இயேசுவின் விண்ணேற்றம் இயேசுவின் விண்ணேற்றம்  

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா : நற்செய்தியை பறைசாற்றுவோம்!

இயேசுவின் வழியில், இயேசுவைப் போல நமது வார்த்தையாலும் வாழ்வாலும் நற்செய்தியை அறிவிக்கும் பணியாளார்களாக ஒளிர்வோம்.
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா : நற்செய்தியைப் பறைசாற்றுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.   திப 1:1-11    II. எபே 4:1-13     III.  மாற் 16: 15-20)

ஒருமுறை ஜப்பானில் பள்ளி ஒன்றில் கல்வி கற்பிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து  ஆசிரியர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் பாடங்களைக் கற்பிக்கும் வேளையில் கிறிஸ்துவைப் பற்றி எதுவும் போதிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட அந்த ஆசிரியர் பாடவேளைகளில் பாடத்தைத் தவிர வேறு எதையும் கற்றுத்தரவில்லை. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, நிறைய மாணவர்கள் உற்சாகமும், ஞானமும் பெற்றார்கள். அவருடைய வாழ்வால் தொடப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருநாள் இரவு வேளையில் அவரிடம் சென்று, "நாங்கள் கிறிஸ்தவர்களாக மாற விரும்புகின்றோம்" என்று கூறி, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அந்த ஆசிரியர் அவர்களில் 20 மாணவர்களை கோயோடோ குருமடத்திற்கு அனுப்பிவைத்தார். அந்த 20 பேரும் நன்றாகக் குருத்துவப் பயிற்சிப் பெற்று பிற்காலத்தில் அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டனர். அந்த ஆசிரியரிடம் இருந்த விசுவாசமும், அவருடைய எடுத்துக்காட்டான வாழ்வும்தான் 40 பேரை திருஅவைக்குப் பெற்றுத் தந்ததுடன், அவர்களில் 20 மாணவர்களை அருள்பணியாளர்களாக மாற்றியது.  

இன்று ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்ற இயேசுவின் அழைப்பு அவர்தம் சீடர்களுக்கு மட்டுமன்று நமக்கும் அருளப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தவோம். இயேசு இன்று விண்ணேற்றமடைகிறார் என்ற பேருண்மையை அறிந்துகொள்ள அன்னையாம் திருஅவை நம்மை அழைக்கின்றது. இந்த உலகிற்கு இயேசு ஆண்டவர் எந்த நோக்கத்திற்காக மனுவுருவெடுத்து வந்தாரோ அதை முழுமையாக நிறைவேற்றிவிட்டு மீண்டும் விண்ணகம் சென்று தந்தையாம் கடவுளோடு அவரது வலப்பக்கத்தில் அமர்ந்துவிட்டார் என்பதையும் நாம் இந்நாளிலே அறிந்துகொள்கின்றோம். இயேசுவின் விண்ணேற்றம் என்பது அவரது உயிர்ப்பின் முழுமையான வெற்றியைக் குறிக்கிறது. மேலும் இயேசுவின் விண்ணேற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், அவர் மேலெழுந்து விண்ணகம் சென்றார் என்பது மட்டுமல்ல, மாறாக, அவரது நீட்சிகளாக அவர்பணியைத் தொடர்ந்திட அவர் கொடுக்கும் கட்டளையை நாம் ஏற்க வேண்டும் என்பதுதான். இப்போது இயேசு தனது சீடர்களுக்கு வழங்கிய கட்டளைகளை நினைவுகூரும் விதமாக அப்பகுதியை வாசிப்போம். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இயேசு சாவை வென்று வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தனது சீடர்களுக்கு வழங்கும் இந்தக் கட்டளை திருஅவையின் வாழ்வுக்கும் பணிக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இயேசு வழங்கும் இந்தக் கட்டளையை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவருமே தங்கள் நற்செய்தி எழுதியதன் பின்னணியில் வழங்கியுள்ளனர் (காண்க. மத் 28:16-20; லூக் 24:36-49; யோவா 20:19-23). மாற்கு நற்செய்தியைப் பொறுத்தளவில், இயேசுவின் நற்செய்தி பிற இனத்தாருக்கும் உரியது என்பது பல இடங்களில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (10:45) என்ற இயேசுவின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 'பலருடைய' அல்லது 'எல்லாருடைய' என்ற வார்த்தையின் அடிப்படையில்தான் “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'” என்று இயேசு அறிவுறுத்துவதாக மாற்கு நற்செய்தியாளர் எடுத்துக்காட்டுகின்றார். இதையே, "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத் 28:19) என்று மத்தேயுவும், ‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது" (லூக் 24:47) என்று லூக்காவும் பதிவு செய்கின்றனர். ஆக, இயேசுவின் நற்செய்தி அனைத்து மக்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பது இயேசுவின் வார்த்தைகளில் தெளிவாகத் தெரிகிறது.

நம்பிக்கைகொண்டோர்

இயேசு தான் வழங்கும் கட்டளைகளில் நம்பிக்கைகொண்டோர் நம்பிக்கையற்றோர் என மனிதர்களை இருவகையாகப் பிரிக்கின்றார். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர் என்றும், அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்றும் இயேசு கூறுகின்றார். ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரிலும் மாற்கு மட்டுமே, இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக இத்தகையதொரு கட்டளையை சீடர்களுக்கு வழங்குவதாகக் கூறுவதைப் பார்க்கின்றோம். இதற்கான காரணத்தை மாற்கு நற்செய்தியின் முன்னுரையை வாசிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது, எருசலேம் நகரம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் உரோமை நகரிலிருந்து மாற்கு இந்நற்செய்தியை எழுதியிருக்க வேண்டும். மேலும் பேதுரு, பவுல் போன்ற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்துவடிவம் கொடுக்கவேண்டிய தேவையை மாற்கு அறிந்திருக்க வேண்டும். எனவே, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலாக, தேறுதலாக, நம்பிக்கை தரக்கூடிய வகையில் இயேசுவின் நற்செய்தியை அவர் எழுதியிருக்க வேண்டும். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது' என்பதைத் தவிர மற்ற எல்லாமே புதிய ஏற்பாட்டில் அங்காங்கே கூறப்பட்டுள்ள கருத்துக்கள்தாம் (காண்க திப 2:4, 10:46, 5:12, 9:12, 1 கொரி 12:9, யாக் 5:14-15).

அத்துடன், ‘நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்’ என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு, திருத்தூதர் பணிகள் நூலில் கடந்த வாரம் எடுத்துக்காட்டப்பட்ட கொர்னேலியுவும் அவர்தம் குடும்பத்தாரும் மனமாற்றம் பெற்று திருமுழுக்குப் பெற்றதை நாம் இங்கு மீண்டும் நினைவு கூர்வோம். மேலும் பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில், பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று (காண்க. திப 3:8:5-8) என்று வாசிக்கின்றோம். அவ்வாறே, “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்று கூறி எத்தியோப்பிய அரச அலுவலர் பிலிபிடம் திருமுழுக்குப் பெறுவதையும் பார்க்கின்றோம் (26-38). எனவே, இயேசு கூறிய இந்த வார்த்தைகள் இன்றுவரை நிறைவேறி வருவதையும் காண்கின்றோம்.

நம்பிக்கையற்றோர்

இரண்டாவதாக, ‘நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்’ என்று கூறுகின்றார் இயேசு. நம்பிக்கையற்றோர் என்பது இயேசுவின் நற்செய்தியை ஏற்காதவர்கள், அல்லது ஏற்க மனமில்லாதவர்களைக் குறிப்பதாக நாம் பொருள்கொள்ளலாம். கடவுளின் அருள் வரம்பின்றி வாரி வழங்கப்படும்போது, அதனைப் பெற விருப்பமில்லாதவர்கள்தாம் இத்தகையோர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இவர்கள் வந்த வாய்ப்புகளை வசமாக்கிக் கொள்ள விரும்பாதவர்கள். உயிர்த்த ஆண்டவர் தனது சீடர்களுக்குத் தோன்றி அவர்களைத் தேற்றி அவர்களை நற்செய்தி அறிவிப்பு பணிக்கு அனுப்பும்போது, அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (காண்க. யோவா 20:22) என்று கூறுவதாக யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இங்கே நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும், அவ்வாறு நம்பிக்கைகொள்ளாதோர் பாவம் மன்னிக்கப்படாது என்று கூட இதனை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

நற்செய்தி அறிவிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவோம்

நற்செய்தி அறிவிப்பு என்பது நமது வார்த்தையால் மட்டுமல்ல நமது வாழ்வாலும் வெளிப்படவேண்டும் என்பது மிகவும் முக்கியம். நமது மறையுரையின் தொடக்கத்தில் அந்த ஆசிரியரின் வாழ்க்கை எப்படி அந்த மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக அமைந்தது என்பதைப் பார்த்தோம். ஆகவே, நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருக்குமே நற்செய்தியை அறிவிக்கவேண்டியது அவர்களின் தலையாயக் கடமை என்பதை உணர்வோம். அண்மையில், நம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்களை நாம் அறிவோம். அம்மக்கள் அனுபவித்த அத்தனை துயரங்களிலும் சிறிதளவு கூட மனம் தளராமல் உறுதியுடன் இறுதிவரை அவர்தம் இறைநம்பிக்கையில் நிலைத்து நின்று உயிர்த்த ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தனர். இதனைத்தான் வாழ்வாலும் வார்த்தையாலும் நற்செய்தியை அறிவிப்பது என்பதைப் புரிந்துகொள்வோம்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  24-ஆம் நாள் 'நற்செய்தியின் மகிழ்ச்சி' (The Joy of the Gospel) என்ற திருத்தூது மடலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதினார் என்பதை நாம் அறிவோம்.  இம்மடலில்  திருஅவை இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் பணியில் முழு ஆர்வத்தோடு ஈடுபட வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளார். இந்த மடலில் அன்பு (154 முறை), மகிழ்ச்சி (109 முறை), ஏழைகள் (91முறை), அமைதி (58 முறை), நீதி (37 முறை), பொது நன்மை (15 முறை) ஆகிய நற்செய்தி விழுமியங்களை எடுத்துக்காட்டியுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மே, 09- ஆம் தேதி, திருத்தந்தையின் மறைப்பரப்புப் பணி கழகத்தின் உறுப்பினர்கள் 200 பேரை சந்தித்தபோது, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிப்பது என்ற கடமை, திருஅவையின் அடிப்படை அழைப்பு என்றும், பிறரன்பு, நீதி, ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் உருவாகும் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துரைப்பது இன்றைய அவசியம் என்றும் திருத்தந்தை அவர்களிடம் வலியுறுத்தினார். மேலும் நமது திருஅவை, பேறு பெற்றோரின் திருஅவை என்ற நற்செய்தியை நாம் பறைசாற்றும்போது, வறியோர், ஒதுக்கப்பட்டோர், வன்முறைகளுக்கு உள்ளாவோர், நீதிக்காகப் போராடுவோர் என்ற பேறுபெற்றவர்களை அது கொண்டுள்ளது என்ற நற்செய்தியை நாம் பறைசாற்றவேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள தன்சானியா நாட்டில் Tanganyika என்ற மிகப்பெரிய ஒரு ஆறு இருக்கிறது. அந்த ஆற்றின் கரையோரத்தில் புகழ்பெற்ற ஒரு கோவில் உள்ளது. அந்தக் கோவிலின் வாசகமேடையில் ஜேம்ஸ் லாசன் (James lawson)  என்ற அருள்பணியாளரின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கி இருக்கிறது. ஜேம்ஸ் லாசன் என்பவர் கிழக்காசிய நாடுகளிலிருந்து நற்செய்திப்பணி செய்வதற்காக தன்சானியாவிற்கு வந்த மிகவும் துடிப்புள்ள ஒரு இளம் அருள்பணியாளர். இம்மக்களிடத்தில் நற்செய்தி அறிவிப்புப் பணி செய்ய வேண்டுமென்றால், முதலில் இவர்களுடைய மொழி, கலாச்சாரம் மற்றும், பண்பாட்டைக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நற்செய்திப் பணியை மிகவும் முனைப்போடு செயல்படமுடியும் என்று என்றெண்ணியவராக, அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு என அத்தனையும் கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்ட நேரம் போக மற்ற நேரங்களில், அவர் ஏழை, எளியவருக்கு  உதவுவது, நோயாளர்களைச் சந்திப்பது,, அவர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்வது என்று தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இப்படி நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவருடைய வாழ்வில் திடிரென்று புயலடித்தது. ஆம், அவரைக் கொடிய நோய் ஒன்று தாக்க, அவர் படுத்தபடுக்கையாகி இறந்துபோனார். இதை அறிந்த மக்கள் யாவரும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். தங்களுக்காகப் பணிசெய்ய வந்த இந்தக் குரு இப்படிச் சிறுவயதிலே இறந்துபோய்விட்டாரே என்று புலம்பினர்.

நமக்கும் கூட இந்தச் செய்தி சற்று வேதனையை அளிக்கலாம். ஆனால் ஜேம்ஸ் லாசன் என்ற அந்தக் குருவானவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறிப்புக்குக் கீழே இப்படியாக ஒரு வசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. “என்ன செய்தோம் என்பது முக்கியமல்ல, மாறாக் எதற்காக முனைப்போடு செயல்பட்டோம் என்பதுதான் முக்கியம்” (Not What I did, But I strove to do). இதுதான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆறுதல் தருவதாக இருக்கின்றது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் நாம் என்ன செய்தோம் என்பது முக்கியம் கிடையாது. எதை நோக்கி பயணித்தோம் என்பதுதான் முக்கியம். நற்செய்தி அறிவிப்புப் பணியில் நமக்குத் துன்பங்கள், சோதனைகள், சவால்கள் வரலாம். ஆனாலும் நற்செய்தியின் நாயகராம் இயேசு நம்மை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் இயேசுவின் நீட்சிகளாகத் தொடர்ந்து பயணிப்போம்.

இயேசுவின் சீடர்களாக வாழ்வதற்கு அழைப்புப் பெற்றுள்ள அருள்பணியாளர்களும், இருபால் துறவறத்தாரும், இயேசுவின் பெயராலும் அதிகாரத்தாலும் கற்பிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் புனிதப்படுத்துவதற்குமான மறைப்பணியைப் பெற்றுள்ளனர். அதேவேளையில், திருஅவையின் அங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவின் குருத்துவ, இறைவாக்குனர்க்குரிய, அரச அலுவல்களில் பங்குபெறுபவர்களாக, நற்செய்தி அறிவிப்பின் சீடர்களாக சீடத்திகளாக வாழ அழைப்புப் பெற்றுள்ளோம் என்பதை உணர்வோம். ஆகவே, இயேசுவின் வழியில், இயேசுவைப் போல நமது வார்த்தையாலும் வாழ்வாலும் நற்செய்தியை அறிவிக்கும் பணியாளார்களாக ஒளிர்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2024, 13:47