திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் பேராயர் இரபேல் தட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் பேராயர் இரபேல் தட்டில்  (VATICAN MEDIA Divisione Foto)

உரோமையுடன் ஒன்றித்திருப்பதே எங்கள் அடையாளம்!

சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து திருத்தந்தையுடன் பேசியபோது, அவர் ஆறுதலும் உற்சாகமும் தரும் வார்த்தைகளை வழங்கினார் : பேராயர் இரபேல் தட்டில்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகளாவியத் திருஅவையுடன் ஒன்றித்திருப்பதே சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையின் அடையாளம்  எனக் கூறினார் பேராயர் இரபேல் தட்டில்.

மே 22, இப்புதனன்று, சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் இரபேல் தட்டில் அவர்கள், தான் வழிநடத்தும் பழமையான திருஅவையைப் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உரைத்தார்.

உரோமையுடன் இணைந்த ஓரியண்டல் கத்தோலிக்கத் திருஅவைகளில் சீரோ-மலபார் திருஅவையும் ஒன்றாகும் என்றும், நமது பாரம்பரியத்தின்படி இது திருத்தூதர் புனித தோமாவால் நிறுவப்பட்டது என்றும் இத்திருஅவையின் பின்புலம் பற்றி மிகவும் சுருக்கமாக எடுத்துரைத்தார் பேராயர் இரபேல்.

இத்திருஅவையின்  தலைவராக இருக்கும் உங்கள் முன்னுரிமைகள் எவை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேராயர் தட்டில் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையில், ஒரு வலிமைவாய்ந்த ஓரியண்டல் திருஅவையாக, எங்கள் பணியைத் தொடரவேண்டும் என்பதே  தனது விருப்பம் என்று குறிப்பிட்டார்.

அண்மையில் திருத்தந்தையைச் சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பேராயர் இரபேல் அவர்கள், அங்கு நிலவும் சில பிரச்சனைகள் குறித்துப் பேசியதாகவும், அதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவலை வேண்டாம், உங்களுக்கு நிறைய எல்லைகள் இருக்கும்போது, ​​​​பிரச்சினைகள் ஒன்றுமில்லை. பிரச்சனைகள் உங்களை சுறுசுறுப்பாக ஆக்குகின்றன என்று கூறியதாகவும், அவரின் இந்த வார்த்தைகள் தனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்ததாகவும் கூறினார்.  

கேரளாவிற்குள்ளும் வெளியேயும் சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையின் பல்வேறு பணிகள், அண்மையில் எழுந்த அதன் வழிபாடு குறித்த கருத்து வேறுபாடுகள், அதைத் தீர்ப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவற்றையும் குறித்து தனது நேர்காணலில் விரிவாக விளக்கினார் பேராயர் இரபேல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 15:03