துறவுமடத்தில் மருத்துவமனை அமைய வியட்நாம் கிறித்தவர்கள் எதிர்ப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வியட்நாமின் தலைநகரான ஹனோயில் உள்ள மீட்பர் துறவு சபையினர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நகர அதிகாரிகள் கடனாகப் பெற்ற தங்களுடைய பழைய சொத்துக்களில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய தாய் ஹா பங்குத்தளத்தின் மீட்பர் சபையினர், ஏப்ரல் 26 அன்று வெளியிட்ட அறிக்கையொன்றில், இந்த மருத்துவமனை எங்கள் நிலத்தில் கட்டப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், காரணம், அரசு நடத்தும் டோங் டா பொது மருத்துவமனைக்கு அடுத்ததாக இந்தப் புதிய மருத்துவமனை அமைகிறது என்றும் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இந்த நிலத்தை எங்களிடமிருந்து பறிமுதல் செய்யவில்லையாதலால், நாங்கள் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமையாளர்கள் என்ற முறையில் இதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் அவ்வறிக்கையில் கூறியுள்ளதாக அச்சபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவமனை 1959 மற்றும் 1973-ஆம் ஆண்டுகளில் அரசு மீட்பர் சபையினரிடமிருந்து கடனாக வாங்கிய ஒரு துறவு மடமாகும் என்றும், பல ஆண்டுகளாக, உள்ளூர் கத்தோலிக்கர்கள் அதை திரும்பக் கோரியுள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பர் சபையினரின் கூற்றுப்படி, 1925-ஆம் ஆண்டில் வியட்நாமில் தங்கள் பணியைத் தொடங்கிய பிறகு, 1928-ஆம் ஆண்டில் 61,455 சதுர மீட்டர் நிலத்தை வாங்கி அதில் பல்வேறு வசதிகளை உருவாக்கினர் என்றும், வரும் 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர்கள் பணியைத் தொடங்கியதன் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்