தந்தையை நோக்கி செபிக்கும் இயேசு தந்தையை நோக்கி செபிக்கும் இயேசு 

விடை தேடும் வினாக்கள் – ஒரு மணி நேரம் விழித்திருக்க வலுவில்லையா?

நமக்குத் தேவையானது என்னவென்பது இறைவனுக்குத் தெரிந்திருந்தும், நாம் கேட்கும்போதுதான் அங்கு பாசமும் உரிமையும் வெளிப்படுத்தப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். பின்பு, அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார் (மத்தேயு 26-40).

சீடர்கள் இயேசுவின் துயரின் ஆழத்தைப் புரியாமல் உண்ட களைப்பில் உறங்குகின்றார்கள். இவர்களின் மனத்திற்கும் உடலிற்கும் வேறுபாடு உள்ளதையும் இயேசு அறிந்திருக்கிறார். இவர்களால் ஒருமணி நேரம் கூட விழித்திருக்க முடியாமல் இருப்பது இயேசுவிற்கு சலனத்தை ஏற்படுத்துகிறது. சோதனைக்கு உட்படாதிருக்க ஒரே வழி செபிப்பது என்பதையும் இயேசு கற்றுத்தருகிறார்.

இதைப் பார்க்கும்போது, நாம் ஏன் ஜெபிக்க வேண்டும், கடவுளே பார்த்து செய்ய மாட்டாரா என பலவிதமான கேள்விகள் நம்மிடையே எழும்புகின்றன. ஒரு மிகச்சிறிய கதையுடன் இந்த கேள்விக்கான விடையைக் காண முயல்வோம்.

ஓர் உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் இருந்தார். அவருடைய மகள் இன்னொரு கலைஞரிடம் பியானோ கற்றார். வாழ்வின் முதுமைக் காலத்தில் அவரிடம் பேட்டி கண்ட ஒருவர், “ஏன் உங்கள் மகளுக்கு நீங்கள் பியானோ சொல்லித் தரவில்லை?” என்று கேட்டார். அதற்கு அவர் “அவள் என்னிடம் கேட்கவே இல்லை. கேட்பாள் கேட்பாள் என காத்திருந்தேன். அவள் கேட்கவேயில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.

நமக்குத் தேவையானது என்னவென்பது இறைவனுக்குத் தெரிந்திருந்தும், நாம் கேட்கும்போதுதான் அங்கு பாசமும் உரிமையும் வெளிப்படுத்தப்படுகிறது. தன் மகனின் தேவை என்னவென தந்தைக்குத் தெரியாதா? இயேசுவே சொன்னார், “மீன் கேட்கும் மகனுக்குப் பாம்பைக் கொடுக்கும் மண்ணகத் தந்தை எவருமில்லை”. மண்ணகத் தந்தையே அப்படியெனில் விண்ணகத் தந்தை எப்படிப்பட்டவர் ? என்று! ஆம், விண்ணகத் தந்தை நாம் கேட்பதை விட அதிகமாய்த் தருபவர். எந்த செபத்துக்கும் தந்தை பதிலளிக்காமல் இருப்பதில்லை. சிலவற்றுக்கு ஆம் என்கிறார். சிலவற்றுக்கு இல்லை என்கிறார். சிலவற்றுக்கு ‘கொஞ்சம் பொறு’ என்கிறார் அவ்வளவு தான்.

இயேசுவின் வாழ்வை கவனிப்போம்.  இறைமகனாக, பரிசுத்தராக இருந்த போதும் இயேசு ஜெபித்தார். பணிவாழ்வை ஆரம்பிக்கும் முன்பு  40 நாட்கள் நோன்பிருந்து ஜெபித்தார். அது சாதாரணமான ஒரு ஜெபமல்ல. மிக ஆழமான ஒன்று.  தன் உணவை மறந்து, வசதிகளை மறந்து பாலைவனத்துக்கு  சென்று நாற்பது நாட்கள்  ஊக்கமாக ஜெபித்தார்.  பிற்பட்ட நாட்களில்   அதிகாலை வேளைகளில் இருட்டோடே எழுந்து தனிமையான இடங்களுக்கு சென்று ஜெபித்தார்.  இலாசரை உயிர்ப்பிக்கும் போது, என் வேண்டுதலுக்கு செவி சாய்த்ததற்கு நன்றி என்று தந்தையைப் புகழ்கிறார்.  அப்பம் பிடும்போதெல்லாம் இறை புகழ் கூறி ஜெபித்தார். சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தார். கெத்சேமனே தோட்டத்தில், தந்தையே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்க கூடுமானால் நீங்கட்டும் என்று தன்னுடைய பொறுக்க முடியாத துன்ப வேளையில் தந்தையின் சித்தத்துக்காக வேண்டினார்.  சிலுவையில், தந்தையே இவர்களை மன்னியும் என்று தனக்கு தீங்கு இழைத்த மனுகுலத்திற்காக பரிந்துரை செய்தார்.  இறுதியில், எல்லாம் நிறைவேறிற்று,  தந்தையே என் ஆவியை உம் கையில் ஒப்பு கொடுக்கிறேன் என்று சொல்லி ஜெபித்து உலக வாழ்வை முடித்தார்.

ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? என்று இயேசு கேட்பதன் வழியாக, எனக்கென உங்களால் நேரம் ஒதுக்க முடியவில்லையா, அதாவது, இறைவனுக்கென ஒரு மணி நேரத்தைக்கூட உங்களால் ஒதுக்க முடியாதா என்று கேட்கிறார். ஆம். நமது ஜெப வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என  வாழ்ந்து காட்டியவர் இந்த கேள்வியை நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.

அவருடைய வாழ்வு முழவதுமே ஒரு செப வாழ்வாக இருந்தது என்பதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் இவ்வாறு சொல்கிறது: 'அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி. கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்' (5:7). இவ்வாறு, தாம் நிறைவுள்ளவராக்கியவர்களை தூயவராக்கினார் (எபி 10:14). தொடர்ந்து நமக்காகப் 'பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்' இயேசு (எபி 7:25).

கிறிஸ்துவின் வாழ்வு முழுவதும் செபத்தில் ஆழ்ந்திருந்தது என, நற்செய்திகளில் நாம் காண்கின்றோம். இயேசுவின் இந்த செப வாழ்வு, அவர் தம் இறைத்தந்தையோடும், அவரது ஒவ்வொரு செயலையும் வழிநடத்திய தூய ஆவியாரோடும் ஒன்றித்திருந்ததிலிருந்து பிறந்ததாக அமைந்திருந்தது. ஆம். இயேசுவின் அன்றாட வாழ்வு செபத்தோடு பின்னிப் பிணைந்ததாக அமைந்திருந்தது. உண்மையில், அவரது பணிகள் அவரது செப அருளிலிருந்து புறப்பட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தனிமையான இடங்களுக்கும், மலைப்பாங்கான இடத்திற்கும் சென்று இயேசு செபித்தார் என்பதை பல இடங்களில் பார்க்கிறோம் (மாற் 1:35. 6:46, லூக் 5:16. மத் 14:23). தனியாக மட்டுமல்ல, பிற யூதர்களோடு பொது வழிபாடுகளில் சேர்ந்தும் இயேசு செபித்தார். தம் சொந்த ஊரிலுள்ள தொழுகைக்கூடத்திற்கு ஓய்வுநாளில் சென்று செபிப்பது இயேசுவின் வழக்கமாக இருந்தது என்று லூக்கா சுட்டிக்காட்டுகிறார் (லூக் 4:16). அவருடைய இறை பணி வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும் ஜெபமாகத்தான் இருந்தது.

இன்று பல இறையியலார்கள் கடவுளைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் கடவுளிடம் பேசுவார் யாரும் இல்லை. கடவுளே எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருப்பது கடவுள் நம்பிக்கையாகாது. அது கடவுளை சோதிப்பதாகும். கடவுள் கொடுப்பதை மனிதர் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை மனிதர் கொடுக்க முடியாது. கடவுள் காலம் தாழ்த்தினார் என்றால் அது, நமக்கு கற்பிப்பதற்கும், நம்மை கண்டிப்பதற்கும், சீராக்குவதற்கும், நேர்மையாக வாழ பயிற்றுவிப்பதற்கும் (2திமோ 3:16) ஆகும்.

எவ்வளவு பெரிய புதுமைகளை செய்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தி இருந்தாலும் இயேசு தனிமையில் இறைவனோடு செபிப்பதை ஒரு போதும் மறந்ததே கிடையாது. அவரது அற்புதங்கள், புதுமைகளுக்கான வலிமையை அந்த செப நேரத்தில் பெற்றுக் கொள்கின்றார். தனது வாழ்விற்கான வலிமை செபம் என்பதை அறிந்து இருந்தார் இயேசு. இறைமகனுக்கே செபம் அவரது வாழ்விற்கு அவசியம் என்றால் நாம் எம்மாத்திரம் என்பதை உணரவேண்டும். நம் இறைவன் இயேசு நமக்காக செபிக்கும் இறைவன் என்பதையும் நாம் பார்க்கிறோம். ஜெபம் என்பது இறைவனோடு நாம் கொள்ளும் உன்னத உரையாடல்.

செபத்துக்கு என்ன வலிமை இருக்க முடியும்?  ஓர் உரையாடல் எதைத் தந்துவிட முடியும்? என நாம் யோசிக்கலாம். இயேசு தனது வாழ்வின் முக்கியமான கட்டங்களிலெல்லாம் செபித்தார்! நண்பன் நண்பனோடு அன்புடன் உரையாடுவது போல மனிதன் இறைவனோடு உரையாடுவதே செபம். இரு நண்பர்களும் ஒரிடத்தில் கூடுவார்கள். பேசுவார்கள். முடியாதபோது இமெயில் அல்லது வாட்ஸப்பில் எழுதி உரையாடுவார்கள். தொலைவில் உள்ள நண்பருக்குச் செய்தி அனுப்புவதுபோல் இன்று நாம் உணரவேண்டும். வேறுசில சமயங்களில் அவர் நம் அருகில் இருப்பதை உணர்ந்து நெருக்கமாக அவருடன் உரையாடமுடியும்.

செபத்திற்கு அடிப்படையானது நம்பிக்கை. “நீங்கள் இறைவனிடத்தில் வேண்டும்போது எவற்றைக் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும்” (மாற்கு 11:24) என்கிறார் இயேசு. செபத்தைப்போல பயன்தரும் சீரிய செயல் வேறெதுவும் இல்லை. செபம் ஆன்மாவின் உயிர்நாடி. செபம் வீணாகப் போவதில்லை என்பது உண்மை. நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? என்று கேட்கிறார்.

இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத, உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு கைம்பெண். அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இந்த உவமை, “மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்” எனும் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. எதற்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்? எனும் தெளிவு நமக்கு இருக்க வேண்டும் என்கிறது. அந்த விதவைப் பெண் யாரிடம் சென்றால் தனக்கு நீதி கிடைக்கும் என்பதை அறிந்து கதவைத் தட்டுகிறார். இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார். தவறான இடத்தில் தட்டிக் கொண்டிருப்பது தீர்வைத் தராது. குளத்தில் தொலைத்த பொற்காசை, நிலத்தில் தேடி எடுக்க முடியாது. எனவே நமது தேவைகளுக்காக நாம் இறைவனிடம் மட்டுமே செல்ல வேண்டும் எனும் அடிப்படை தெளிவைக் கொண்டிருக்க வேண்டும். செபம் கவலைகளைத் அழிக்க வேண்டும். கவலை செபங்களை அழிக்கக் கூடாது! அந்த கைம்பெண், தனது சோகத்தை நினைத்து வீட்டிலேயே அமந்து சோகத்தால் அழுது கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தீர்வு கிடைக்காமலேயே போயிருக்கும். நடுவர் நீதியற்றவர் ஆனாலும் இடைவிடாத வேண்டுதலால் மனம் மாறி நீதி செய்ய முடிவெடுக்கிறார். முடிவு கிடைக்கும் வரை போராடிச் செபிப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. நமது வாழ்க்கையின் ஒரு பாகமல்ல செபம், வாழ்க்கையே செபத்தின் பாகமாய் இருக்க வேண்டும். இவையெல்லாம் இந்த உவமை வழியாக இயேசு கற்றுத் தருவது.

இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித வாழ்வில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும்  செய்யவில்லை. சோதனைகளை அடக்கவும், வேதனைகளைக் கடக்கவும், இலட்சியத்தில் நடக்கவும் அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம், நமது பலவீனங்களை  இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும். செபமற்ற வாழ்க்கை, போர்க்கருவிகளின்றி போர்க்களம் புகும் வீரனைப் போன்றது, அழிவைத்தான் கொணரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2024, 16:18