தடம் தந்த தகைமை – தீர்ப்பு அளிக்காதீர்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள் (மத் 7,1) என்றார் இயேசு.
மனிதரின் மிக எளிதான வேலை 'பிறரைத் தீர்ப்பிடுதல்'. எதிலும் பிறரைக் குறைகூறிப் பழிசுமத்த முயல்வது மனித இயல்பாகிவிட்டது. இது மனித இனம் பெற்ற பெரும் பலவீனம். இங்கே இயேசு தவிர்க்கக் கூறும் தீர்ப்பு நீதிக்கு எதிரானதல்ல. ஏழைகள் அநீதமாகப் பழிசுமத்தப்பட்டு, தண்டனைக்குள்ளாவதைத் தடுக்கும் கடமை ஒருபுறம், ஏழ்மையையும் எளிமையையும் கருத்தில்கொண்டு 'கேட்க யாருமில்லை' என்ற கோரமன
நிலையில் அகோரமாகப் பழி சுமத்தும் பண்பாடு மறுபுறம். எதுவாக இருந்தாலும் மன்னிக்கக் கற்பித்தவர் தீர்ப்பிடக் கற்பிக்கவில்லை.
யார் தீர்ப்பிடுவர்? 1. தன் ஆளுமை அற்றவர், 2. பொறாமை மிக்கவர், 3. பிறர் வளர்ச்சி ஏற்காதவர், 4. நீதிச் சார்பு அற்றவர், 5. பிறரில் இறைமுகம் பாராதவர், 6. சுய ஆய்வு செய்யாதவர், 7. தன் குறை மறைப்பவர் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எதுவாயினும் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' எனும் குறளை மனதில் பதித்து வைத்திருப்பது நமக்கு நல்லது.
அநியாயத் தீர்ப்புகள் அகம்பாவத் தீப்பந்தங்கள். ஏந்துபவரின் கைகளையும் தீய்த்து விடும்.
இறைவா! தீர்ப்பிடல் என்னும் தீவினையை நான் ஒருபோதும் செய்யாதிருக்க அருள் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்