இலங்கையில் பெருவெள்ளம் இலங்கையில் பெருவெள்ளம்  (ANSA)

ஆறு மாதங்களில் காலநிலை மாற்ற நிகழ்வுகளால் 4,100 கோடி இழப்பு

கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு : கால நிலை மாற்றத்தின் விளைவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டிய பணக்கார நாடுகளின் கடமை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த நவம்பர் மாதம் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்த COP28 என்ற அனைத்துலகக் கூட்டத்திற்கு பின்னான ஆறு மாதங்களில் பெரும் காலநிலை மாற்றம் தொடர்புடைய நிகழ்வுகளால் இவ்வுலகிற்கு 4,100 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக Christian Aid என்ற பிறரன்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் மாதம் இடம்பெற்ற  காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கிற்குப் பின்னான 6 மாதங்களின் நிலை குறித்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ள இந்த கிறிஸ்தவ அமைப்பு, புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிச் செல்லுதல், இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும் ஏழை நாடுகளுக்கு உதவுதல் போன்றவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படவில்லை என தன் கவலையை வெளியிட்டுள்ளது.

பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியிட்டு, உலகின் கால நிலை மாற்றத்திற்கு பெரும்பங்காற்றும் பணக்கார நாடுகள், கால நிலை மாற்றத்தின் விளைவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டிய கடமையை உணரவேண்டும் என்ற அழைப்பையும் இந்த கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு விடுத்துள்ளது.

ஜெர்மனியின் Bonn நகரில் தற்போது இடம்பெற்றுவரும் கால நிலை மாற்றம் குறித்த கருத்தரங்கையொட்டி இந்த அறிக்கையை விடுத்துள்ள பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆயர் பேரவையின் இந்த Christian Aid என்ற பிறரன்பு அமைப்பு, காலநிலை மாற்றத்தால் ஆறு மாதங்களில் மட்டும் 4100 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது, குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள ஒன்று எனவும் தெரிவிக்கிறது.

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 169 பேர் இறந்ததுடன் 700 கோடி டாலர் பொருளிழப்பு ஏற்பட்டது,  தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால் 214 பேர் உயிரிழந்தது, மற்றும் அரபு ஐக்கிய அமீரகத்தில் மட்டுமே 85 கோடி டாலர் பொருளிழப்பு ஏற்பட்டது, மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அனல் காற்றால் மியான்மாரில் மட்டும் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, கிழக்கு ஆப்ரிக்காவின் வெள்ளப்பெருக்கால் 559 பேர் கொல்லப்பட்டது போன்ற அண்மை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது இந்த கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு(ICN).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2024, 14:11