ஒடிசா மாநில கிறித்தவர்களால் உற்றுநோக்கப்படும் புதிய அரசு
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் என்பது அங்கு வாழும் கிறித்தவ மக்களால் மிகக் கூர்ந்து கவனிக்கக்கூடியதாக மாறியுள்ளது என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
2008-ஆம் ஆண்டு கந்தமால் கலவரத்தின் சுவடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பது கிறித்தவ மக்களுக்குக் கவலையளிக்கக்கூடிதாக உள்ளது என்று கூறிய கட்டாக்-புவனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் அஜய் சிங், புதிய அரசை, ஓர் அரசியல் கட்சி அல்லது அதனுடன் இணைந்துள்ள தீவிர வலதுசாரி குழுக்களின் வரலாறைக் கொண்டு மதிப்பிட முடியாது என்பதால், பொறுத்திருந்து பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 272 இடங்கள் கிடைக்காமல் போனதற்கு காரணம், அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்ட வெறுப்புணர்வுப் பேச்சு என்றும், அதிலிருந்து ஒடிசாவின் புதிய அரசு பாடம் கற்றுக்கொண்டு அனைவரையும் உண்மையான அரசியல் பண்புடன் நடத்தும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் அஜய் சிங்.
பெயர் வெளியிட விரும்பாத கிறித்தவத் தலைவர் ஒருவர் UCAN செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் கிறித்தவர்கள் தங்கள் பணிகளை எச்சரிக்கையுடனும் கவனமுடனும் தொடர வேண்டும் என்றும், இதற்கு முன்பிருந்த அரசும், பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இருந்தபோது, அக்கட்சியின் வலதுசாரி இந்து அமைப்புகளுக்கு, கிறித்தவர்களும் அவர்கள் செய்கின்ற பணிகளும்தான் இலக்காக அமைந்திருந்தன என்றும், நமக்கு என்ன நிகழக் காத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இம்மாநிலத்தின் வாழும் 4 கோடியே 20 இலட்சம் மக்களில் 2.77 விழுக்காடு கிறித்தவர்கள், மேலும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இந்துக்கள் மற்றும் பழங்குடியினர் ஆவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்