தடம் தந்த தகைமை - பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
“பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்று கானனானியப்பெண்ணிடம் கூறினார் இயேசு(மத் 15,26).
விவிலியம் வாசிக்கும் எல்லாராலும் மிக அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் பகுதி இது. முதலில் நாம் கவனிக்கவேண்டியது எதுவெனில் நற்செய்தியை முதலாவதாக எழுதிய மாற்குவில் இச்சொல்லாடல் இல்லை. யூத மக்களுக்கென எழுதப்பட்ட மத்தேயுவில் மட்டுமே இப்பகுதி உளது. எனவே இது ஆசிரியரின் யூத இனவுணர்வின் வெளிப்பாடு என்பர் சிலர். அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதித்திட வழக்காடு சொல்தனை இயேசு பயன்படுத்தியிருக்கக் கூடும் என்பர் இன்னும் சிலர். இங்கு இது நம் விவாதப் பொருளல்ல. இஸ்ரயேல் மக்கள் காலாகாலமாக எகிப்தியர், கானானியர், பாபிலோனியர், அசீரியர், பாரசீகர், கிரேக்கர், உரோமையர் எனப் பல இனத்தவரால் அனுபவித்த கொடுமைகள் பலப்பல. எனவே, பிற இனத்தவர் மீதான ஓர் எதிர்ப்பு மனநிலையில் வாழ்ந்தனர். இந்தச் சூழலில், இயேசு ஓர் யூதராயிருந்தும் அவரை நம்பி வந்து, தன் மகளின் பேய் நீங்க மன்றாடிய கானானியப் பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை ஆச்சரியமானது. நன்மை நிகழ எதிரியையும் நண்பராக்குதலே நல்வழி என்பதைக் கற்பிக்கும் அப்பெண் நமக்கொரு மாதிரி.
இறைவா! எவரையும் ஒருபோதும் தாழ்வாகப் பாராமலும், என்னை எவர் தாழ்த்தினாலும் தயங்காமல் துணிந்துப் பணியாற்றும் பணிவு மனம் தாரும்
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்