தடம் தந்த தகைமை - கடவுள் தரும் உணவு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது, என்றார் இயேசு.
உண்பவற்றையே உணவாகப் பார்த்தது இந்த உலகம். ஆனால் வாழ்வையே உணவாக்கித் தந்தவர் இயேசு. தன்னை ஒளியாய், வழியாய், உயிராய், உயிர்ப்பாய், செடியாய், செயல் வடிவாய், நண்பராய், ஆயராய், வாயிலாய் உருவகப்படுத்திய இயேசு உணவாக வெளிப்படுத்தும் விதம் வெகு ஆச்சரியமே. இயேசு என்னும் உணவு மண்ணில் விளையும்
பயிர்கள் போலன்று. அது உயிரில், உணர்வில், உள்ளத்தில், உதிரத்தில், உழைப்பில் கலந்து வாழ்விக்க வல்லது.
இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் பிறரின் நல்வாழ்வுக்கு உணவாக வேண்டும். அடிப்படைக் கல்வி தேடும் மழலையர்க்கு, அரசின் நலத்திட்டங்கள் அறியாத நலிந்தவர்க்கு, இலக்கை இழந்த இளைஞர்களுக்கு, பட்டங்கள் பெற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு, கடினமாக உழைத்தும் உரிய ஊதியம் பெறாத உழைப்பாளர்க்கு, தனிமையில் திண்டாடும் படுக்கை நோயாளர்க்கு, ஆதரவேதுமற்ற கைம்பெண்களுக்கு, மாண்பு மறுக்கப்படும் மாற்றுத் திறனாளர்களுக்கு, சுயநலத்தால் சூறையாடப்பட்ட இயற்கை அன்னைக்கு ஆதரவுக் குரலாகி செயல்படுகையில் அவர்களுக்கு நாமே உணவு.
இவ்வுலகச் செல்வங்களால் தன்னை நிறைவுபடுத்தும் இதயத்திற்குள் இறைவனுக்கு இடமில்லை.
இறைவா! நான் உம்மிடமிருந்து பெற்றது, கற்றது என முற்றும் பிறர்க்காகவே. அதைப் பதுக்காமல் செயலாக்கும் ஊக்கம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்