இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை – இன்னும் புரியவில்லையா?

இயேசுவின் போதனைகள் சீடர்களுக்கு எழுச்சி ஊட்டுவனாக அமைந்தாலும் எரிச்சலையும் ஊட்டின. மரபுகள் எனும் புதருக்குள் மண்டிக்கிடந்தனர் சீடர்கள்.

இயேசு தன் சீடர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார் (மாற் 8,21)

இயேசுவின் போதனைகள் சீடர்களுக்கு எழுச்சி ஊட்டுவனாக அமைந்தாலும் எரிச்சலையும் ஊட்டின. அவரது செயல்களைப் புரிந்துகொள்ள முனைந்தாலும் அன்றுவரை அவர்களோடு பயணித்த மரபுகள் முடக்கின. மரபுகள் எனும் புதருக்குள் மண்டிக்கிடந்த சீடர்களால் இயேசுவையும் அவரது செயல்களையும் புரிய இயலவில்லை. பல நேரங்களில் பிறர் நம்மை இரு காரணங்களுக்காக மறுக்கவோ வெறுக்கவோ செய்யலாம். 1) அவர்களது மனம் திறந்ததற்காக. 2) அவர்களது மனம் உடைந்ததற்காக.

இயேசு வாழ்ந்த சமூகத்தில் உடலுக்கான உணவுப் பற்றாக்குறையைவிட உள்ளத்திற்கான உணர்வுப் பற்றாக்குறையே பெரிதாயிருந்தது. அது சீடர்களையும் ஆட்கொண்டிருந்தது. இன்று நாமும் பல்வேறு சடங்குகள், கலாச்சாரங்கள், மரபுகள், மூடப் பழக்கங்கள் என்பவற்றுள் ஊறிக் கிடக்கின்றோம். இதனால் உண்மையான இயேசு இன்னும் புரியப்படவில்லை என்பதே உண்மை. அவர் நம்மால் புரிந்துகொள்ளப்பட்டால் நாம் வாழும் இடமே இறையாட்சித் தளம். புரிதலுக்குத் தேவை அறிவல்ல, இதயம்.

இறைவா! உம்மைப் புரியப் புரிய புதியப் புதிய அனுபவங்கள் என்னுள் பிறப்பெடுக்கின்றன. அந்தப் புரிதலில் பின்வாங்காமல் வாழும் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2024, 12:20