கடுமையான உணவுப் பற்றாக்குறையில் 18 கோடியே 10 இலட்சம் குழந்தைகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடுமையான உணவுப் பற்றாக்குறையில் வாழும் 18 கோடியே 10 இலட்சம் குழந்தைகளில் 65 விழுக்காட்டினர் வெறும் 20 நாடுகளில் மட்டுமே வாழ்கின்றனர் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 6 கோடியே 40 இலட்சம் பேர் தெற்காசியாவிலும் 5 கோடியே 90 இலட்சம் பேர் சகாரா கீழமை ஆப்பிரிக்காவிலும் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது யுனிசெப் நிறுவனம்.
ஜூன் 6, இவ்வியாழனன்று, வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அந்நிறுவனம், இவர்களில் 50 விழுக்காடு வரை கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், இது உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் வடிவமாகும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, தற்போது போரின் பிடியில் உள்ள காசா பகுதியில் 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் கடுமையான உணவுப் பற்றாக்குறையில் வாழ்கின்றனர் என்றும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கும் குறைவாக உண்ணும் உணவுக் குழுக்களில் வாழ்கின்றனர் என்றும் கூறுகின்றது அவ்வறிக்கை.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell அவர்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையில் வாழும் குழந்தைகள் விளிம்பில் இருப்பவர்கள் என்றும், இந்நிலை இலட்சக்கணக்கான இளம் குழந்தைகளுக்கு உயிர்வாழ்வு, வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியில் மீளமுடியாத எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்