தடம் தந்த தகைமை – நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர் என மலைப்பொழிவில் உரைத்தார் இயேசு.
நீதிதனை இரு வகைப்படுத்தலாம். 1. அகநீதி: ஒருவர் தன் தனி வாழ்வில் நேர்மையாக வாழ்தல். நீதி மீதான தாகத்தோடு நன்னெறிகளில் நிலைத்தல். 2. புறநீதி: சமூகத்துள் நியாயம் நிலைபெற வேண்டுமென்ற தாகமும், சமூக அநீதிக்கெதிராகப் போர்க்குரல் எழுப்பும் வேகமும் கொண்டு செயலாற்றுதல். தனிவாழ்வில் நீதியுணர்வில் வாழ்வதோடு சமூக நீதிக்கான வேட்கை ஒவ்வொருவருக்குள்ளும் குடிவாழ வேண்டும் என்பதே இயேசுவின் வேட்கை. அதில் எழும் குமுறல் நிறைவையே தரும்.
பேராசிரியர்களுக்கான கலந்தாய்வரங்கத்தில் பேருரை ஆற்றியவரிடம் நெறியாளர் ஒரு வினா தொடுத்தார். “உலகில் ஏழ்மை, நோய், அநீதி, விபத்துக்கள், பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமைப் பறிப்புகள், சட்டமீறல்கள் என எல்லாம் தாராளமாக நடைபெறுகின்றன. இவற்றைக் கடவுள் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்?” பேருரையாளர் நெறியாளரிடம், “நீங்களே கடவுளிடம் கேட்கலாமே!” என மறுவினா தொடுக்க, “நான்
கேட்க அஞ்சுகிறேன், ஏனெனில் அதே கேள்வியை அவர் என்னிடம் திருப்பிக் கேட்டால்...?” எனத் தன் மனம் தொட்டுப் பதில் சொன்னார்.
நீதி - அநீதி இவைகளுக்கான போராட்டத்தில் நம் மனச்சான்றே நீதிபதி.
இறைவா! நீதிக்கான வேட்கை நீர்த் தாகம் போல. நீதியை நீராய் அருந்தி அதனை நிலைநாட்டும் வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்