தடம் தந்த தகைமை – தந்தையே, இவர்களை மன்னியும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார் இயேசு (லூக்கா‚ 23:34).
மன்னிப்பு - இயேசுவின் மனம் சுரந்த மகாநதி. மன்னித்தலால்தான் அவர் சிலுவையில் கொலையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மன்னிப்பு மனித வேலையன்று எனப் பார்க்கப்பட்ட சமூகத்தில் மன்னிப்பவரே மனிதர் என்ற மாற்றுச் சிந்தனையை மனங்களுள் புகுத்தியவர். உடல், உளக் காயங்களோடு நாடி வந்தோரை மேலோட்டமாக நலப்படுத்தாமல், மனதார்ந்த மன்னித்தலால் ஆற்றுப்படுத்தி அனுப்பியவர். மன்னிப்பதாலே இறைமன்னிப்பைப் பெற முடியும் என மனம் சொல்லியவர்.
தன் சமூகத்தைச் சமயமும், சட்டங்களும், மரபுகளும் குருடாக்கி வைத்திருந்ததை இயேசு அறிந்திருந்தார்; அவற்றின் கைப்பாவைகளாகி அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த ஆளும் வர்க்கமும், அதன் அடிவருடிகளான அத்தனை பேரும் மன்னிப்புக்குரியவர்கள் என
மனமுணர்ந்தார். அவர்களை மழுங்கடித்த அறியாமையே தன் சிலுவைச் சாவுக்கான காரணம் எனக் கண்டறிந்தார். எனவேதான் தன்னைக் கொன்றவர்களை எந்த நிபந்தனையுமின்றி மன்னிக்கத் துணிந்தார். இது இயேசுவின் வீரம் நிறைந்த புரட்சிச் செயல். மரண வாசலில் நின்று மண்ணுக்குச் சொன்ன மகாபாடம். மன்னிப்பு என்பது மன ஆற்றலின் வெளிப்பாடு.
இறைவா! வரம்பில்லாமல் மன்னிக்கும் மனவலிமை தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்