தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும் இந்திய கிறிஸ்தவர்கள்
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எங்கள் கோரிக்கைகளும், வேதனைகளும் கேட்கப்படாமலே இருப்பதால் நாங்கள் வீதிகளுக்கு வந்து போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றும், ஒரு சில மதவாதக் குழுக்கள் எங்கள் மீது மதமாற்றம் செய்ததாகப் பொய்யாக குற்றம் சாட்டி தண்டித்தனர் என்றும், ஜூன் 26 அன்று UCA செய்தி நிறுவனத்திடம் தன் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார் சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் அருண் பன்னாலால்.
கிறிஸ்தவ மக்கள் மீது தொடர்ந்து நடைபெற்றுவரும் தாக்குதல்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிடச் சொல்லி வற்புறுத்தப்படுவதைக் கண்டித்து, சத்தீஸ்கரில் உள்ள பழங்குடியின கிறிஸ்தவர்கள் ஜூன் 24 அன்று அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மோதிபாக் நகர வீதிகளில் பழங்குடியின மக்கள், "கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்", "எங்களுக்கு நீதி வேண்டும்", "மதத்தின் பெயரால் இழிவுபடுத்தப்படுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்தினர்.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரின் முன்னிலையில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், ஜக்தல்பூர் நகரில் இம்மாதம் நான்கு கிறிஸ்தவ குடும்பங்கள் தீவிர வலதுசாரி குழுக்களின் வன்முறையால் தாக்கப்பட்டதாகவும் கூறிய பழங்குடி கிறிஸ்தவ தலைவர் ஒருவர், கிறிஸ்தவ நம்பிக்கையைத் துறக்கச் சொல்லி தாங்கள் வற்புறுத்தப்பட்டதாகவும், தாக்குதலின் போது இருவர் சுயநினைவை இழந்ததாகவும், மேலும், மூவர் கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கத்தோலிக்க ஆர்வலரான முக்தி பிரகாஷ் டிர்கி கூறுகையில், 2022 டிசம்பர் முதல் பழங்குடியின கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு எதிராக தீவிர வன்முறைகள் கையாளப்பட்டு வருவதாகவும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாட்டில் கிறிஸ்தவ துன்புறுத்தலைப் பதிவு செய்யும் கண்காணிப்பு அமைப்பான கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு (UCF) கடந்த வாரத்தில் மட்டும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக குறைந்தது 23 வன்முறை வழக்குகளை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்