ஆட உள்ளங்கள் அதை ரசிக்க துவங்கிவிட்டன.. ஏமாற்றுவதை விட ஏமாந்து போவதே நிஜமாகிவிட்டது... பயமாக இருக்கிறது விடியும் பொழுதை வரவேற்க தயக்கமாக இருக்கிறது... கண்களை இறுக மூடிக்கொண்டு இருளிலே இருந்துவிட துடிக்கிறது இதயம்..." என்று கவிதையொன்று நாவினால் இதயம்பெறும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. நம்மில் காணப்படக்கூடாத களையவேண்டிய நாவுகள் பல உண்டு என்பதை திருவிவிலியம் பல்வேறு இடங்களில் எடுத்துக்காட்டுகின்றது. இச்சகம் பேசும் நாவு (திபா. 5:9), பெருமைகளைப் பேசும் நாவு (திபா..12:3), பொய் பேசும் நாவு (திபா. 78:36), கபட நாவு (திபா. 120:2), மாறுபாடுள்ள நாவு (நீமொ.10:31), புரட்டு நாவு (நீமொ.17:20), புறங்கூறும் நாவு (நீமொ. 25:23), வஞ்சனை செய்யும் நாவு (உரோ 3:13), அடங்காத நாவு (யாக்.1:26). இத்தனை வகையான நாவினைக் கொண்டிருப்போர் யாவரும் தீமையின் பிறப்பிடங்களாய்த் திகழ்வர் என்பது உறுதி. ஆக, 'சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு' (காண்க. 1 சாமு 21:7) என்ற வார்த்தைகள் அவனுடைய பண்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அப்படியென்றால், தோயேகு கடவுளால் தடைசெய்யப்படும் அளவிற்குப் பல்வேறு வகையான நாவினைக் கொண்டு தீமையை விளைவிக்கக் கூடியனவனாக இருந்திருக்கிறான் என்பது தாவீதின் வார்த்தைகளால் உறுதிபடத் தெரிகிறது.
இரண்டாவதாக, தோயேகு கேடுகளை விளைவிக்கும் இத்தகையதொரு நாவினைக் கொண்டிருப்பதால், “கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்; உன்னைத் தூக்கி எறிவார்; கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்; உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்” என்று உரைக்கின்றார் தாவீது அரசர். உப்புத் தின்றவன் கட்டாயம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பார்கள். அதாவது, தீமைகளையும் கேடுகளையும் விதைத்தவர்கள் கண்டிப்பாக அதற்கான தண்டனையைப் பெற வேண்டும் என்பதுதான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். தாவீதுக்கு உதவி செய்ததாகக் கூறி அகிமெலக் உட்பட ஆண்டவரின் குருக்கள் எண்பத்தைந்து பேரை வெட்டிக்கொல்லச் சொன்ன மன்னர் சவுலின் பேச்சைக் கேட்டு அதை செய்து முடித்தவன் தோயேகு. கோலியாத்தை கொன்றொழித்து, இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றிய இளைஞன் தாவீதின்மீது காழ்ப்புணர்வு கொண்டு அவரைக் கொல்லத் தேடினார் மன்னர் சவுல். தாவீதுக்கு உதவியதாகக் கூறி ஆண்டவரின் புனித குருக்களை படுகொலை செய்ய ஆணையிட்ட அவரின் முடிவு எப்படி அமைந்தது என்பதை சாமுவேல் நூல் நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராக நிகழ்ந்த போரில் பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர். அதுமட்டுமன்றி, வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் கில்போவா மலைமேல் இறந்துகிடப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் பொருட்டுப் பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர். அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக் கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொங்கவிட்டனர். (காண்க 1 சாமு 31:1-10) என்று நாம் வாசிக்கின்றோம்.
மறுபுறம், இந்தப் படுகொலைகளை நிறைவேற்றிய சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்பவனின் முடிவு பற்றி திருவிவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், சிலரின் கூற்றுப்படி, தோயேகு தனது கற்றலை மறந்துவிட்டதைக் கண்டபோது அவன் தனது சொந்த மாணவர்களால் கொல்லப்பட்டார் என்று ஒரு சாராரும், சவுல் மற்றும் யோனத்தானின் மரணத்தை தாவீதிடம் தோயேகு தெரிவித்தபோது, அவன் தாவீதால் கொல்லப்பட்டதாக மற்றொரு சாராரும் கூறுகின்றனர். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்குத் தீமை விளைவித்த, மக்களை அடக்கியொடுக்கிய, மக்களின் கொடூர மரணங்களுக்கு காரணங்களாக அமைந்த ஹிட்லர், முசோலினி, இடியமீன் போன்ற சர்வாதிகாரத் தலைவர்களின் முடிவு எப்படி அமைந்தது என்பதை நமது உலக வரலாறும் கூட பதிவுசெய்துள்ளது.
இந்த உலகில் தீமையை விதைத்தவர்கள் தீமையைத்தான் அறுவடை செய்திருக்கிறார்கள். பிறருக்கு என்னென்ன கேடுகளையெல்லாம் விளைவிக்க வேண்டுமென விரும்பிச் செய்தார்களோ அவர்களெல்லாம் அதே கேடுகளாலேயே வீழிந்துபோயிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். இன்றைய நாளில் இடி அமீன் பற்றி சிறிது சிந்திப்போம். அவரின் வரலாறு ஒரு துயரத்தின் வரலாறாகவே கருதப்படுகிறது. காரணம், அவரது ஆட்சியின்போது அவர் இழைத்த தீமைகளும், கேடுகளும், கொடுமைகளும், கொலைகளும் மனித வரலாற்றில் மறக்க முடியாதவைகளாக மாறிப்போனதுதான். உலகின் மிக கொடூரமான சர்வாதிகாரி அவர். மற்ற சர்வாதிகாரிகளுக்கெல்லாம் நாடு, இனம் என ஏதோ ஒரு நோக்கம் இருந்தது. ஆனால், எந்த நோக்கமும் இல்லாமல் வெறும் மனித வேட்டை மட்டுமே ஆடிய கொடிய மனிதர் தான் இடி அமீன். 1971-ஆம் ஆண்டு முதல் 1979-ஆம் ஆண்டு வரை உகான்டாவின் அதிபராக இருந்தார். 1972-இல் ஆசியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றினார். ஏறத்தாழ 70,000 ஆசியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்தது. 1976-இல் ஓர் இஸ்ரேல் விமானம் கடத்தபட்டபோது, கடத்திய தீவிரவாதிகளை தனது மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார் இடி அமீன். இவரது ஆட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் இவரைப் பற்றி எழுதிய புத்தகத்தில் யாருக்கும் தெரியாத விடயங்களையெல்லாம் குறிப்பிட்டுள்ளார். அதில், மனித கறியின் சுவையைப் பற்றி பல அமைச்சர்களிடம் இடி அமீன் பேசியதாகவும், அதை சிறுத்தை மற்றும் குரங்கு கறியுடன் ஒப்பிட்டதாகவும் சொல்கிறார். மேலும் இவரது மனைவிகளின் முன்னாள் காதலர்களை எல்லாம் கொன்றுவிடுவாராம். அதுமட்டுமன்றி அவர்களின் தலைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்திருக்கிறார். அந்தளவுக்குக் கொடூர மனம் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார். இவரது ஆட்சிக்காலத்தில் ஏறத்தாழ 3 முதல் 5 இலட்சம் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதியாக, 1979-ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியால் நாட்டை விட்டு வெளியேறி லிபியாவிற்கு ஹெலிகாப்டரில் தப்பியோடினார். 10 ஆண்டுகள் அங்கு இருந்த பின் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் சவூதி அரேபியாவுக்குள் தஞ்சமடைந்தார். தனது 78-வது வயதில் பல மாதங்கள் கோமாவில் இருந்து பின்னர், இறுதியாக சிறுநீரக செயலிழப்புக் காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்படி மனிதனுக்குள்ளே ஒரு மிருகமாகத்தான் இடி அமீன் வாழ்ந்து சென்றிருக்கிறார்.
இன்று நாம் தியானிக்கும் தோயேகு என்பவனும் இத்தகையோனே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மன்னர் சவுலின் தான்தோன்றித்தனமான பேச்சைக் கேட்டு அநியாயமாக 85 கடவுளின் குருக்களைக் கொன்று தன் வாழ்வை இரத்தத்தால் கறைபடுத்திக்கொண்டவன். சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த சண்டாளன். தனது ஆசை திட்டங்களை அரங்கேற்றத் துடித்த அநாகரீகன். வஞ்சகத்தால் வாழ்வை வளமாக்கிகொள்ள நினைத்த நயவஞ்சகன். இப்படியாக தோயேகுவினுடைய தீய பண்புகளை நாம் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனால் இத்துணை குள்ளநரி வேடங்களை அணிந்திருந்த அந்த வேடதாரி எப்படி அழிந்தான் என்பதையும் கண்டோம். ஆகவே, பிறருக்கும், இந்தச் சமுதாயத்திற்கும் நாம் என்னென்ன தீமைகளையெல்லாம் விளைவிக்க எண்ணுகிறோமோ அவையே நம் வாழ்வையும் அழித்துவிடும் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம். நல்லது செய்து நல்ல மனிதர்களாக வாழ்வதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்